அரசியல் அறிவியல் - இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி | 11th Political Science : Chapter 11 : Local Governments
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் தோற்றத்தை பற்றி ஆராய்ந்தால், அவை கிறித்து பிறப்பதற்கு முன்பே (பொ.ஆ.மு.) இருந்ததை அறியலாம். கி.மு. (பொ.ஆ.மு.) 600 முதல் கி.பி. (பொ.ஆ.) 600 வரை உலகில் பல குடியரசுகள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. இந்த காலத்தில் தான் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர், புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர் போன்றோர் தோன்றினர். புத்த மற்றும் ஜைன இலக்கியங்களில் கிராமங்கள் அளவு மற்றும் வாழும் முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தர் மற்றும் மகாவீரர் ஏற்படுத்திய மத அமைப்புகளில் மக்களாட்சி நடைமுறையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் அப்போதைய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கப்படுள்ளது. மௌரியர்களின் ஆட்சி காலத்தில் கிராமமும், மாவட்டமுமே நிர்வாக அலகுகளாக இருந்தன.
தென்னிந்திய தீபகற்பத்தில் கிறித்துவின் காலத்திற்கு முன்பே உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இந்த வரலாற்றுக் காலம் முந்தைய சோழர் காலம், களப்பிரர்கள் காலம் மற்றும் பிந்தைய சோழர் காலம், விஜய நகர பேரரசின் தோற்றம், இஸ்லாமியர்கள், மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய சோழர் காலத்திலும், களப்பிரர்கள் காலத்திலும் இருந்த உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி சிறிதளவே ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால், தென்னிந்தியாவின் கடைக்கோடியில் ஆட்சி புரிந்த பாண்டியர்கள் காலத்திலும், தென் மத்திய இந்தியாவில் ஆட்சி புரிந்த பல்லவர் காலத்திலும் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சோழர்கள் காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட, முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டுகள் (கி.பி. (பொ.ஆ) 919 - கி.பி. (பொ.ஆ) 922) உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன. ஒவ்வோர் ஊரிலும் ஒரு சபை இருந்ததாகவும், அதில் அவ்வூரின் அனைத்து ஆண்களும் உறுப்பினராக இருந்ததையும், அவர்கள் அனைத்து பொதுப் பிரச்சனைகளிலும் முடிவெடுத்ததையும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. இந்த சபைகள் "ஊர்" மற்றும் "மகா சபை" என்று இரண்டு விதங்களாக அழைக்கப்பட்டன. மேலும் மூன்றாவது வகையாக நகரம் என்று வியாபார மையங்களும், நான்காவது நாடு என்றும் அழைக்கப்பட்டன. இவற்றில் நாடு என்பது கிராமங்கள் மற்றும் மற்ற பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பாகவும், நகரம் என்பது நகரப்பகுதிகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாகவும் இருந்தன. பொதுவாக பார்த்தோமேயானால், 9-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலங்களில் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்பட்டமைக்கான சான்றுகள் குறைவாகவே கிடைத்துள்ளன. "நாடு" மற்றும் "நகரம்" என்ற இரு அமைப்புகளுமே, நிலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள், கோவில்கள் மற்றும் நீர்பாசனங்களை நிர்வகித்தல், வரி வசூலித்தல், பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற பணிகளுக்கு கடன் வழங்குதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை செய்கின்றன. "ஊர்" மற்றும் "மகாசபை" என்ற இரு அமைப்புகளும் அரசனின் கட்டளைகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு துணைபுரிந்தன.
முதலாம் ராஜராஜ சோழன், வீர நாராயண சதுர்வேதி மங்கலம், என்ற ஊரின் மகாசபைக்கு நாட்டுக்கு துரோகமிழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை அறிய முடிகிறது. சர் சார்லஸ் மெட்கேப், சர் ஜார்ஜ் பேர்டு வுட் மற்றும் எல்பின்ஸ்டோன் போன்ற பல வரலாற்றாசிரியர்கள் பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிடுகின்றனர். ஆனால் மிக விரிவான முறையில் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வந்தது என்பதில் சில வரலாற்றாசிரியர்களுக்கு சந்தேகம் உள்ளது.
