இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - பெர்லின்சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
பெர்லின்சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
ஜெர்மானிய
மேற்கு (ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு), ஜெர்மானிய
கிழக்குப் (ஜெர்மானிய ஜனநாயகக் குடியரசு) பிரிவுகள் வேறுபட்ட வாழ்க்கைத்தரத்தில்
எதிரொலித்தன. மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லினின் பொருளாதாரம்
செழித்தோங்கியது. அதற்கு மாறாக கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா
போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை. மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ
இல்லாததால் மக்களுக்குப் பெரும் சிரமம் இருந்தது. இதனால் கிழக்கு பெர்லின் மக்கள்
மேற்கு பெர்லினுக்கு அதிக அளவில் இடம்பெயரத் தொடங்கினர். மேற்கு பெர்லினிலோ ரஷ்யா
தன்மீது எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் நிலவியது.
இச்சூழலில் 1961இல் கிழக்கு ஜெர்மனி ஒரு
சுவரை எழுப்பி கிழக்கு பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் மேற்கு
பெர்லினுக்கும் இருந்த தொடர்பை நிறுத்தியது. காவல் கோபுரங்கள் எழுப்பப்பட்டு
பயங்கர ஆயுதங்களின் துணையோடு கடுமையானக் கண்காணிப்புப் பணியின் மூலம்
கிழக்கிலிருந்து மக்கள் நுழைவது தவிர்க்கப்பட்டு வந்தது. ரஷ்யாவின் கட்டுப்பாடு 1980களின்
நடுவில் வலுவிழக்கத் துவங்கிய நிலையில் இச்சுவரின் இருபுறமும் 9
நவம்பர்
1989 இல் கூடிய மக்கள் கூட்டம் அதை தகர்க்கத்
துவங்கியது. ஜெர்மனி 3 அக்டோபர் 1990
அன்று
முறையாக இணைக்கப்பட்டது. பெர்லின் சுவர் ஒரு கட்டுமானத்தடை என்பதைத் தாண்டிய ஒரு
விஷயமாகும் அது முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை
அடையாளப்படுத்தக்கூடிய ஒன்று. பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 26
டிசம்பர்
1991இல் சோவியத் நாடும் வீழ்ந்து பனிப்போர் காலத்தை
முடிவுக்கு கொண்டு வந்தது.
பெர்லின்சுவர் தகர்ப்பு
மேற்கு ஜெர்மனியின் வேந்தராக (Chancellor) 1982 முதல் 1990 வரை பொறுப்பு வகித்த ஹெல்மட் கோல் கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் 1990இல் இணைக்கப் பெரும் பங்காற்றினார், அதன் மூலம் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுபட்ட ஜெர்மனியின் வேந்தரானார். அவர் பிரெஞ்சு குடியரசுத்தலைவரான மிட்டரண்டோடு இணைந்து மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் மூலமாக ஒருங்கிணைந்த ஐரோப்பாவிற்கும் (European Union), யூரோ பண உருவாக்கத்திற்கும் வித்திட்டார்.
உலக
அரசியலில் 1970களிலும்,
1980 களின் முற்பகுதியிலும்,
சோவியத்
நாடு மிகுந்த செல்வாக்கோடுத் திகழ்ந்தது. எனினும்,
அதன்
பொருளாதாரம் நலிவடையவும், முதலாம் உலக நாடுகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமலும்
தேங்கியது. அந்நாட்டின் அதிபராகமிக்கேல் கோர்பசேவ்1985ஆம்
ஆண்டு பதவியேற்றார். இச்சூழலில் கோர்பசேவ் வெளிப்படைத்தன்மை (Glasnost)
பற்றியும்,
சீர்திருத்தம்
(Perestroika) பற்றியும் பேசலானார். ஆனால்
அவரது சீர்திருத்த முயற்சிகளுக்கு ஆளும் பொதுவுடைமை கட்சியினரிடமிருந்து
எதிர்ப்புக் கிளம்பியதோடு அதற்குத் தேவையான வளங்கள் சோவியத் நாட்டில் இல்லாத
நிலையும் இருந்தது. உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு 1980களின்
நடுவில் இராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின்
அதிபரான ரீகனின் விண்வெளிப் போர்த்திட்டத்திற்கு ஈடுசெய்ய சோவியத்
நாட்டிற்கு அதிக அளவு நிதித்தேவை ஏற்பட்டது. ராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு நாட்டின்
பொருளாதாரத்தை மேற்கொண்டு சிரமத்தில் ஆழ்த்தியது.
