அரசியல் அறிவியல் - தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu
அலகு 14
தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி
நிகழ்வுகளின் நாட்குறிப்பு
1914 - திடாவிடர் கழகத்தின் தோற்றம்
1916 - தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது
1917 - நீதிக் கட்சி
1919 - மாண்டேகு செம்ஸ் போஃர்டு சீர்திருத்தங்கள்
1925 - பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
1937 - ராஜாஜியின் தலைமையில் காங்கிரசு அமைச்சரவை உருவாக்கப்படுதல்
1937 - இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1944 - சேலம் மாநாட்டில் நீதிக் கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
1949 - திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது
1946 - சென்னை மாகாணத்தில் த.பிரகாசம் தலைமையிலான காங்கிரசு அரசாங்கம் அமைந்தது.
1947 - ஓ.பி. ராமசாமி முதலமைச்சரானார்.
1949 - பி. குமாரசாமி ராஜா தலைமையிலான அமைச்சரவை அமைந்தது.
1952 - முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது
1956 - மாநில மறுசீரமைப்புச் சட்டம்
1965 - இந்தி – எதிர்ப்புப் போராட்டம்
1967 - சி.என். அண்ணாதுரை தலைமையின் கீழ் தி.மு.க அரசாங்கம் அமைக்கப்பட்டது.
1969 - சி.என். அண்ணாதுரை காலமானார்
1969 - மு. கருணாநிதி மாநிலத்தின் முதலமைச்சரானார்
1972 - அ.இ.அ.தி.மு.க., எம்.ஜி.இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்) நிறுவப்பட்டது
1974 - மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கற்றலின் நோக்கங்கள்
❖1900-களில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற அரசியல் விவாதங்களின் தன்மையைப் பற்றி புரிந்துகொள்ளுதல்
❖ பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தோன்றியது பின்னர் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு எங்ஙனம் வழியமைத்தது என்பது பற்றி விளக்குதல்
❖ மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆட்சியின் பொழுது மத்திய-மாநில உறவுகளின் தன்மை பற்றி விரிவாக விளக்குதல்
❖ திராவிட கட்சிகளின் மக்கள் நலக்கொள்கை, அவற்றின் முக்கியத்துவம், பொது மக்கள் மீதான அதன் தாக்கங்களைப் பற்றிய அறிவைப் பெறுதல்
❖ ஏதேனும் மாநிலங்களின் அரசியல் விருப்பமானது தேசிய அரசியலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்தல்
❖ இந்த படிப்பின் முதன்மையான நோக்கமானது மாநிலத்தில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் சமூகநலக் கொள்கைகளின் அனைத்து பரிணாமங்களையும் அறிந்து கொள்வது.
❖ மாநிலத்தில் திராவிட அரசியலில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள் மற்றும் அதன் விளைவுகளை கண்டறிதல்.
இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடானது, ஆரோக்கியமான நிர்வாக மற்றும் அரசியல் பண்பாடும், கிட்டத்தட்ட நிலையான பொருளாதார வாழ்வு மற்றும் மிக தொன்மையான காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்ச்சியான மரபுகளையும் கொண்டதாகும். தென்னிந்தியாவின் சென்னை மாகாணம் என்பது (The Madras presidency) ஆங்கிலேயரின் அரசியல், நிர்வாகத் தேவைகளுக்காக தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணம் கி. பி. (பொ.ஆ) 1801-இல் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணமானது, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் தற்பொழுதுள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதி, தெற்கு கர்நாடகா, ஒடிசாவின் வடபகுதி முழுவதும் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பிரதேசம் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகளாகும்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சென்னை மாகாணத்தின் அரசியலானது பிராமணர் -பிராமணரல்லாதோரின் மோதல் தொடர்பான ஆதிக்கம் கொண்டதாக இருந்தது. அறிஞர்களும், அரசியல் சிந்தனையாளர்களும் இந்த பிராமணர் - பிராமணரல்லாதோர் என்ற இரு பிரிவினரிடையே உள்ள மோதல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பதுதான் தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை புரிந்து கொள்வதற்கு அவசியமானது என்று நம்பினார்கள்.
அதே நேரத்தில், சில பிராமணரல்லாத சாதி குழுக்களின் உறுப்பினர்கள் தொழிற்துறை வாணிபம் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை கோரினர். கணிசமான அளவிற்கு, பிராமணரல்லாத சாதிபிரிவினர்கள் கிராமப் புறங்களில் இருந்து மாகாணத்தின் நகர்புறத்திற்கு புலம்பெயர்ந்தனர்,
அவர்கள் தங்களின் அடையாளத்தை உறுதி செய்ய விரும்பினார்கள் மற்றும் படிப்படியாக சமூகத்தில், அரசியலில், நிர்வாகத்தில் பிராமணர்கள் அனுபவித்த ஏகபோக அதிகாரம் மற்றும் தனி உரிமை சலுகைகளை சவாலாக நின்று எதிர்த்தனர்.
"திராவிடன்" என்ற வார்த்தை, அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர்/ ஆரியரல்லாத தமிழ்பேசுவோரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பிராமணர்கள் "ஆரியர்கள்" எனவும் வடமொழி நாகரிகத்தின் பாதுகாவலர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டனர் மற்றும் பிராமணரல்லாதோர் "திராவிடர்கள்" எனவும் அவர்கள் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் நாகரீகத்தின் பாதுகாவலர் எனவும் கருதப்பட்டனர்.