3. சட்டங்களின் வகைகள்:
அ) தனியார் சட்டங்கள் (Private Laws)
குடிமக்களிடையேயான உறவுகளும், அவ்வுறவுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் தனியார் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆ) பொதுவுடைமைச் சட்டங்கள் (Public Laws)
குடிமக்களுக்கும், அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது பொது சட்டமாகும். இவ்வகை சட்டத்தில் அரசு நடுவராகவும், கட்சிகாரராகவும் பார்க்கப்படுகிறது.
இ) அரசமைப்பு சட்டங்கள் (Constitutional Laws)
அரசை வழி நடத்தக்கூடிய அடிப்படை சட்டங்கள் அரசமைப்பு சட்டங்கள் ஆகும். அரசாங்கத்தின் செயல்பாடுகளை வரையறுத்து, தெளிவுபடுத்தக்கூடிய சட்டங்களே அரசமைப்பு சட்டங்களாகும். உதாரணத்திற்கு, குடியரசு தலைவர் தேர்தல், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பொதுசட்டம், சட்டமன்றத்தால் இயற்றப்படக் கூடிய நிரந்தர சட்டத்திலிருந்து வேறுபடுகிறது.
(ஈ) நிரந்தர சட்டங்கள் (Statute Laws)
நிரந்தர சட்டங்கள் என்பவை மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும், நாடாளுமன்றத்தின் மூலமாகவும் இயற்றப்படும் சட்டங்களாகும். மக்களாட்சி நாடுகளில் பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவே இயற்றப்படுகின்றன.
உ) அவசர சட்டம் (Ordinance)
பொதுவாக அரசினுடைய சட்டங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் செயலாட்சி துறை மூலம் இது பிறப்பிக்கப்படுகின்றது. இவ்வகை சட்டம், குறைந்த கால கட்டமே நீடிக்கும். நாடாளுமன்றம் இயங்காத காலங்களிலும், அவசர காலங்களிலும் குடியரசு தலைவர் மூலம் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
ஊ) பொது சட்டங்கள் (Common Laws)
பொது சட்டங்களானது மரபுகளையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாக கொண்டது. ஆனால் நிரந்தர சட்டங்களைப் போல நீதிமன்றங்களால், அமலாக்கம் செய்யக்கூடிய தன்மை உடையதாகும். பொதுச் சட்டங்கள் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டங்கள் ஆகும்.
எ) நிர்வாக சட்டங்கள் (Administrative Laws)
அரசாங்க பணியாளர்களின் அலுவல் பொறுப்புகளை பற்றி விளக்கமளிப்பதுடன், ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் நிர்வாக சட்டம் எனப்படும். தனி மனிதர்களுக்கும், பொதுநிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே சட்டத்தையும், அதன் செயல்பாட்டையும் பிரித்து நடைமுறைப்படுத்துவது நிர்வாக சட்டமாகும். மேலும் இது அரசாங்க அதிகாரிகளின் சலுகைகளை பற்றி விளக்கம் அளிக்க முயலுகிறது. குடிமக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே சர்ச்சை ஏற்படும் பட்சத்தில் நிர்வாக நீதிமன்றம், நிர்வாக சட்டத்தின் மூலம் தீர்வு காண்கிறது.
ஏ) பன்னாட்டு சட்டங்கள் (International Laws)
பன்னாட்டு சூழலில் நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம், பன்னாட்டு சட்டமாகும். பன்னாட்டு உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கென்று, தனித்தன்மையுடைய பன்னாட்டு சட்டம் என்ற ஒன்று வழக்கில் இல்லை . ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும், உலக பொதுமக்களின் கருத்துமே, ஒவ்வொரு நாடும் தங்கள் இறையாண்மையை முழுவதுமாக அனுபவிக்க வழிவகை செய்கின்றது.
மேலும் கடல் எல்லை பாதுகாப்பு சட்டம், வான்எல்லை சட்டம் என்றும் பன்னாட்டு சட்டங்களின் பிரிவுகள், தரைவழி, கடல்வழி, ஆகாய வழி என்று நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைகளை வரையறுக்கிறது. வான்எல்லைச் சட்டங்களின் மூலம் ஒரு நாட்டின் ஆகாய விமானம் இன்னொரு நாட்டின் வான் எல்லையில் பறக்கும்போது அனுமதி பெற்ற பிறகே பறக்க வழி செய்கிறது.