மொகலாயர்கள் காலத்தில் (கி.பி-1500 முதல் கி.பி-1777) அரசுகள் மாறினாலும், மத்திய அரசுக்கும் உள்ளுர் நிர்வாகத்துக்குமிடையேயான உறவில் அடிப்படை விதிகள் மாறவில்லை. மொகலாய பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது, அது பல மாகாணங்களாக (பராக்னாஸ்) பிரிக்கப்பட்டிருந்தது, மாகாணங்களில் உட்பிரிவுகள் (சர்க்கார்) ஏற்படுத்தப்பட்டிருந்தன. சர்க்கார்கள் பல கிராமங்களைக் கொண்ட தொகுதிகளாக (பராக்காஸ்) பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படிநிலையிலும் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கென அதிகாரிகள் பேரரசால் நியமிக்கப்பட்டிருந்தனர். கிராமப்பகுதிகளில் மொகலாயப் பேரரசின் இறுதிக் காலங்களில், உள்ளாட்சி அமைப்புகள் வீழ்ச்சியடையத் தொடங்கின. ஆனால் அவை பற்பல தாக்குதல்களைக் கண்டாலும், தொடர்ந்து இயங்கின. பிளாசிப்போருக்குப் பின் (கி.பி 1757), ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, வங்காள நவாபிடமிருந்து நில வரி வசூல் உரிமைகளைப் பெற்றது. இதுவே, இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக்கு வழிகோலியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாகாண தலை நகரங்களான கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை தவிர மற்ற கிராம மற்றும் நகர வியாபார மையங்கள் எந்த ஒரு கட்டுப்பாட்டின் கீழும், மேற்பார்வையின் கீழும் இயங்கவில்லை. மாவட்ட நிர்வாகமானது மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் முக்கியமானதொரு நிர்வாக அமைப்பாகவும், நாட்டின் ஊரக பகுதிகள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டிலும் இருந்தன.
கல்கத்தா (கொல்கத்தா) பம்பாய் (மும்பாய்) மற்றும் மெட்ராஸ் (சென்னை) நகரங்களில், மாநகராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தியது ஆங்கிலேயர் ஆட்சியின் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. 1882-ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும் அதை மேற்பார்வையிட மாவட்ட அளவில் வாரியங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.
ரிப்பன் பிரபுவின் தீர்மானம், உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலும் அதிகாரிகளல்லாதோரைக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அவர்கள் முடிந்தவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் கூறியது. ஏறத்தாழ 500 - உள்ளாட்சி அமைப்புகள் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரிகளல்லாதோரைக் கொண்டு தொடங்கப்பட்டன. அவர்களின் பெயர்களை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். மாவட்ட வாரியங்களின் பணிகள் 1909-ஆம் ஆண்டு வரை காவல், கல்வி மற்றும் கிராமத் துப்புரவு முதலியவையாக மட்டுமே இருந்தன.
ரிப்பன் பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அரசாங்கங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டன. ஆங்கிலேய அரசாங்கம் 1907-ஆம் ஆண்டு மத்திய அரசிற்கும், மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்குமிடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளைப் பற்றி விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அப்போதைய நிர்வாக அமைப்பை நிர்வாக பகிர்வின் மூலம் மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இந்திய அரசாங்க சட்டம் 1919-ன் படி மாகாண அரசாங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எனும் அம்சம் அரசின் இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை 1926-ஆம் ஆண்டில் 1417 ஆகவும், 1937-ஆம் ஆண்டில் 6250 ஆகவும் அதிகரித்தது. இங்கு மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவை மாவட்ட வட்டார மற்றும் கிராம அளவில் உள்ளன. மாவட்ட மற்றும் வட்டார அமைப்புகளில் 1923-ம் ஆண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் இருந்த அலுவலரல்லாத தலைவர்கள் மாற்றப்பட்டு அலுவலர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட நிர்வாக அமைப்புகளில் நீதிக்கட்சியின் உறுப்பினர்கள் 1927 ஆம் ஆண்டில் 545 பேர்கள் நியமிக்கப்பட்டனர். 1937-ல் முதல் 1947 ஆம் ஆண்டு வரை தேச சுதந்திர பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்தனர்.
உங்களுக்குத் தெரியுமா?
இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாக துறைகள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் எனவும், மாகாண அரசுகளுக்கு மாற்றி தரப்பட்ட துறைகள் எனவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. காவல், சட்டம் ஒழுங்கு, நிதி போன்ற துறைகள் ஒதுக்கப்பட்ட துறைகள் எனப்படும். அவை ஆளுநரின் வசம் இருக்கும். கல்வி மற்றும் பிற துறைகள் மாற்றித் தரப்பட்ட துறைகளாகும். அவை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருக்கும்.
இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்பு, உள்ளாட்சி அரசாங்களுக்கு புத்துயிரூட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும், கிராமபுற பஞ்சாயத்துக்கு ஆளுகையில் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் (தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்ஜியம்) என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
ஷர்மா நாராயணன் என்பவர் சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தார். அதில் குடிமக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளுக்கான அடிப்படை அமைப்பாக பஞ்சாயத்துகள் இருக்கும்படி அமைத்தார்.
