இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - அரபு-இஸ்ரேல் போர் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

   Posted On :  27.07.2022 06:03 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

அரபு-இஸ்ரேல் போர்

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் (1919) மூலம் ‘துருக்கிய அரபுப் பேரரசை’ உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. பிரான்ஸ் நாடு சிரியாவையும் லெபனானையும் ஒருங்கிணைக்கவும் பிரிட்டன் நாடு ஈராக், பாலஸ்தீன், ஜோர்டான் ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்கவும் ஏற்பாடானது.

அரபு-இஸ்ரேல் போர்

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் (1919) மூலம் ‘துருக்கிய அரபுப் பேரரசை’ உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. பிரான்ஸ் நாடு சிரியாவையும் லெபனானையும் ஒருங்கிணைக்கவும் பிரிட்டன் நாடு ஈராக், பாலஸ்தீன், ஜோர்டான் ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்கவும் ஏற்பாடானது. முதலாம் உலகப்போருக்குப்பின் சுதந்திரத்தை எதிர்பார்த்த அரேபியர்கள் இவ்வேற்பாட்டால் அதிர்ச்சியடைந்தனர். சீயோனிய இயக்கத் தலைவர்களுக்கு பிரிட்டன் நாடு பாலஸ்தீனத்தின் பகுதிகளை யூதக்குடியிருப்புகளுக்கு வழங்க உறுதியளித்தது. யூதர்கள் அரேபியரின் எந்த ஒரு கிளர்ச்சியையும் பிரிட்டனுடன் சேர்ந்து ஒடுக்க உறுதியளித்தனர். வசதியான அரேபியரிடம் நிலங்களை விலை பேசிப் பெற்றுக்கொண்ட யூதர்கள் அங்கே பல தலைமுறைகளாக வேளாண்மை செய்து வந்தவர்களை விரட்டியதால் அரேபியர்களின் வெறுப்புணர்ச்சியும் எதிர்ப்பும் மிகுந்தது.

1945 அக்டோபர் கடைசியில் யூதத் திரைமறைவு அமைப்புகளான இர்கூன் ஸ்வாய் லூமி (சீயோனியத் துணை இராணுவ அமைப்பு) ஸ்டென் காங்கும் (சீயோனிய பயங்கரவாத அமைப்பு) தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்களை பெருமளவில் தொடுத்தன. இருப்புப்பாதைகள், பாலங்கள், விமானத்தளங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசு பிரச்சனையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்று தீர்வு கோரியது. ஐ.நா. சபையும் அதற்கு உடன்பட்டு பிரிவினைக்குச் சம்மதித்தது. பிரிட்டன் தனது துருப்புகளை விலக்கிக்கொள்ள முடிவு செய்த போது அங்கு மீண்டும் சண்டை மூண்டது.

பிரிட்டிஷ் நாட்டின் யோசனையை வல்லரசுகள் ஆதரித்ததால் ஐ.நா. சபையும் அதற்கு உடன்பட்டு பாலஸ்தீனத்தை யூத நாடாகவும் அரேபிய நாடாகவும் (29 நவம்பர் 1947) இரு பிரிவுகளாகப் பிரித்தது. இதனால் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை மூண்டது.

சீயோனிய இயக்கம் : யூதர்களின் பூர்வீகப்பகுதியான பாலஸ்தீனத்தில் 1900இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர். இவ்வினத்தின் பதினைந்து மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர் (இதுவே ‘புலம்பெயர்’ சமூகம் என்று குறிக்கப்படுகிறது). வியன்னாவில் பத்திரிகையாளராக இருந்த தோடோர் ஹெர்சல் யூத நாடு என்ற பெயரில் 1896ஆம் ஆண்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு (1897) உலக சீயோனிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

இஸ்ரேலியர்கள் ஜெருசலேமுக்குச் செல்லும் முக்கிய சாலையைக் கைப்பற்றிய பின் அதை மீட்க அரேபியர்கள் மேற்கொண்டப் பல முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்தனர். இஸ்ரேலுடன் அரபு நாடுகள் தனித்தனியாக 1947 பிப்ரவரி முதல் ஜூன் வரை ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்படிக்கைகளின் கீழ் இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து நாடுகளுக்குமிடையே தற்காலிகமான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இஸ்ரேலைப் பொறுத்தவரை இக்காலகட்டத்தில் நிகழ்ந்த போர்கள் யாவும் அதன் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடாகவும் சுதந்திரப் போராகவுமே நினைவு கொள்ளப்பட்டது. அரேபியர்களைப் பொறுத்தமட்டில் பலரும் இப்போர்களினால் அகதிகளாக இடம்பெயர் வேண்டியிருந்ததால் அது நக்பா (பேரழிவு) என்று கருதப்பட்டது. அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு உடனடியாக ஐ.நா. சபையின் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது.


சூயஸ் கால்வாய் சிக்கல் (1956)

எகிப்தில் 1952இல் நிகழ்ந்த ஓர் இராணுவக் கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார். அவர் 1956ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். இது பிரிட்டிஷாரின் நல்லெண்ணெத்திற்கு விரோதமாகத் தெரிந்தது . இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தன. இச்சூழலில் தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கருதிய இஸ்ரேல் தனது கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக அக்கபா வளைகுடாவை திறந்துவிட்டதோடு அதன் மூலம் எகிப்தின் எல்லை மீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் 29இல் எகிப்து மீது படையெடுத்தன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரிட்டன் தனது படைகளைக் கால்வாயைக் காப்பாற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது. இதற்கு எகிப்து மறுத்ததால் அக்டோபர் 31இல் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து அந்நாட்டின் விமானத்தளங்கள் மீதும் இன்னபிற முக்கியத்தளங்கள் மீதும் சூயஸ்கால்வாய்ப் பகுதியிலும் குண்டுவீசின. எனினும் உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் நவம்பர் 6ஆம் தேதி பிரான்சும் பிரிட்டனும் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டன. இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நேரு இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட சீரிய பங்காற்றினார்.


