அரசியல் அறிவியல் : உள்ளாட்சி அரசாங்கங்கள் - 74-வது அரசமைப்பு சட்டதிருத்தம் - அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
74-வது அரசமைப்பு சட்டதிருத்தம் - அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள்
74-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி நகர பகுதிகள் என்பவை வெவ்வேறு விதமான அளவுகள், குணம் மற்றும் முக்கியத்துவம் கொண்ட நகரங்களையும் பெரு நகரங்களையும் உள்ளடக்கியவை. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகள், நகரியங்கள் மற்றும் பாளைய வாரியங்கள் என்பவை பொதுவான நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க வகைகளாக உள்ளன. இதில் முதல் நான்கு வகைகளும் மாநில நகராட்சி சட்டங்களின் அடிப்படையிலும், பாளைய வாரியம் மட்டும் மத்திய சட்டமான, பாளைய வாரியங்கள் சட்டம், 1924-ன் அடிப்படையிலும் செயல்படுகின்றன.
அரசமைப்பின் 74-வது அரசமைப்பு சட்ட திருத்தம் 1922-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஜூன் 1993-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த 1992ம் ஆண்டு சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் ஓர் ஆண்டு காலம் கால அவகாசம் வழங்கியது. அதற்குள் ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் தங்கள் சட்டங்களை தேவையான அளவு திருத்துவதன் மூலமோ மாற்றுவதன் மூலமே மத்திய சட்டத்தின் விதிகளை தங்கள் சட்டங்களில் ஏற்படுத்தி அதன் மூலம் நகர உள்ளாட்சி அரசாங்கங்களை அமைத்திட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக பஞ்சாப் நகராட்சிகள் சட்டம் 1911 மாற்றப்பட்டு பஞ்சாப் நகராட்சிகள் மசோதா 1998 கொண்டு வரப்பட்டதை கூறலாம்.
74-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றடுக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது. அவை பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள். இவற்றைப் பற்றி விரிவாக காணலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
கிராம சபை கூட்டங்கள் ஆண்டிற்கு நான்கு முறை ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் நடத்தப்படுகிறது.
பேரூராட்சிகள்
ஒரு பகுதி, ஊரக பகுதியிலிருந்து நகர பகுதியாக உயரக்கூடிய நிலையில் இருந்தால், அப்பகுதி பேரூராட்சி என அழைக்கப்படும். இது நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இடைப்பட்ட ஓர் நிலையாகும். இதன் மக்கள் தொகை 5,000-க்கு மேலும் 15,000-க்கு மிகாமலும் இருக்கும். அதன் வருவாய் ஈட்டலும், வருவாய் ஆதாரங்களும் ஊராட்சிக்கென்று அரசு நிர்ணையித்துள்ள வரம்பை விட அதிகரித்து இருக்கும். ஒரு பேரூராட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3க்கு குறையாமலும் அதே சமயத்தில் 15-ஐ விட மிகாமலும் அம்மாநில சட்டம் கூறும் எண்ணிக்கையில் இருக்கும். இந்த பேரூராட்சி எந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைக்குள் வருகிறதோ அந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அரசால் நியமிக்கப்படும் நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற அல்லது சிறப்பு நிபுணத்துவமுடைய இரண்டு உறுப்பினர்கள் பேரூராட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருப்பர். இந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்டங்களில் கலந்து கொண்டாலும் வாக்களிக்கும் உரிமைகிடையாது. ஒரு பேரூராட்சியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.
பதினோராவது அட்டவணை (பிரிவு 243G)
• விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
• நில மேம்பாடு, நிலச்சீர்த்திருத்தங்களை அமல்படுத்துதல், நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பேணுதல்.
• சிறிய நீர் பாசனங்களை நிர்வகித்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல்
• கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை
• மீன் வளம்
• சமூக காடுகள் மற்றும் பண்ணை காடுகள்
• சிறு காடுகளின் மூலமான உற்பத்தி
• சிறு தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள் உட்பட.
