அரசியல் அறிவியல் : உள்ளாட்சி அரசாங்கங்கள் - 73-வது அரசமைப்பு சட்ட திருத்தம் - அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
73-வது அரசமைப்பு சட்ட திருத்தம் - அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள்
மக்கள்தொகை இருபது லட்சத்துக்கும் மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தைக் கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என 73-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அரசமைப்பு சட்ட பிரிவு 243(B) கூறுகிறது. மாவட்டம் என்பது சாதாரணமாக வழக்கில் உள்ள ஒரு மாநிலத்தின் மாவட்டத்தை குறித்தாலும், கிராம மற்றும் ஒன்றிய பஞ்சாயத்துகளின் எல்லை பற்றி இந்த சட்ட திருத்தம் குறிப்பிடவில்லை. ஒரு கிராம பஞ்சாயத்தின் எல்லையை மாநில ஆளுநர் ஒரு அறிக்கை மூலமாக தீர்மானிக்கலாம். அது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதைப் போலவே இடைநிலையில் உள்ள பஞ்சாயத்தான ஒன்றிய பஞ்சாயத்தையும் ஆளுநர் தன் அறிக்கை மூலம் தீர்மானிக்கிறார். இது மாநில அரசுக்கு பஞ்சாயத்துகளை அமைப்பதிலும், பஞ்சாயத்து ஒன்றியங்களை அமைப்பதிலும் முழு சுதந்திரத்தை வழங்குகிறது.
அரசமைப்பில் ஒரு புதிய அட்டவணையாக 11-வது அட்டவணை சேர்க்கப்பட்டது. அது கட்டாய பணிகள் மற்றும் விருப்ப பணிகளை பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தருகிறது.
(அ) கிராம அளவில் கிராம பஞ்சாயத்து உள்ளது.
(ஆ) மாவட்ட அளவில் மாவட்ட பஞ்சாயத்து உள்ளது.
(இ) 20 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்களில் கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இடைப்பட்ட அளவில் இடைநிலை பஞ்சாயத்துக்கள் உள்ளன.
ஒரு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து இடங்களும், தொகுதி மக்களின் நேரிடையான தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஒரு கிராமப் பஞ்சாயத்தின் வாக்காளர்களைக் கொண்ட அமைப்பு "கிராம சபை" என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராமப் பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும், பஞ்சாயத்துத் தலைவர் அம்மாநில சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த சட்டப்படியே கிராம பஞ்சாயத்தின் தலைவருக்கும், ஒன்றிய பஞ்சாயத்தின் தலைவருக்கும் மாவட்ட பஞ்சாயத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. அது போலவே சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிராம பஞ்சாயத்துக்கு மேல் உள்ள பஞ்சாயத்துகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சட்ட திருத்தம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றிய பஞ்சாயத்திலும், மாவட்ட பஞ்சாயத்திலும் பங்கு பெறுகிற வாய்ப்பை வழங்குகிறது. மேலும், பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கிறது. | மேலும், பெண்களுக்கு மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட என்ன தகுதிகள் தேவையோ, அதே தகுதிகள் தான் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தேவைப்படும் தகுதிகள் ஆகும். பஞ்சாயத்தின் பொறுப்புகள் எவை என்று தெளிவாகவும் விரிவாகவும் அரசமைப்பின் பதினோராவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நிதிக்குழு போலவே, மாநில நிதிக்குழு ஒன்று உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு மாநில நிதியை பகிர்ந்து கொடுப்பதற்கும், அதில் பரிந்துரைகளை கொடுப்பதற்கும் அரசமைப்பு சட்டத் திருத்தத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
73-வது சட்டத்திருத்தத்தின் விளைவாக உச்ச நீதிமன்றம் அனைத்து உள்ளாட்சி அதிகாரிகளும் அரசாகவோ அல்லது அரசாங்கமாகவோதான் கருதப்பட்டு அவ்வாறே நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. இதன் விளைவாக பஞ்சாயத்துகள் சட்டப்பூர்வ தன்மை பெறுகின்றன. அவை அரசின் கருவியாக அங்கீகரிக்கப்பட்டு மக்களின் பங்களிப்பு அமைப்புகளை கீழ்நிலைகளில் உருவாக்குகின்றன. அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளான மாநில தேர்தல் ஆணையம், மாநில நிதிக்குழு போன்றவை பஞ்சாயத்துகளுக்கு நிலைத்தன்மையையும், நிரந்தர தன்மையையும் அளிக்கின்றன. அடிப்படை சேவைகளான குடிநீர், ஊரக துப்புரவு, சுகாதாரம், தொடக்க கல்வி போன்றவை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான பணியாக இருந்த போதிலும் பெரும்பாலான பஞ்சாயத்துகள், மாநில அரசின் திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனங்களாகவே நடத்தப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
பஞ்சாயத்து ராஜ் (1959-2009)
பொன் விழா ஆண்டு- அக்டோபர் 02,1959 ஆம் நாள் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்து ராஜ்-க்கு அடிக்கல் நாட்டினர். ஊரக இந்தியாவை ஆள்வதில் இது ஒரு புரட்சிகரமான படியாகும். கிராமங்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் மக்களின் கைகளில் அதிகாரத்தை அளித்தல் என்ற நோக்குடனான இந்த பயணம் அன்று தொடங்கியது.
மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகமானது, உத்தரவுகளை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக உள்ளது. இதில், கிடைமட்ட ஒருங்கிணைப்பு கீழ்நிலையில் இல்லாமல் இயங்கும் படியாக நம்முடைய மக்களாட்சி கட்டமைப்பு உள்ளது.
73-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தினால் (1991) ஏற்படுத்தப்பட்ட
மூன்றடுக்கு பஞ்சாயத் ராஜ் அமைப்பு
❖ மாவட்ட பஞ்சாயத்துகள் (தேர்ந்தெடுக்கப்பட்டோர் மற்றும் நியமிக்கப்பட்டோர்)
❖ ஊராட்சி ஒன்றிய குழு (தேர்ந்தெடுக்கப்பட்டோர்)
❖ கிராம பஞ்சாயத்து (தேர்ந்தெடுக்கப்பட்டோர்)
❖ கிராம சபை (ஒரு கிராமத்தின் அனைத்து வாக்களார்களும்) (ஆலோசனை அமைப்பு)
உள்ளாட்சி நிர்வாகமானது மேலும் பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் மற்றும் மக்களுக்கு பதிலளிக்கும் கடமை உணர்வுடனும் செயல்பட மத்திய மற்றும் மாநில அரசுகளில் மட்டுமல்லாது மாவட்ட மற்றும் கிராம அளவிலும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவைகளுக்குள் நியாயமான வகையில் பணிகள் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.