தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பாசிகள் | 8th Science : Chapter 17 : Plant Kingdom
பாசிகள்
ஆல்கா என்பது ஒரு லத்தின் வார்த்தையாகும் (ஆல்காக்கள் கடல் பாசிகள்).
பாசிகள், பச்சையம் கொண்ட எளிமையான ஆரம்ப நிலைத் தற்சார்பு ஊட்டத் தாவரங்கள் ஆகும்.
இது தாலோஃபைட்டா பிரிவைச் சார்ந்தது. இதன் உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது, அதாவது,
தாவர உடலமானது வேர், தண்டு, இலை என்ற வேறுபாடற்றது.
பெரும்பாலான பாசிகள் தண்ணீரில் வாழ்கின்றன. அது நன்னீராகவோ அல்லது
கடல் நீராகவோ இருக்கலாம். ஒருசில பாசிகள் மட்டும் ஈரமான நிலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
சில பாசிகள் மிகவும் நுண்ணியவை.இப்பாசிகள் நீரின் மேற்பரப்பில்மிதக்கக் கூடியவை. இவை
தாவர மிதவை நுண்ணியிரிகள் எனப்படுகின்றன. சில பாசிகள் இணக்க உயிரிகளாகக் காணப்படுகின்றன
(பாசிகள் மற்றும் பூஞ்சைகள் ஒன்றுக்கொன்று இணைந்து நன்மை பெறும் வகையில் அமைந்துள்ளன).
எ.கா லைக்கன்கள். ஒருசில வகைப் பாசிகள் தொற்றுத் தாவரங்களாகும். பாசிகளைப் பற்றிய பாடப்பிரிவு
ஆல்காலஜி அல்லது பாசியியல் எனப்படும். பாசிகள் மூன்று வகைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.
அவை:
• துண்டாதல் மூலம் உடலப் பெருக்கம் நடைபெறுகிறது. எ.கா. ஸ்பைரோகைரா
• பாலிலா இனப்பெருக்கம் ஸ்போர் உருவாதல் மூலம் நடைபெறுகிறது.
எ.கா. கிளாமிடோமோனஸ்
• பாலின செல்கள் இணைவதன் மூலம் பாலின இனப்பெருக்கம் ஸ்பைரோகைரா
நடைபெறுகிறது.
1. நிறமிகளின் அடிப்படையில் பாசிகளின் வகைப்பாடு
நிறமிகளின் அடிப்படையில் ஆல்காக்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை அட்டவணை 17.1 இல் கொடுக்கப்பட்டுள்ளன.
2. பாசிகளின்
பொருளாதார முக்கியத்துவம்
உணவு
ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பாசிகளை மக்கள்
உணவாக உட்கொள்கின்றனர். எ.கா. அல்வா, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை.சில பாசிகள் வீட்டு
விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
எ.கா. லேமினேரியா, அஸ்கோஃபில்லம்
வேளாண்மை
சில நீலப் பச்சைப் பாசிகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துவதில்
முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன. எ.கா. நாஸ்டாக், அன்பீனா
அகார் அகார்
அகார் அகார் என்பது ஜெலீடியம் மற்றும் கிரேசிலேரியா ஆகிய சிவப்புப்
பாசிகளிலிருந்து எடுக்கப்படுகிறது. நே ஆய்வாங்களிலுள்ள வளர்ப்பு ஊடகங்களில் பயன்படுகிறது.
அயோடின்
லேமினேரியா போன்ற பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
விண்வெளிப் பயணம்
குளோரெல்லா ஃபைரினாய்டோசா என்னும் பாசி, விண்வெளிப் பயணத்தின்போது
கார்பன் டைஆக்சைடை அகற்றுவதற்கும், மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது.
தனி செல் புரதம் (SCP)
சில ஒருசெல் பாசிகள் மற்றும் நீலப் பச்சைப் பாசிகள் புரத உற்பத்திக்குப்
பயன்படுகின்றன. எ.கா. குளோரெல்லா, ஸ்பைருலினா