• காதி, கிராமம் மற்றும் குடிசைத் தொழில்கள்
• ஊரக வீட்டு வசதி
• குடிநீர்
• எரிபொருள் மற்றும் கால்நடை தீவனம்
• சாலைகள், சிறுபாலங்கள், பெரிய பாலங்கள், படகு, நீர்வழிகள்.
• ஊரக மின்மயமாக்கல் மற்றும் மின் விநியோகம்
• மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்
• வறுமை ஒழிப்பு திட்டங்கள்
• தொடக்க கல்வி மற்றும் மேல் நிலைக் கல்வி
• தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில் கல்வி
• நூலகங்கள்
• கலாச்சார நடவடிக்கைகள்
• சுகாதாரம் மற்றும் துப்புரவு; மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட
• குடும்ப நலன்
• பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
• சமூக நலம்; மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன நலம் குன்றியோர் நலம் உட்பட
• நலிவடைந்த பிரிவினரின் நலம் குறிப்பாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்.
• பொது விநியோக முறை
• சமுதாய சொத்துக்களை நிர்வகித்தல்
இந்த பேரூராட்சியின் பகுதிகள் பல சிறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, அவை வார்டுகள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுக்கும். அந்த பேரூராட்சியின் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கைக்கும் ஒட்டு மொத்த மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாசாரத்தின் அடிப்படையில் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் வார்டுகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. மேலும் ஒட்டு மொத்த வார்டுகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
பேரூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒருவரை தலைவராகவும், மற்றொருவரை துணைத்தலைவராகவும் பேரூராட்சியின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த கூட்டத்தை துணை ஆணையர் கூட்டுகிறார். ஒவ்வொரு பேரூராட்சிக்கும் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகளாக குடிநீர் வழங்கல், வடிகால், தூய்மை போன்றவை உள்ளன. ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் அரசு ஒரு செயல் அதிகாரியை நியமிக்கிறது.
மக்கள் தொகை 15,000-க்கு மேலும் மூன்று இலட்சத்திற்கு கீழும் உள்ள சிறு நகரப் பகுதிகளில் நகராட்சிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதே போல் அதன் வரி வருவாய், மற்ற வருவாய்கள் அரசு நிர்ணயித்த அளவுக்குள் இருத்தல் வேண்டும். இதை அவ்வப்போது அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கும்.
நகராட்சி நிலை
வகையினம் அ
வகையினம் ஆ
வகையினம் இ
மக்கள் தொகை
ஒரு லட்சமும் அதற்கு மேலும்
50,000 முதல் 1 லட்சம் வரை
50,000 க்கு கீழ்
நகராட்சியின் வகையினம் அ-ல் 20 எண்ணிக்கைக்கு குறையாமலும், 50 எண்ணிக்கைக்கு மிகாமலும் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் இருப்பர். அதேபோல் வகையினம் ஆ-ல் 15 முதல் 30 வரை, வகையினம் இ-ல் 10 முதல் 15 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இருப்பர். சட்ட மன்ற தொகுதி எல்லைக்குள் வருகின்ற நகராட்சிகளில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி வழி உறுப்பினராக நகராட்சியில் இருப்பார். மூன்று உறுப்பினர்கள் வரை அரசாங்கம் நகர சபைக்கு நியமிக்கலாம். தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்று வாக்களிக்க முடியாது. நகராட்சி உறுப்பினர்கள் மக்களால் ரகசிய வாக்கெடுப்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஒட்டுமொத்த நகராட்சி பகுதியும், எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அத்தனை வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் நகராட்சி எல்லைக்குள் உள்ளவர்களே பொதுவாக நகராட்சியின் வாக்காளர்களாக எடுத்துக் கொள்ளப்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அக்கட்சியின் வேட்பாளருக்கு வழங்கப்படும்.
தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் துணை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும். நகர பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரையிலும் ஓர் நகரப் பகுதியில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் அடிப்படையிலே தனி தொகுதிகள் நகர பஞ்சாயத்துகளில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலும் கூடுதலாக பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினப் பெண்கள் உட்பட மொத்த இடங்களில் 30 சதவிகிதம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை மூன்று லட்சத்திற்கு குறைவாக உள்ள நகராட்சிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகளை இணைத்து வார்டு குழுக்கள் ஏற்படுத்தப்படும். அந்தந்த வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வார்டு குழு உறுப்பினர்களாக இருப்பர். ஒவ்வொரு நகராட்சியிலும் நிலைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதில் நகராட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர், மேலும் வகையினம் அ-வாக இருந்தால் நான்கு உறுப்பினர்களையும் வகையினம் ஆ-வாக இருந்தால் இரண்டு உறுப்பினர்களையும் நகராட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுப்பர். இந்த நிலைக்குழுவின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகளாகும். நகராட்சியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, சட்டப்படி செயல்படாதபோது, அது பதவியிலிருந்து அகற்றப்படலாம்.
நகர சபை ஆண்டுக்கு ஒரு முறையாவது கூட வேண்டும். அக்கூட்டத்திற்கு நகர சபை தலைவர், அவர் இல்லையெனில் நகர சபை துணைத்தலைவர் தலைமை ஏற்பர். நகர சபைதன் பணிகளைச் செய்ய பல்வேறு துணைக் குழுக்களை அமைக்கிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அவர்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து, தீர்வுக்கான பரிந்துரைகளை அளிப்பர். இந்த குழுக்கள் இரண்டுவகைப்படும். அவைசட்டபூர்வகுழுக்கள், சட்ட பூர்வமற்ற குழுக்கள் என இரு வகைப்படும். சிறப்புத் தேவைகளுக்காக நகராட்சி அமைப்புகள் சில துணைக் குழுக்களை ஏற்படுத்தலாம்.
நகர்மன்றம்
நகர்மன்ற சட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களில் ஒருவர் நகர்மன்றத் தலைவராக ஒரு மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுகின்றார். நகர் மன்றம் தேர்தல் முடிந்தவுடன் உருவாக்கப்படுகின்றது. இந்த நகர்மன்ற தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. நகர்மன்றம் ஒன்று அல்லது இரண்டு துணை தலைவரைத் தேர்வு செய்கின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகர்மன்றத் தலைவர்கள் பயணப்படி மற்றும் மாத ஊதியம் பெறுகின்றனர்.
நகர் மன்றக் கூட்டங்களைக் கூட்டுவதும், அதற்கு தலைமை வகிப்பதும் நகர் மன்றத்தலைவரின் பணியாகும். மேலும் தவறு செய்யும் நகர்மன்ற உறுப்பினர் மேல் ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கிறார். நகர் மன்றத்தின் முதன்மை பேச்சாளர் நகர்மன்றத் தலைவர் ஆவர், அரசுடன் தகவல் தொடர்பும் மற்றும் அரசு விழாக்களில் பங்கு கொள்வதும் இவருடைய பணியாகும்.
ஒவ்வொரு நகர்மன்றத்திற்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவரை மாநில நிர்வாகம் நியமனம் செய்கின்றது. நகர்மன்ற அலுவலர்கள் அந்த நிர்வாக அலுவலரின் கீழ் பணிபுரிபவர்களாக உள்ளனர்.
நகர்மன்றத்தை ஆளுகின்ற அமைப்பு நகர்மன்ற குழு ஆகும். இது நகர நிர்வாகத்திற்கு பொறுப்புள்ளது. மேலும் சட்டம் இயற்றுவது, நகர்மன்ற கூட்டத்தின் நேரம், கூட்டத்தை நடத்துவது போன்ற முடிவுகளை நிர்வாக அலுவலர் மேற்கொள்கிறார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் குடிமக்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும், பொதுமக்களுடன் தொடர்பில் இருத்தல், நகராட்சி அலுவலர்கள் மீதான பொதுமக்களின் புகார்களை உரிய நிர்வாகத் தலைமையிடம் முறையிடல், நகர்மன்ற கூட்டத் தொடரில் மக்களின் குறைகளை எடுத்துரைப்பதும் இவர்களின் பணியாகும்.