ஆனால்
சீர்திருத்தங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்த நிலையிலும்,
வலுவிழந்தப்
பொருளாதார சூழலிலும் கோர்பசேவால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. ‘செர்னோபில்
பேரழிவு’ என்று
அறியப்படும் உக்ரைனில் 1988இல் நிகழ்ந்த அணுக்கசிவும்,
அதனால்
ஏற்பட்டக் கடும்பாதிப்பும் ஒரு பேரிடியாக விழுந்தது. பழமைவாத சக்திகளின்
துணைகொண்டு 1989லும்,
1991லும் நிலைமையை சமாளித்துத் தன் நிலையை வலுப்படுத்த
கோர்பசேவ் முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் சுரங்கத்தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்
போராட்டத்தாலும், அதனால் நாட்டில் எற்பட்ட ஆற்றல்
பற்றாக்குறையாலும் நெருக்கடியைச் சந்தித்தார்.
சோவியத் நாட்டின் அரவணைப்பில் இருந்த கிழக்கு ஐரோப்பியப் பொதுவுடைமை நாடுகளும் மிகக் கடுமையானப் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர் கொண்டன. இந்நாடுகளின் மீது சோவியத் கொண்டிருந்த கட்டுப்பாட்டைத் தளர்த்த கோர்பசேவ் முடிவெடுத்தபோது அங்கே சுதந்திர வேட்கையும் ஜனநாயகத்தை நோக்கிய நகர்வும் வேகமெடுக்கலாயின. தொழிலாளர்களின் தொடர் போராட்டம் பொதுவுடைமை ஆட்சியை முதலில் போலந்திலும், அதன்பின் ஹங்கேரியிலும் அசைக்கத்துவங்கின. 1989இல் அலைகடல் போல் பரவிய எழுச்சிகள் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் சுவர் தகர்த்தெறியப்படக் காரணமாக விளங்கின.
பெரிஸ்ட்ரோய்கா (மறுகட்டமைப்பு) என்பது மிக்கேல் கோர்பசேவால் சோவியத் நாட்டின் பொருளாதாரத்தையும், அரசியல் அமைப்பையும் மறுசீரமைப்பிற்கு உட்படுத்த 1980களின் கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றத்திற்கு சோவியத்தின் பொருளாதாரம் ஈடுகொடுக்கும்படி அதற்குப் புத்துணர்வு ஊட்ட வெளிப்படைத்தன்மை (Glasnost) கொள்கையோடு அறிமுகப்படுத்தப்பட்டதே பெரிஸ்ட்ரோய்கா ஆகும்.
வெளிப்படைத்தன்மை
என்ற கொள்கை மிக்கேல் கோர்பசேவால் பெரிஸ்ட்ரோய்காவோடு அறிமுகப்படுத்தப்பட்ட
வெளிப்படையான ஒரு கருத்தியல் கொள்கையாகும். வெளிப்படைத்தன்மை எழுத்தாளர்களுக்கு
விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அரசையும்,
அரசியலையும்
விமர்சிக்க உரிமை வழங்கியது.
