தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - நீதிக் கட்சியின் பங்களிப்பு | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu
நீதிக் கட்சியின் பங்களிப்பு
அடுத்தடுத்த தேர்தல்களில் நல்வாய்ப்புகளில் பல்வேறு ஏற்ற இறக்கம் இருந்த போதிலும் நீதிக் கட்சி 1921 முதல் 1937 வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது. அவர்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்கள். வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் சூத்திரர்களுக்கு மற்றும் பஞ்சமர்களுக்கு எதிராக இருந்த பொது வழி, போக்குவரத்து, உணவு விடுதிகள் மற்றும் பொது கிணறுகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இருந்த பாகுபாடுகளை நீக்கினர். இந்து சமய அறநிலைய வாரியத்தை அமைத்ததின் மூலம் ஆலய விவகாரங்களை ஒழுங்குபடுத்தினர். பஞ்சமர்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர் (பஞ்சமி நிலம்) புதிய நகரங்களையும், தொழிற்பேட்டைகளையும் அறிமுகப்படுத்தினர். ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு சிறப்பு முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் சில பள்ளிகளில் "மதிய உணவு திட்டத்தை" பரிசோதனை முறையில் கொண்டு வந்தனர். மருத்துவ கல்விக்கு சமஸ்கிருத அறிவு அடிப்படைத் தகுதி என்பது நீக்கப்பட்டு பிராமணரல்லாத மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு வழி செய்யப்பட்டது. டாக்டர். முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதுடன், பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர்.
கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்பட்டன. மிராசுதார் முறை ஒழிக்கப்பட்டதுடன் மற்றும் 1923 ஆம் ஆண்டு நீர்ப் பாசனத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் இந்த ஆட்சிக்காலத்தில் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. சில துறைகள் ஒதுக்கப்பட்டாலும் நீதிக் கட்சி மட்டுமே மிகவும் சிறப்பான அரசாங்கத்தை கொடுத்தது.