நகர்மன்றத்தின் பணிகள், பொறுப்புகள் இந்திய அரசமைப்பில் 12-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. 74-வது அரசமைப்பு சட்டத்திருத்தம், ஒரு மாவட்டம் முழுமைக்கும் ஒரு வளர்ச்சித் திட்ட வரைவை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்டதிட்டக்குழுவை ஏற்படுத்தியது. இதன் மூலம் மாவட்டத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. உள்ளாட்சி மற்றும் நகராட்சியில் உருவாக்கப்படும் திட்டத்தினை ஒன்று சேர்ப்பது குழுவின் பணி.
1992-ஆம் ஆண்டு சட்டத்தின் படி மாவட்ட திட்டக்குழுவில் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த உறுப்பினர்களை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த எண்ணிக்கை அந்த மாவட்டத்தின் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் கிராமப்புற மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் அமைந்திருக்கும்.
நகராட்சி அமைப்புகள் தனது பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்களுக்கு வரி, கட்டணம் மூலம் வருவாய் ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி அமைப்புகள் தனது நிதி ஆதாரங்களை உயர்த்திகொள்ள பல வகை வரி விதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன (உதாரணம் - நிலவரி, கட்டட வரி, விளம்பரத்தின் மீதான வரி, நெடுச்சாலை சுங்க வரி, சாலைவரி முதலானவை). 74-வது சட்ட திருத்தத்தின் படி, மாநில அரசுகள் இந்த சட்ட திருத்தத்தை தங்கள் மாநிலய சட்டத்தில் இனைத்துக் கொண்ட ஒரு வருட காலத்திற்குள், மாநில நிதிக் குழுவை அமைத்திடல் வேண்டும்.
அ. மாநில அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்குமிடையே வரி, சுங்க சட்டங்கள் போன்றவற்றின் மூலமாக வரும் வருவாயை பகிர்ந்தளித்தல்.
ஆ. அந்த வருவாயை மாநிலத்திலுள்ள நகராட்சியின் பல நிலைகளுக்கும் ஒதுக்கீடு செய்தல்.
இ. நகராட்சிகளின் வரி வகைகள், சுங்க கட்டணங்கள் போன்றவற்றை நிர்ணயம் செய்தல்.
அரசமைப்பின் 12-வது அட்டவணை:
நகராட்சியின் அதிகாரமும் - பொறுப்புகளும்.
❖ நகரத் திட்டங்கள், நகரத்தை வடிவமைத்தல்.
❖ கட்டடங்களை கட்டுதல், நிலத்தை பயன் படுத்துதலை ஒழுங்குமுறைபடுத்துதல்.
❖ பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு திட்டமிடல்
❖ சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல்.
❖ வீட்டு உபயோகத்திற்கு குடிநீர் விநியோகம் செய்தல்.
❖ பொதுச்சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல்.
❖ தீயணைப்பு பணிகள்.
❖ நகர்புற காடு மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்தல்.
❖ சமூகத்தில் நலிவடைந்தோர், ஊனமுற்றோர், மனநிலை குன்றியவர்கள் நலன்களை பாதுகாத்தல்.
❖ குடிசைப்பகுதிகளை மேம்படுத்துதல், தரத்தை உயர்த்துதல்.
❖ நகர்புற வறுமை ஒழிப்பு.
❖ பூங்காக்கள், தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்புற வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
❖ கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
❖ இடுகாடு மற்றும் சுடுகாடு மைதானங்களை பராமரித்தல்.
