தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - இந்தி எதிர்ப்பு போராட்டம் | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu
இந்தி எதிர்ப்பு போராட்டம்
நீதிக் கட்சியின் வீழ்ச்சியும், தேர்தல் அரசியலில் நுழைய பெரியார் மறுத்ததும், வளர்ந்து வந்த மகாத்மா காந்தியின் புகழும், இந்திய தேசிய காங்கிரசை 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற செய்தது. ராஜாஜி முதல் அமைச்சரானார்.
அவர் முழுமையான மது விலக்கு (மது விற்கத் தடை) மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார். மேலும் ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டுவந்தார். இருந்தபோதிலும், இந்தி மொழியை கட்டாயமாக பள்ளியில் அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது பல பள்ளிக் கூடங்களை மூடுவதற்கு காரணமானது. இது சுயமரியாதைக்காரர்கள் மற்றும் தேசியவாதிகளான மறைமலை அடிகள் போன்றோரை ஆத்திரமடையச் செய்தது. இதனால் 1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பெரியார் உள்ளிட்ட ஆயிரக் கணக்காண போராட்டக்காரர்கள் கைதானார்கள், மேலும் பல பேர் சிறையிலேயே இறந்தனர்.
1944-ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற சேலம் மாநாட்டில், ஏற்கெனவே பெரியாரின் தளபதியாகிவிட்ட திறமையான சொற்பொழிவாளரான சி.என். அண்ணாதுரை நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் (தி.க) என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டுவந்தார். பெரியார் "திராவிட நாடு" மாநாட்டைக் கூட்டி திராவிடர்களுக்குத் தனி "திராவிட நாடு" கோரினார். மேலும் அவரின் புகழ் பெற்ற வாசகமான "திராவிட நாடு திராவிடர்களுக்கே" எனவும் முழக்கமிட்டார். தனி "திராவிட நாடு" கோரிக்கையைத் தவிர திராவிடர் கழகமானது சாதியற்ற சமூகத்தை ஏற்படுத்துதல், மதச் சடங்குகளைக் கண்டித்தல், பழமை மற்றும் மூடநம்பிக்கைகள் அற்ற சமூகத்தை அமைத்தல் ஆகியவற்றை விரும்பியது.
திராவிடர் கழகமானது கிராம மற்றும் நகர் புறங்களில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகவும் புகழ்பெற்றது, பல பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பெயர்களை தூய தமிழில் மாற்றி கொண்டனர்.
1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 313-ன் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளை தி.மு.க. துக்க தினமாக அனுசரிக்கத் தீர்மானித்தது. அதன் பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு பெருமளவிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்களைச் சந்தித்தது. இந்த கிளர்ச்சியால் தி.மு.க. மாணவர் சமூகத்திடம் இருந்து பெருமளவு ஆதரவை பெற்றது. இதன் மற்றொரு பக்கம் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில் தனது ஆதரவையும், தளத்தையும் இழந்தது. இதற்கிடையில் தி.மு.க. "திராவிட நாடு" கோரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டு தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் அரசியலில் ஊக்கத்துடன் பங்கெடுத்தது.