Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | உள்ளாட்சி அரசாங்கத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவம்

அரசியல் அறிவியல் - உள்ளாட்சி அரசாங்கத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவம் | 11th Political Science : Chapter 11 : Local Governments

   Posted On :  04.10.2023 02:24 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : உள்ளாட்சி அரசாங்கங்கள்

உள்ளாட்சி அரசாங்கத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவம்

உள்ளாட்சி அரசாங்கம் என்பது, நம்முடைய கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கும், உள்ளூர் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும்.

அலகு 12 

உள்ளாட்சி அரசாங்கங்கள்



கற்றலின் நோக்கங்கள்

இப்பாடத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றிய ஒரு உட்பார்வையை மாணவர்கள் அறியலாம்

உள்ளாட்சி அரசாங்கங்களின் முக்கியத்துவம் பற்றி இப்பகுதியில் அறியலாம்

இப்பாடம், உள்ளாட்சி அரசாங்கங்களின் இன்றைய பரப்பெல்லையை விளக்குகிறது

உள்ளாட்சி அரசாங்கங்களின் வரலாற்று ரீதியிலான வளர்ச்சி, அதன் பணிகள் மற்றும் அதிகாரங்களில் சுதந்திரத்திற்கு பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை இப்பாடம் விளக்குகிறது

இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்களின் அமைப்பு, பணிகள், அதன் தேர்தல் முறை, வருவாய் ஆதாரம் மற்றும் அதிலுள்ள பிரச்சனைகள் குறித்து இப்பாடத்தில் மாணவர்கள் கற்கலாம்.


உள்ளாட்சி அரசாங்கத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவம்

உள்ளாட்சி அரசாங்கம் என்பது, நம்முடைய கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கும், உள்ளூர் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் கிராமம், நகரம், பெருநகரங்கள் மற்றும் மாநகரங்கள் என ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுபவை ஆகும். ஒரு கிராமம் அல்லது நகரத்தில் உள்ள மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் விதமாக உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுகின்றன. மக்களுக்கு சாலை பழுது, சாலையில் நீர் தேங்கியிருத்தல், தெரு விளக்குகள் எரியாமை போன்ற அடிப்படைப் பிரச்சனைகளின்போதும், குளங்களை உருவாக்குதல், பூங்காக்களை அமைத்தல் போன்ற அடிப்படை தேவைகளின்போதும், உள்ளாட்சி அரசாங்கங்கள் அவற்றை மேற்கொள்கின்றன. அவசர காலங்களின் போதும், உள்ளுரில் பிறப்பு மற்றும் இறப்பு நிகழும்போதும் அவற்றை கையாளும் பொறுப்பும் உள்ளாட்சி அரசாங்களுக்கு உண்டு. ஒரு பகுதியில் இருப்பிட சான்றிதழ் மற்றும் பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ்களை வழங்கும் ஓர் அமைப்பாகவும் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுகின்றன.

மக்களின் அன்றாடத் தேவைகளை கையாளும் பொறுப்புடைய ஒரு முழுமையான அமைப்பாக உள்ளாட்சி அரசாங்கங்கள் உள்ளன. நம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பில் இறுதி நிலை அலகாக உள்ளாட்சி அரசாங்கங்கள் உள்ளன. உள்ளாட்சி அரசாங்கமானது ஒரு சபையை கொண்டுள்ளது. அதில் உள்ள உறுப்பினர்கள் அதன் கிராமம் அல்லது நகரத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். அவர்கள் மக்களின் பிரச்சனைகளை மக்கள் சார்பாக சபையில் விவாதித்து தீர்வுகளைக் காண வேண்டிய பொறுப்புடையவர்கள் ஆவர். அந்த சபையின் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்தந்த நாட்டுச் சட்டப்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பவை பிரதிநிதித்துவ அமைப்புகள், அவை சபையில் மக்களை பிரதிநிதிப்படுத்துகின்றன. உள்ளாட்சி அரசாங்கங்கள் அவைகளின் பகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கவும், அவற்றிற்கான தீர்வுகளைக் காணவும், மேலும் அப்பிரச்சனைகளை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் சட்டப்படியான உரிமை பெற்ற அமைப்புகளாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் மக்களாட்சி நடைமுறையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், சபையில் கொண்டு வரப்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விவாதம், பேச்சுவார்த்தை மூலம் அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தீர்வு எட்டப்பட வேண்டும். சபை உறுப்பினர்கள் இந்தியாவின் அரசமைப்பிற்கு உட்பட்டு விவாதிக்கவும், முடிவெடுக்கவும், முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உள்ளாட்சி அரசாங்கங்கள் என்பவை மக்களின் உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். உள்ளாட்சி அரசாங்கங்கள் பொதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ளன. அவர்கள் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை சபையில் விவாதித்து அதற்கு தீர்வு காண்கின்றனர். உள்ளாட்சி அரசாங்கங்கள், அரசின் திட்டங்களும் வளங்களும் அடித்தட்டு மக்களை சென்றடைய முக்கிய வழிகளாக விளக்குகின்றன. இன்று எந்தவொரு நாடும் உள்ளாட்சி அரசாங்கங்களை புறக்கணிக்க முடியாது, ஏனெனில் உள்ளூர் பிரச்சனைகளே இப்போது சர்வதேச பிரச்சனைகளாக மாறுகின்றன. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது.

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 11 : Local Governments : Meaning, Nature and Importance of Local Government Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : உள்ளாட்சி அரசாங்கங்கள் : உள்ளாட்சி அரசாங்கத்தின் பொருள், தன்மை மற்றும் முக்கியத்துவம் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : உள்ளாட்சி அரசாங்கங்கள்