❖ கால்நடைக்கான குடிநீர் குட்டைகள் அமைத்தல் மிருகவதையை தடைசெய்தல்.
❖ பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் பதிவுடன் கூடிய மிக முக்கியமான புள்ளி விவரங்களைத் சேகரித்தல்.
❖ பேருந்து நிறுத்துமிடங்கள், கழிவறை, சாலை விளக்கு போன்ற பொது வசதிகளை செய்து கொடுத்தல்.
❖ வதைகூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழில்களை ஒழுங்குபடுத்துதல்.
ஈ. மாநிலங்களுக்கு நிதி வழங்க உதவும் மானியங்கள்.
உ. நகராட்சியின் நிதி நிலைமையை மேம்படுத்தத் தேவைப்படும் நடவடிக்கைகள்.
ஆனால், யதார்த்தத்தில், மாநில சட்டம் எந்தெந்த பணிகளை நகராட்சிகள் செய்யலாம் என வரையறுத்திருக்கிறதோ, அந்த பணிகளை மட்டுமே நகராட்சிகள் செய்கின்றன. மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நாட்டின் தேவைகளின் வழியே காணும் போது நகராட்சியின் பணிகள் மீதான அந்த கட்டுப்பாடு சரியான ஒரு செயல்பாடாகக் கருத முடியவில்லை. சிறப்பு தேவை செயலாண்மைகளை ஏற்படுத்துவதன் மூலம் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளாட்சியின் பணிகளை தனதாக்கி கொள்ளும் மாநில அரசாங்கத்தின் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு மாநகராட்சி ஆகும். பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவும், மாநில சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டம் மூலம் பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் நிறுவப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படை, மற்றும் வருமான அடிப்படையில் நகரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் மாநகராட்சி அமைப்புகள் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டன.
மாநகராட்சி அமைப்பு மக்கள்தொகையின் அளவு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியைக் கொண்டு நகரத்தை நிர்வகிக்கும் தன்மை மற்றும் வயதுவந்தோர் வாக்கு பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர் / பழங்குடியினர் (SC/ST) மக்களுக்கு இட ஒதுக்கீடுடன் விகிதாச்சார அடிப்படையில் பிரதி நிதிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர். மாநகராட்சி அமைப்பு ஓர் சட்டப்பூர்வமான நிர்வாக அமைப்பு ஆகும்.
மாநகராட்சி மன்றம் மற்றும் நிலைக்குழுக்கள் இரண்டும் விவாதிக்கும் அமைப்பாகவும் செயலாக்க அமைப்பாகவும் உள்ளன.
நிலைக்குழுவின் பணியானது மாநகராட்சிக்கு துணையாக செயல்படுவது. நகராட்சி ஆணையின் பரிந்துரையின் அடிப்படையில் தான் அனைத்து திட்டங்களும் நகராட்சி குழுவில் நிறைவேற்றப்படுகின்றன. ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவார். மாநகராட்சிமன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளை செயல்படுத்துவது அவருடைய தலையாயப் பொறுப்பாகும்.
இந்தியாவில் உள்ள மாநகராட்சி அமைப்புகள் மும்பையில் அமைந்த மாநகராட்சி அமைப்பை போன்றவை, மாநகராட்சி அமைப்பின் பதவிகாலம் 5 ஆண்டுகள் ஆகும். 74-வது சட்டத்திருத்தம் வார்டு குழுக்களை ஏற்படுத்தியது. மாநகராட்சியின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளுக்கு அவை பொறுப்பாக இருக்கும். இதன் தலைவர் ஒராண்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அவர் மீண்டும் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். மாநகராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் கண்காணிப்பில் தான் குடிநீர் விநியோகம், துப்பரவுபணி, சாக்கடை இணைப்பு, தெருக்களில் நிறைந்துள்ள நீரை வெளியேற்றுவது மற்றும் திடக்கழிவுகள் சேமிப்பதும், அகற்றுவதும் தெருவிளக்கு அமைத்தல், பூங்காக்கள் அமைத்தலும் போன்றவை நடைபெறுகின்றன.
