நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 13 : Water
செயல்பாடு 1
சிறிதளவு நீரற்ற தாமிர (II) சல்பேட் தூளை கண்ணாடித்தட்டில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது சிறிதாக நீரைச் சேர்க்கவும். தூளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதைக் காண்கிறாயா? நிறமற்ற தூள் நீல நிறமாக மாறுவதை நீ காணலாம். இது நீரினைக் கண்டறிவதற்கான சோதனை ஆகும்.
செயல்பாடு 2
ஒரு குடுவையினை நீரால் நிரப்பவும்.கத்தியால் சோடியத்தை சிறு துண்டுகளாக வெட்டி நீரினுள் போடவும். சோடியம் நீருடன் வினைபுரிந்து நீரின் மேற்பரப்பு முழுவதும் நகர்கிறது. மேலும் நீரின் மேற்பரப்பின் மீது ஒரு சுடர் எரிவதையும் நாம் காணலாம்.
செயல்பாடு 3
சிறிதளவு குழாய் நீரினை ஒரு சுத்தமான கண்ணாடித் தட்டில் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு அதனை ஒரு குடுவையின் மீது வைத்து வெப்பப்படுத்தவும். கண்ணாடித் தட்டிலிருக்கும் நீர் முழுவதும் ஆவியானவுடன் அதனை அடுப்பிலிருந்து அகற்றி குளிர வைக்கவும். கண்ணாடித் தட்டில் நீங்கள் காண்பது என்ன?
செயல்பாடு 4
ஒரு குடுவையில் பாதியளவு நீரை நிரப்பி, அதனைச்சூடாக்கவும். நீர் அதன் கொதிநிலையை அடைவதற்கு முன்பே குடுவையின் ஓரங்களில் சிறிய குமிழ்கள் தோன்றுவதை நீங்கள் காணலாம். இந்தக் குமிழ்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் வாயு ஆகும்.
செயல்பாடு 5
ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும். ஒரு தொட்டிச்செடிக்கு குழாய் நீரையும், மற்றொரு தொட்டிச்செடிக்கு கடல்நீரையும் ஊற்றவும். சில நாட்கள் கழித்து தாவரங்களின் வளர்ச்சியைக் கவனிக்கவும்.
செயல்பாடு 6
பலவிதமான நீர் ஆதாரங்களிலிருந்து நீரைச் (ஆறு, ஏரி, குளம், கிணறு) சேகரிக்கவும். வெவ்வேறு சோதனைக் குழாய்களில் ஒரே அளவிலான நீரை எடுத்துக் கொள்ளவும். அளவுகோல் கொண்டு நீர்மட்டத்தைக் குறித்துக்கொள்ளவும். ஒரு சொட்டு திரவ சோப்பை அனைத்து சோதனைக் குழாய்களிலும் சேர்க்கவும்.
ஐந்து முறை சோதனைக்குழாயினை நன்கு குலுக்கி, ஒவ்வொரு குழாயிலும் நுரை தோன்றும் உயரத்தைக் குறித்துக்கொள்ளவும். இதனை அட்டவணையில் பதிவு செய்யவும். இவற்றில் எது கடினநீர்? எது மென்னீர்? இதற்கான காரணத்தை உங்களால் கூறமுடியுமா?
செயல்பாடு 7
ஒரு ஷாம்பு, ஷவர் ஜெல் அல்லது மைக்ரோ பீட்கள் இருக்கலாம் என்று நீங்கள் கருதும் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு குவளை நீரில் கலந்து நன்கு கலக்கவும். இதனை ஒரு கருப்புத் துணியில் ஊற்றி இதிலுள்ள மைக்ரோபீட்களை வடிகட்டவும்.
ஹென்றி கேவென்டிஷ் ஒரு ஆங்கில தத்துவியலாளர், அறிவியலாளர், வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தார். ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என் இவர் அழைத்தார். உலோகங்களை செறிவு மிகுந்த காரங்களுடன் சேர்த்து கார்பன் டைஆக்சைடையும் இவர் உருவாக்கினார்.
பனிக்கட்டியின் மேல் சறுக்கும் ஸ்கேட்டர்கள் அதன் மீது அழுத்தத்தைச் செலுத்துகிறார்கள். அழுத்தம் பனிக்கட்டியின் உறைநிலையைக் குறைக்கிறது. இதன் விளைவாக ஸ்கேட்டின் அடியில் பனிக்கட்டி உருகி ஸ்கேட்டர்களால் எளிதில் பனிக்கட்டியின் முடிகிறது. ஸ்கேட்டர்கள் மீது சுருக்க முன்னோக்கி நகரும்போது அழுத்தம் குறைந்து நீர் மீண்டும் பனிகட்டியாக மாறுகிறது.
மீன் மற்றும் இறைச்சியை பனிகட்டியினுள் வைப்பதன் மூலம் கெட்டுவிடாமல் அவற்றைப் பராமரிக்க முடியும். பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் அதிகமாக இருப்பதால், அது உருகும்போது மீன்களிலிருந்து அதிக அளவு வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் உணவினை குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடிகிறது.
சாக்கடலில் (Dead Sea) நீரின் இந்த ஏரி உப்புத்தன்மை மிக அதிகம். இது உப்பு நிறைந்த ஒரு ஏரியாகும். கடலுடன் இணைந்திருக்காமல் தனித்துக் காணப்படுகிறது இது நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் இதிலுள்ள நீர் ஆவியாகி உப்புத்தன்மையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. தற்போது அதன் உப்புத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அதில் வாழ முடியாது. எனவேதான், இது சாக்கடல் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய நீர் மாசுபாட்டு மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல் போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 135 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.
ஒவ்வொரு நன்னீர் மூலத்திலும் நுண்ணிய நெகிழித் துண்டுகள் காணப்படுகிறறன். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியின் உறைந்த நீர்ப் பரப்பிலிருந்து 5,000 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்கடல் தளத்தின் அடிப்பகுதி வரை அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் மற்றும் குழாய் நெகிழி நீரில் நுண்ணிய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.