தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வகைப்பாட்டியல் (Taxonomy) | 8th Science : Chapter 17 : Plant Kingdom
வகைப்பாட்டியல் (Taxonomy)
உயிரினங்களை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், வரையறுத்தல்
மற்றும் பெயரிடுதல் ஆகியவற்றைப் பற்றிய உயிரியல் பிரிவு வகைப்பாட்டியல் எனப்படும்.
வகைப்பாட்டியல் எனும் வார்த்தை, வரிசைப்படுத்துதல் எனப் பொருள்படும் 'டாக்சிஸ்' மற்றும்
விதி எனப் பொருள்படும் 'நாமோஸ்' ஆகிய இலத்தின் வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டதாகும்.
வகைப்பாட்டியல் எனும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் அகஸ்டின் பைரமிஸ் டி கேண்டோல்
(Augustin Pyramus De Candolle) என்பவர் ஆவார்.
1. வகைப்படுத்துதல்
(Classification)
தாவரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுக்கு
ஏற்ப பல்வேறு தொகுப்புகளாக அவற்றைப் பிரிக்கும் முறையை வகைப்படுத்துதல் என்கிறோம்.
நான்கு வகைப்பாட்டு முறைகள் உள்ளன.
1. செயற்கை வகைப்பாட்டு முறை
2. இயற்கை வகைப்பாட்டு முறை
3. மரபுவழி வகைப்பாட்டு முறை
4. நவீன வகைப்பாட்டு முறை
1. செயற்கை வகைப்பாட்டு முறை
இது தாவரங்களை வகைப்படுத்தும் மிகப் பழமையான முறை ஆகும். ஒருசில
புறத்தோற்றப் பண்புகளின் அடிப்படையில் தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை வகைப்பாட்டு
முறையில் மிகவும் புகழ் பெற்றது லின்னேயஸ் முறை ஆகும். இதனை உருவாக்கியவர் கரோலஸ் லின்னேயஸ்
என்பவர் ஆவார். அவர் தமது ஸ்பீசிஸ் பிளான்டாரம் என்ற புத்தகத்தில் செயற்கை வகைப்பாட்டு
முறையினை விளக்கியுள்ளார்.
2. இயற்கை
வகைப்பாட்டு முறை
தாவரங்களின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில் இயற்கை வகைப்பாட்டு
முறை உருவாக்கப்பட்டுள்ளது. பெந்தம் மற்றும் ஹுக்கரின் வகைப்பாட்டியல் முறை இதற்கு
எடுத்துக்காட்டு ஆகும். விதைத்தாவரங்களின் புறத்தோற்றப் பண்பு மற்றும் இனப்பெருக்கப்
பண்பின் அடிப்படையில் இந்த முறை வகுக்கப்பட்டுள்ளது. பெந்தம் மற்றும் ஹுக்கர் தங்களது
ஜெனிரா பிளாண்டாரம் புத்தகத்தில் மூன்று தொகுதிகளாக இதை விளக்கியுள்ளனர். இவ்வவைப்பாட்டு
முறை உலகம் முழுவதும் உள்ள உலர் தாவரத் தொகுப்பு நிலையங்களிலும் (ஹெர்பேரியம்) தாவரவியல்
தோட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
தாவரங்களைச்
சேகரித்து, உலர்த்தி, அழுத்தி, ஒரு அட்டையின் மீது ஒட்டி, ஏற்றுக்கொள்ளப்பட்ட எதாவது
ஒரு வகைப்பாட்டின்படி வரிசைபடுத்தும் முறை ஹெர்பேரியம் எனப்படும்.