கிராம பஞ்சாயத்துகள் குடிமை, அரசியல் மற்றும் நிர்வாகப்பணிகளைப் போல் உற்பத்தியை ஒருங்கிணைத்தல் மற்றும் வளங்களின் விநியோகம் தொடர்பான பொருளாதார பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பொருளாதார நடவடிக்கையின் மூலமே கிராம சமூகங்கள் தன்னிறைவு அடைவதுடன் தங்களது அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இதனால், நவம்பர் 26, 1949-ஆம் நாள் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் அமைந்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில், விதி 40 ஏற்படுத்தப்பட்டது. "அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகள் சுய ஆட்சியின் அலகுகளாக பணிபுரிய தேவையான அதிகாரங்களையும், திறனையும் வழங்க வேண்டும்" என அரசியலமைப்பு பிரிவு 40 கூறுகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் விதிகளின் படி செயல்படுவற்காக 1952-ஆம் ஆண்டு பேரார்வத்துடன் சமூக மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் கிராமங்களின் சமூகப் பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வதாகும். இதற்கு தொழில் நுட்ப ஒத்துழைப்பையும், நிதி பங்களிப்பையும் அரசு செய்யும். இந்த திட்டமானது, தேசிய விரிவாக்க பணியாக பல்வேறு ஊரக பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் ஊரக கைவினைத் தொழில்களில் புகுத்துவது இதன் நோக்கமாக இருந்தது. இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலமான 1956ல் (1956-61) கிராம பஞ்சாயத்துகள், அமைப்பு ரீதியாக உயர்நிலைகளில் உள்ள மக்கள் நிர்வாக அமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு, திட்ட வடிவமைப்புக் குழு ஒன்றை, பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் மத்திய அரசாங்கம் அமைத்தது. மேத்தா குழு முக்கியமான இரண்டு பரிந்துரைகளை கூறியது அவை: நிர்வாகம் பரவலாக்கப்பட வேண்டும் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஊரக வளர்ச்சி வட்டங்கள் மக்களாட்சி நிர்வாக அலகுகளாக மாற்றப்பட வேண்டும். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியம் மூலம் அப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான சுகாதாரம், விவசாயம், கால்நடை, கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட மேம்பாட்டு குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைத்தது. இந்த மாவட்ட அமைப்பு ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே செயல்படும். மேத்தா குழுவின் பரிந்துரைகள் பெரும்பாலும் அனைவராலும் வரவேற்கப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஏறத்தாழ 90 சதவீத இந்திய மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.
பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆராயவும், அதனை செம்மைப்படுத்தவும் இந்திய அரசாங்கம், 1977ஆம் ஆண்டு அசோக் மேத்தா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு, பஞ்சாயத் ராஜ் அமைப்பு மக்களாட்சி பண்புகளை கொண்ட ஒரு உள்ளாட்சி அரசாங்க அமைப்பாக மாறவேண்டும், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றது. எனவே, இது தனது முதல் பரிந்துரையாக மாவட்ட பஞ்சாயத்து நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றது. ஒரு தற்கால தீர்வாக, வட்டார அளவில் பஞ்சாயத்து ஒன்றியம் நீடிக்க பரிந்துரைத்தது. இது உள்ளாட்சி அரசாங்கத்தின் ஒரு அலகாக இல்லாமல், மாவட்டப் பஞ்சாயத்திற்கு ஒரு இடைநிலை ஆதரவுக் கரமாக செயல்பட வேண்டும் என்றது. அசோக் மேத்தா குழு, 1978-ஆம் ஆண்டு தனது பரிந்துரையை சமர்பித்தது. இதன் எதிரொலியாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்தன.
உள்ளாட்சி அரசாங்கங்களை வலுப்படுத்த 1978 முதல் 1986 வரை, சி.எச். அனுமந்த்ராவ் குழு,ஜி.வி.கே. ராவ் குழு மற்றும் எல்.எம். சிங்வி குழு போன்ற பல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவையாவுமே அசோக் மேத்தா குழுவின் பரிந்துரைகளில் சிறுசிறு மாற்றங்களையே பரிந்துரைத்தன. ராஜீவ் காந்தி அரசாங்கத்தால் 1989-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 64-வது மற்றும் 65-வது சட்ட திருத்தம் மிகமுக்கியமான ஒரு நிகழ்வாகும். ஆனால், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.
பின்பு, பல்வேறு முயற்சிகளின் விளைவாக 1992-ஆம் ஆண்டு, முந்தைய பல முயற்சிகளின் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி, அரசாங்கம் 73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்த மசோதாவை 1992-ல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இறுதியில் அது 1993-ஆம் ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
இந்த 73-வது சட்ட திருத்தமும் 74-வது சட்ட திருத்தமும் இந்திய அரசமைப்பில் பகுதி IX மற்றும் IX(A) என்ற இரு பகுதிகளை இணைத்தது. அதில் அரசியல் சட்ட பிரிவுகள் 243 முதல் 243(ZG) வரை உள்ளது.