அரசியல் அறிவியல் - உள்ளாட்சி அரசாங்கங்களின் வகைகள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
உள்ளாட்சி அரசாங்கங்களின் வகைகள்
உள்ளாட்சி அரசாங்கங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடானது அப்பகுதி மக்களின் தொழில் (விவசாயம் சார்ந்த அல்லது விவசாயம் சாராத) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழிலை அடிப்படையாக கொண்ட பகுதி என்பது, அப்பகுதியின் பெரும்பான்மை மக்களோ, அல்லது அனைத்து மக்களுமோ விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை போன்ற தொழில்களை செய்வர். ஆனால் நகர பகுதிகளில் மக்கள் வர்த்தகம் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடுவர். நகரப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமானது வர்த்தகம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களையும் தனியார் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக அலுவலங்களில் உள்ள வேலைவாய்ப்பையும் அடிப்படையாக கொண்டுள்ளது. நகரப் பகுதிகள் என்பவை வெளி உலகத்திற்கும் கிராமப்பகுதிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகின்றன. கிராமப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அரசாங்கங்கள் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் என்றும் நகர பகுதிகளில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில், கிராம உள்ளாட்சி அரசாங்கங்கள் 'பஞ்சாயத்து ராஜ்' என்ற பொது பெயரில் அழைக்கப்படுகின்றன. அரசாங்கங்கள் பஞ்சாயத்து செய்கிற (ஆழ்ந்து விவாதித்தல் மற்றும் பேச்சு வார்த்தை நடத்துதல்) இடமாக கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் நகர்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் அவைகளின் பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையை கொண்டு நகராட்சிகள், மாநகராட்சிகள், நகரியம், பாளையவாரியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய நகரங்கள் நகராட்சிகளாகவும் பெரு நகரங்கள் மாநகராட்சிகள் எனவும், தொழில் நகரங்கள் நகரியங்கள் எனவும், ராணுவ அமைப்புகள் உள்ள இடங்கள் பாளைய வாரியங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
செயல்பாடு
மாணவர்கள் தங்களுக்குள் இரண்டு அல்லது மூன்று குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு தங்களது பகுதியில் எதிர்பாராத விதமாக பரவிய நோய்கள், பெருமழையின் போது உடைப்பெடுத்த நீர் நிலைகள் அல்லது வயதுவந்தோர் கல்வி போன்ற உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும்.
செயல்பாடு
ஒன்றிணைந்த உளச்சான்றினால் பொது இடங்களில் தூய்மை வலியுறுத்தப்படும்போது மட்டுமே ஒன்றுபட்ட தூய்மை உறுதிப்படும். மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2, அன்று நம் தேசத்தந்தைக்கு அஞ்சலி செலுத்துகிற அதே வேளையில், அனைத்து ஏழை மக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல் என்ற அவரின் கனவை நிறைவேற்ற நாம் பாடுபடவேண்டும்.
முழுமையான சுகாதாரத்தை நோக்கி
❖ ஒன்றிணைந்த குறைந்த செலவினத்திலான சுகாதார திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மூலம் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை 2010-ம் ஆண்டுக்குள் நீக்கும் நோக்கத்தில் உலர் கழிவறைகளை அமைக்க மானியங்களை உயர்த்தி வழங்குதல்
❖ ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் அனைத்து குடிசைப்பகுதிகளுக்கும் அடிப்படை தேவைகளை (குடிநீர், துப்புரவு, கழிவு நீரகற்றல், மின்சாரம், ஆரோக்கியம், சமூக பாதுகாப்பு மற்றும் வீடு வழங்குதல்). (நகர்புற ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குதல் மேலும் ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி திட்டம்) மேலும் 'ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குதல்.
❖ ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் வடிகால், சுகாதாரம் மற்றும் உலர் கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்துதல் (சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான கட்டமைப்பு, ஆளுகை மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி திட்டம்).
❖ முழுமையான சுகாதார கொள்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சிகள் என்பவை, பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்த் தொகையைக் கொண்டது பெரு நகரங்களில் ஏற்படுத்தப்படுகின்றன. கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் மக்களின் இடப்பெயர்ச்சி ஒரு நகரத்தை , ஒரு பெருநகரமாக மாற்றுகிறது.
நகராட்சிகள் என்பவை மக்கள் தொகை பத்து லட்சத்திற்கும் குறைவாக உள்ள சிறு நகரப்பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்றன. நகராட்சிகளும் வகை-1, வகை-2 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடானது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நகராட்சிகளின் தர நிர்ணயம் செய்யப்படுகின்றது.
புதிய தொழிற்சாலைகள் அமைகின்ற இடங்களில் நகரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அங்குள்ள குடிமக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலிருந்து விவசாயம் சாரா தொழில்களுக்கு மாறுகின்றனர். இராணுவ, பயிற்சி மையங்கள் அமைந்திருக்க கூடிய இடங்களில், இராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களில் பாளைய வாரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கங்களும், அரசாங்கங்களும், அரசாங்க படிநிலையில் இறுதி நிலையில் உள்ளவை ஆகும்.
உலகின் பல்வேறு நாடுகளில் ஊரக மற்றும் நகர்ப்புற அரசாங்கங்கள் வெவ்வேறு விதங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உள்ளாட்சி அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் எல்லா நாடுகளிலும் ஒன்றே. உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பவை உள்ளூர் மக்களுக்காக, உள்ளூரிலிருந்து கிடைக்கும் வருவாயையே பிரதானமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.
செயல்பாடு
சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற பல்வேறு வரிகளை உள்ளாட்சி அரசாங்கங்கள் விதிக்கின்றன. அவ்வரிகள் பற்றி ஒரு மாத ஊதியம் பெறும் நபர், தொழிற்சாலை நடத்தும் ஒருவர் மற்றும் ஒரு வியாபாரி போன்றோரிடம் நீ கேட்டு நேரிடையாக தெரிந்து கொள். நீ அறிந்தவற்றை வகுப்பறையில் பகிர்ந்து கொள்.
அரசாங்க படி நிலையில், மேல் நிலையில் உள்ள அரசாங்கம் உள்ளாட்சி அமைப்புகளை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் பணியை மேற்கொள்கிறது.