   சூயஸ் கால்வாய் சிக்கல்


அரபு - இஸ்ரேல் போர் (1967)

பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு உருவானது முதல் சிரியா, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் பதுங்கியிருந்த பாலஸ்தீனிய கொரில்லாப்படைகள் இஸ்ரேலைத் தாக்கி வந்தன. இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்தது. ஜோர்டானின் மேற்குக்கரையில் அமைந்திருந்த அல்-சமூ என்ற கிராமத்தின் மீது நவம்பர் 1966இல் இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தி 18 பேர் உயிரிழக்கவும் 54 பேர் காயங்கள் அடையும்படியும் செய்தது. சிரியாவுடன் ஏப்ரல் 1967இல் நடந்த வான்வெளித் தாக்குதலில் ஆறு சிறிய மிக் ரகப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சிரியாவுக்கு தார்மீக ஆதரவு கொடுக்க விழைந்த நாசர் சினாய் மலையில் எகிப்தியப் படைகளை கொண்டு வந்து நிறுத்தியதோடு மே 18இல் ஐ.நா. சபை அங்கு நிறுத்தி வைத்திருந்த படைகளை அப்புறப்படுத்தக் கோரினார். மேலும் மே 22இல் அக்கபா வளைகுடாவை வளைத்து அங்கு இஸ்ரேலியக் கப்பல்கள் நுழைய முடியாதபடி செய்தார். ஜோர்டானின் மன்னர் ஹூசைன் எகிப்தோடு பரஸ்பர இராணுவ ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார். இதன்படி ஜோர்டானியப் படைகள் எகிப்தின் கட்டளைக்கு அடிபணியச் சம்மதித்தன. சிறிது காலத்தில் ஈராக்கும் இக்கூட்டணியில் இணைந்தது.

பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு

இஸ்ரேல் என்ற தேசம் 1948இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும். இரகசியமாக செயல்பட்டுவந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.


இஸ்ரேலின் தாக்குதல்

அரபு நாடுகளை நாசர் ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி இஸ்ரேல் எதிர்பாராத தாக்குதல் ஒன்றைத் தொடுத்து எகிப்தின் 90 சதவீத விமானப்படையை தரைமட்டமாக்கியது. இதுபோன்றே நிகழ்ந்த மற்றொரு தாக்குதலில் சிரியாவின் விமானப்படையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. மூன்றே நாட்களில் இஸ்ரேலியர்கள் காஸா பகுதியையும் சூயஸ் கால்வாயின் கிழக்குப்புறம் அமைந்த சினாய் தீபகற்பத்தின் முழுமையையும் கைப்பற்றிப் பெரும் வெற்றியைக் குவித்தனர்.

யாசர் அராபத் (1924-2004)


யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழுவிற்கு 1969இல் தலைமையேற்று 2004இல் அவர் இறக்கும் வரை – அப்பொறுப்பில் வீற்றிருந்தார். செப்டம்பர் 1970இல் அவர் அனைத்துப் பாலஸ்தீன அரபு கொரில்லாப்படைகளுக்கும் முதன்மைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு தலைப்பாகையுடனும் மறைவாக அவர் வைத்திருந்த துப்பாக்கியும் ஆலிவ் மரக்கிளையின் பகுதியும் அவர்தம் இராணுவச்சீருடையும் காண்போர் மனதில் பாலஸ்தீனப் பிரச்சனையின் தீவிரத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. அவர் 2 ஏப்ரல் 1989 அன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பின் நடுவண்குழுவால் பாலஸ்தீன தேசத்தின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அரபு இஸ்ரேல் போர் (1973)

தங்களின் படைகளை ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கோடு எகிப்தின் அதிபர் அன்வர் சாதத்தும் சிரியாவின் அதிபர் ஹபீஸ் அல் - ஆஸாத்தும் ஜனவரி 1973இல் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர். சாதத் சினாய் மலையை விட்டு இஸ்ரேல் விலகினால் தாம் அமைதி உடன்படிக்கைக்குத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு இஸ்ரேல் இணங்கவில்லை. ஆகவே எகிப்தும் சிரியாவும் யோம் கிப்பூர் சமய விடுமுறையன்று (6 அக்டோபர் 1973) ஒரு எதிர்பாராத திடீர் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் கடும்பின்னடைவைச் சந்தித்தபோதும் அதனால் அரபுப் படைகளை புறந்தள்ள முடிந்தது. இப்போரினால் அரேபியர்களும் எந்தலாபமும் பெறமுடியவில்லை. இப்பிரச்சனையில் நடுவராகச் செயல்படும் போர்வையில் அமெரிக்க ஐக்கிய நாடு தனது ஆதிக்கத்தை அரபு நாடுகள் மீதும் அங்கே அமையப்பெற்ற எண்ணெய்க் கிணறுகள் மீதும் நிறுவியது.



Tags : The World after World War II இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்.
10th Social Science : History : Chapter 4 : The World after World War II : Arab-Israeli War The World after World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : அரபு-இஸ்ரேல் போர் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்