அரசியல் அறிவியல் - பல்வேறு நாடுகளில் உள்ளாட்சி அரசாங்கங்கள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
பல்வேறு நாடுகளில் உள்ளாட்சி அரசாங்கங்கள்
உள்ளாட்சி அரசாங்கங்கள் மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து காணப்படும் பழமையான ஒன்றாகும். பல்வேறு உலக நாடுகளில் அவர்களின் நவீன அரசுகளே உள்ளாட்சி அரசாங்கங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள உள்ளாட்சி அரசாங்கள் தொடர்பாக அறிய தொடங்கினால், அனைத்து நாடுகளிலும், அவை சிறிய நாடோ அல்லது பெரிய நாடோ, வளர்ச்சியடைந்த நாடோ அல்லது வளர்சியுறா நாடோ ஏதோ ஒரு வகையில் உள்ளாட்சி அரசாங்கங்கள் செயல்படுவதும் அதன் மூலம் பொது சேவைகள் மற்றும் வசதிகள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைவதையும் காணலாம்.
ஆனால், கட்டமைப்பு, அதிகாரம், பணி வரம்பு, நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் அவை பெருமளவு வேறுபடுகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களே தங்களின் முயற்சியால் மையப்படுத்தப்பட்டு இருந்த அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்கின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் நிதிப் பகிர்வு, காவல் பணி வரம்பு, போக்குவரத்து, மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் போன்றவை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளாகவே உள்ளன. ஆனால் வளரும் நாடுகளில் மத்திய அரசாங்கங்கள் அதிகாரத்தையும், நிதி ஆதாரங்களையும் மையப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கின்றன. இந்தியாவில், மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு நிர்வாக மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்களை மேலும் பகிர்ந்தளிக்க மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் எப்போதுமே இருந்து வருகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,50,000 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
செயல்பாடு
உங்கள் பகுதியில் உள்ள குடிநீர், மின்சாரம், துப்புரவு வடிகால் போன்ற சில பொது வசதிகள் எவ்வாறு உள்ளது என்று பார். அவற்றை மேம்படுத்த ஏதாவது வாய்ப்புள்ளதா? என்ன செய்யப்படவேண்டும் என்று நீ கருதுகிறாய்? கீழே உள்ள அட்டவணையை பூர்த்தி செய்யவும்.