அதைத் தொடர்ந்து செக்கோஸ்லோவகியாவிலும், பல்கேரியாவிலும் நடந்து கொண்டிருந்த ஆட்சிகள் சரிந்தன. ருமேனியாவின் நிக்கோலா சௌசெஸ்கு, உணர்வாளர்களின் மீது துப்பாக்கியால் சுட்டதையடுத்து (டிசம்பர் 1989) அவர் தம் இராணுவத் தளபதிகளே அவரைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பந்தமான தொலைக்காட்சிப் பதிவுகளும், பெர்லின் சுவரின் வீழ்ச்சியும் பொதுவுடைமை உலகம் நொறுக்கப்படத் தூண்டியது. ஆறே மாதங்களில் பாதி ஐரோப்பாவின் அரசியல் வரைபடம் பெரும் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
எல்சின்
ஆரம்ப காலத்தில் கோர்பசேவின் நண்பராகவே இருந்தார். மாஸ்கோ நகரின் மேயராக இருந்த
அவர் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை ஆதரித்ததின் மூலமாகப் பெரும்புகழ்
பெற்றார். சோவியத் பாராளுமன்றத்திற்கு 1989இல்
ஜனநாயக முறைப்படி கோர்பசேவ் நடத்திய தேர்தலில் மாஸ்கோ தொகுதியில் போட்டியிட்ட அவர்
பெரும் வெற்றி பெற்று அதிகாரத்திற்குத் திரும்பினார். அதற்கு அடுத்த ஆண்டு
கோர்பசேவின் எதிர்ப்பையும் மீறி அவர் ரஷ்யாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஷ்யக்குடியரசின் தன்னாட்சியை வலியுறுத்திய அவர்,
பாராளுமன்றத்திற்கு
கட்டுப்படாத முழு நிர்வாகப் பொறுப்பை கைகொள்ளும் அதிபர் முறையை முன்வைத்தார்.
கோர்பசேவ் ஒரு அழுத்தமான நடவடிக்கையை இடையூறு புரிவோர் மீது 1991இல் கைக்கொள்ள முயன்ற போது மாஸ்கோ நகரையே பிரமிக்க வைத்த இரண்டாவது தொழிலாளர் எழுச்சி ஒரு பெரும் சவாலாக உருவெடுத்தது. அவரது அரசிலிருந்த பழமைவாத சக்திகள் அவரையும் மீறி கடும் நடவடிக்கைகளைக் கைகொள்ள முயன்றன. கோர்பசேவை வீட்டுக்காவலில் வைத்த அந்த சக்திகள் துருப்புகளின் துணையோடு மாஸ்கோவில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால் மற்றப் படைப்பிரிவினரின் ஆதரவைப்பெற முடியாமல் போனதால் முடிவில் மேற்கத்திய நாடுகளின் பின்புலத்தோடு போரிஸ் எல்சின் என்ற சீர்திருத்தவாதி ஆட்சியைக் கைப்பற்றினார்.
இடைப்பட்டகாலத்தில் மூன்று பால்டிக் நாடுகள் சோவியத் ஐக்கியத்தை விட்டுவிலகிச் சென்றிருந்தன. எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையில் சுதந்திர உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டன. மேலும் நவம்பர் 1991இல் 11 குடியரசுகள் (உக்ரைன், ஜார்ஜியா, பெலாரஸ், அர்மீனியா, அசர்பைஜான், கசகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்) சோவியத் ஐக்கியத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தன. அதற்கு மாற்றாக சுதந்திர நாடுகளாக ஒரு பொதுநல அமைப்பின் கீழ் (common wealth) வீற்றிருப்பதை இந்நாடுகள் விரும்பின. கோர்பசேவ் 25 டிசம்பர் 1991இல் தனது ராஜினாமாவை அறிவித்தார். பெயரளவில் ஆறு நாட்களுக்கு சோவியத் ஐக்கியம் நீடித்தாலும் அது 1991 டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் முழுமையாகக் கலைக்கப்பட்டது. இறுதியில் சோவியத் ஐக்கியமே இல்லாமல் போனது.