நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் தயாரித்தல் | 8th Science : Chapter 13 : Water
நீர்
தயாரித்தல்
1781ஆம் ஆண்டில் ஹென்றி கேவென்டிஷ், என்ற ஆங்கில அறிவியல் அறிகுரால்
நீர் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. செயல்திறன் மிக்க உலோகங்களை கந்தக அமிலத்துடன்
சேர்க்கும்போது ஹைட்ரஜன் வாயு வெளியேறுவதை அவர் கண்டறிந்தார். அவ்வாறு வெளியேறும் ஹைட்ரஜன்
வாயு எளிதில் எரியும் தன்மை கொண்டது, அதனை எரிக்கும்போது நிறமற்ற விளைபொருளான நீரை
அது உருவாக்குகிறது.
உலோக ஆக்சைடை ஹைட்ரஜன் மூலம் ஒடுக்குதல், காற்றில் ஹைட்ரஜனை
எரித்தல், மற்றும் காற்றில் ஹைட்ரோகார்பன்களை எரித்தல் மூலமும் நீர் உருவாகிறது. தாவரங்கள்
மற்றம் விலங்குகளின் சுவாசம் மூலமாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது.
ஹென்றி
கேவென்டிஷ் ஒரு ஆங்கில தத்துவியலாளர், அறிவியலாளர், வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர்
ஆவார். இவர் ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தார். ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என்
இவர் அழைத்தார். உலோகங்களை செறிவு மிகுந்த காரங்களுடன் சேர்த்து கார்பன் டைஆக்சைடையும்
இவர் உருவாக்கினார்.
ஆய்வகங்களில்
நீர் தயாரித்தல்
ஆய்வகங்களில் நீரினைத் தயாரிக்கத் தேவைப்படும் உபகரணங்கள் படத்தில்
உள்ளவாறு (படம் 13.2) பொருத்தப்பட்டிருக்கும் இம்முறையில் தூய ஹைட்ரஜன் வாயு நீரற்ற
கால்சியம் குளோரைடின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் ஹைட்ரஜன் வாயுவிலுள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.
வெளிவரும் உலர்ந்த ஹைட்ரஜன் வாயு போதுமான அளவு காற்றுடன் சேர்த்து எரிக்கப்படுகிறது.
அது குளிரூட்டப்பட்ட குடுவையின் மீது படும்போது நீர்த்துளிகள் உருவாகின்றன. இம்முறையின்
மூலம் வீழ்படிவற்ற தூய வாலை வடிநீர் பெறப்படுகிறது.