மாநகராட்சியில் நிலைக்குழு உருவாக்கப்பட்டு அதில் மேயர், துணை மேயர், வார்டு உறுப்பினர்கள் இடம்பெறுவர். மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தமக்குள்ளிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர். மேயர்நிலைக்குழுவின் தலைவர் ஆவார். மாநகராட்சி குடிநீர் விநியோகம், கழிவு நீரகற்றல் போன்றவற்றிற்காகவும் குழுக்களை அமைக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் 3-க்கு குறையாமலும் 5-க்கு மிகாமலும் இருப்பர்.
செயல்பாடு
நகரங்கள் எதிர்கொள்ளும் ஐந்து வகை சவால்கள்
(அ) மாநகராட்சிகளில் உள்ள பொதுப் பயன்பாடு வசதிகளான சாலைகள், நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் போன்றவற்றில் நவீன காலத்திற்கு ஏற்றவாறு திட்டமிடுதலில் குறைபாடுகள்.
(ஆ) நிதிசார் பொறுப்புடைமை மற்றும் நிதி ஆதாரங்கள் வலுவற்று இருத்தல்.
(இ) பணியாளர் எண்ணிக்கை, திறமை மற்றும் போட்டியிடும் தன்மை, நிர்வாக வடிவமைப்பு போன்ற மனிதவள மேலாண்மை தொடர்புடையவைகள் பலவீனமாக இருத்தல்.
(ஈ) அதிகாரமற்ற மேயர்கள் மற்றும் மாநகராட்சி மன்றங்கள், நகராட்சிகள் மற்றும் மாநில அரசின் துறைகளில் ஆளுகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருத்தல்.
(உ) குடிமக்களின் முறையான பங்கேற்பிற்கு வழியின்மை மற்றும் வெளிப்படை தன்மையற்ற நிதி செயல்பாடு.
இந்தக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டுகள் ஆகும். 74-வது சட்டத்தித்தின் மூலம் நிதி ஆதாரங்கள் மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரச மைப்பின் 12-வது அட்டவணை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய 18 பணிகளை பட்டியலிட்டுள்ளது. 73-வது சட்டத்திருத்தை போல 74-வது சட்டதிருத்தத்திலும் நகர திட்டமிடலுக்கு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பெருநகர எல்லைக்குள் உள்ள பஞ்சாயத்துத் தலைவர்களின் மொத்த எண்ணிக்கையில் இரண்டில் மூன்று பங்கிற்கு குறையாத எண்ணிக்கையில், தங்களுக்குள் இக்குழுவின் உறுப்பினர்களை இவர்களே தேர்ந்தெடுக்கின்றனர்.
அனைத்து மாநகராட்சியிலும் மேயர் மற்றும் துணைமேயர் இடம் பெற்றிருப்பார்கள். சில மாநிலங்களில் மேயர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுவர். மாநகராட்சி மேயர் மன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். அமைதியையும், ஒழுங்கமைப்பையும் நிலை நாட்டுகிறார். மன்ற கூட்டங்களில் தவறாக நடக்கும் உறுப்பினர்களை நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் மேயர் பெற்றுள்ளார். மன்ற கூட்டங்களில் சமமான வாக்குகள் பெற்றிருக்கும் நிலையில் மேயர் தீர்மான வாக்கை அளிக்கமுடியும். ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவார். மாநகராட்சி ஆணையர் இந்திய நிர்வாக பணியை (IAS) சார்ந்தவர் ஆவார். மாநகராட்சி ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருப்பது மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். இந்த கால அளவை மாநில அரசாங்கம் விரும்பினால் நீடிக்கலாம். மாநகராட்சி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசின் முழு அதிகாரம் நிறைந்தவர் ஆணையர் ஆவார்.