பாடச்சுருக்கம்
● சூடான பொருளிலிருந்து, குளிர்ச்சியான பொருளுக்கு பாயும் ஒருவகை பரிமாற்ற ஆற்றலே வெப்பமாகும். இருப்பினும் வெப்பம் சேமித்து வைக்கப்படும் ஓர் ஆற்றல் அளவல்ல.
● ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு ஆற்றலை மாற்றக்கூடிய செயலே வேலை எனப்படும்.
● பொருளின் வெப்ப அளவை (Hotness) அளவிடுவது வெப்பநிலையாகும். வெப்பநிலையானது வெப்பம் பாயும் திசையைத் தீர்மானிக்கிறது.
● நல்லியல்பு வாயு விதி PV = NkT அல்லது PV = μRT ஆகும். வெப்ப இயக்கச் சமநிலைக்கு மட்டுமே நல்லியல்பு வாயு விதி பொருந்தும். வெப்ப இயக்கச் சமநிலையற்ற நிகழ்வுகளுக்கு இவ்விதி பொருந்தாது.
● பொருளொன்றின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவே வெப்ப ஏற்புத்திறன் எனப்படும். இது S குறிப்பிடப்படுகிறது.
● 1 மோல் அளவுள்ள பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவே மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் ஆகும். இது C எனக் குறிப்பிடப்படுகிறது.
● வெப்பநிலை மாறுபாட்டினால் பொருளின் வடிவம், பரப்பு மற்றும் பருமன் போன்றவற்றால் ஏற்படும் மாற்றம் வெப்ப விரிவு எனப்படும்
● தண்ணீர் முரண்பட்ட விரிவுப்பண்பைப் பெற்றுள்ளது.
● பொருளின் நிலைமாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலின் அளவு அப்பொருளின் மறைவெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.
● வெப்ப இயக்க அமைப்பு ஒன்றினை வெப்பப்படுத்தும் போது, அவ்வமைப்பு ஏற்றுக்கொண்ட அல்லது அவ்வமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட வெப்பத்தின் அளவை அளவிடும் முறைக்கு , வெப்ப அளவீட்டியல் என்று பெயர்.
● வெப்பமாற்றமானது வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கதிர்வீச்சு ஆகிய மூன்று முறைகளில் நடைபெறுகிறது.
● ஸ்டெஃபான் - போல்ட்ஸ்மென் விதி : E = σT4 மற்றும் வியன் விதி λmax T = b
● வெப்ப இயக்கச் சமநிலைகள்: வெப்பச்சமநிலை, இயந்திரவியல் சமநிலை மற்றும் வேதிச்சமநிலை.
● வெப்ப இயக்க மாறிகள்: அழுத்தம், வெப்பநிலை, பருமன், அக ஆற்றல் மற்றும் என்ட்ரோபி.
● வெப்ப இயக்கவியலின் சுழிவிதி: இரண்டு வெவ்வேறு பொருள்கள் தனித்தனியே மூன்றாவது பொருளுடன் வெப்பச் சமநிலையில் இருந்தால், அவ்விரண்டு பொருள்களும் தனக்குள்ளேயே வெப்பச்சமநிலையில் உள்ளது எனக் கருதலாம். அவ்விரண்டு அமைப்புகளின் வெப்பநிலை சமமாகும்.
● வெப்ப இயக்க அமைப்பிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் இவற்றின் கூடுதலே அக ஆற்றலாகும்.
● ஜுல் இயந்திர ஆற்றலை, வெப்ப இயக்க அமைப்பின் அக ஆற்றலாக மாற்றிக்காட்டினார்.
● ஆற்றல் மாறாக் கூற்றின் ஒரு வடிவமே வெப்ப இயக்கவியலின் முதல் விதியாகும். இவ்விதி வெப்ப இயக்க அமைப்பின் வெப்பத்தை உள்ளடக்கியுள்ளது.
● மீமெது நிகழ்வு என்பது வரையறுக்க இயலாத அளவு மெதுவாக நடைபெறும் ஓர் நிகழ்வாகும். இந்நிகழ்வில் அமைப்பு எப்போதும் சூழலுடன் சமநிலையில் இருக்கும்.
● அமைப்பின் பருமன் மாறும் போது அமைப்பினால் செய்யப்பட்ட வேலை W = ∫P dV
● PV வரைபடத்தில் வளை கோட்டிற்குக் கீழே உள்ள பரப்பு, அமைப்பினால் செய்யப்பட்ட வேலை அல்லது அமைப்பின் மீது செய்யப்பட்ட வேலைக்குச் சமமாகும்.
● பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் எப்போதும் அழுத்தம் மாறாத் தன் வெப்ப ஏற்புத்திறனை விடக் குறைவாக இருக்கும்.
● வெப்பநிலை மாறா நிகழ்வு: T = மாறிலி
● அழுத்தம் மாறா நிகழ்வு: P = மாறிலி
● பருமன் மாறா நிகழ்வு : V = மாறிலி
● வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வு: Q = 0.
● அழுத்தம் மாறா நிகழ்வில் செய்யப்பட்ட வேலை பெருமம் மற்றும் வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வில் செய்யப்பட்ட வேலை சிறுமமாகும்.
● சுழற்சி நிகழ்வு ஒன்றின் அக ஆற்றல் மாறுபாடு சுழியாகும்.
● சுழற்சி நிகழ்வில் செய்யப்பட்ட தொகுபயன் வேலை, PV வரைப்படத்தினுள் மூடப்பட்ட வளை கோட்டின் பரப்புக்குச் சமமாகும்.
● மீள் நிகழ்வு ஓர் இலட்சிய செயல்முறையாகும். நடைமுறையில் சாத்தியமில்லை
● இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் மீளா நிகழ்வுகளாகும்.
● ஒரு வெப்ப இயந்திரம் வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தைப்பெற்று வேலை செய்து, குறைந்த அளவு வெப்ப ஆற்றலை வெப்ப ஏற்பிக்குக் கொடுக்கிறது.
● கார்னோ இயந்திரம் ஓர் மீள் நிகழ்வு இயந்திரமாகும் இதன் பயனுறு திறன் மிக அதிகம். வேறு எந்த நடைமுறை இயந்திரங்களுக்கும் கார்னோ இயந்திரத்தைப் போன்ற பயனுறுதிறன் இல்லை.
● குளிர்பதனப்பெட்டி என்பது எதிர்த்திசையில் செயல்படும் ஒரு கார்னோ இயந்திரமாகும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் குளிர்பதனப்பெட்டியின் செயல்திறன் குணகம் (COP), இலட்சியக் குளிர்பதன பெட்டியின் செயல்திறன் குணகத்தைவிடக் குறைவாகும்.