4 . சட்டத்தின் மூல ஆதாரங்கள்:
அ) வழக்காறுகள் (Customs)
சட்ட உருவாக்கத்திற்கு பழக்கவழக்கங்கள் மிகவும் உதவி புரிந்துள்ளன. பழக்கவழக்கங்களின் மூலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வழக்காறுகள் யாவும் நாளடைவில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகின. ஒரு நாட்டின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் அரசால் மறுதலிக்க முடிவதில்லை. இன்றளவில் இங்கிலாந்தின், பொது சட்டமானது வழக்காறுகளில் இருந்து பெறப்பட்டது என்பது ஒரு முக்கிய உதாரணமாகும். உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் மக்களிடையே 'ஏறு தழுவுதல் ' (Bull Taming sport) என்ற பண்பாடு சார்ந்த விளையாட்டானது 2017-ஆம் ஆண்டு 'ஜல்லிக்கட்டு சட்டம்' என்ற புதிய சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது.
ஆ) மதம் (Religion)
ஆதிகால சமூகங்கள் பின்பற்றிய மத சம்பிரதாயங்களும் அரசினுடைய, சட்ட உருவாக்கத்தில் பெரிதான பங்கை ஆற்றியுள்ளது. பெரும்பான்மையான நாடுகளில் மதமே சட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்து மதச் சட்டமானது பெரும்பாலும் மனுவின் விதிமுறையிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இஸ்லாமியச் சட்டமானது ஷரியத் சட்டங்களின் மூலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. தெய்வீகச் சட்டமானது, மனிதனின் மூலமாக கடவுள் வழங்கிய சட்டங்கள் என்று கருதப்படுகிறது. தெய்வீக சட்டத்தின் ஆதிமூலமாக கடவுளே இருப்பதாகக் கருதப்படுகிறது. கிறித்துவர்களுக்கு, அவர்களின் பரமபிதா முதன் முதலில் அருளிய பத்து கட்டளைகளே சட்டத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
செயல்பாடு
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு
இந்த படம் ஏறுதழுவுதல் என்ற தமிழரின் பண்பாடு விளையாட்டான ஜல்லிகட்டு பற்றியது ஆகும். இது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும். அலங்காநல்லூர் என்றால் ஜல்லிகட்டு என்றும், ஜல்லிகட்டு என்றால் அலங்காநல்லூர் என்றும் அழைக்கப்படுமளவுக்கு அவ்வூரின் பண்பாடு மற்றும் வரலாற்றுடன் அவ்விளையாட்டு ஒன்றிணைந்துள்ளது. இது பொதுவாக பொங்கல் கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஒரு தமிழர் பண்பாட்டு விழாவாகும். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் தங்கள் பண்பாட்டையும், மரபையும் காப்பதற்கான உரிமை ஆகியவை உண்டு. ஆனால் ஜல்லிகட்டு என்பதில் பண்பாட்டிற்கும், விலங்குகளின் உரிமைக்கும் இடையே முரண்பாடு தோன்றியது. அரசமைப்பின் பகுதி மூன்றில் அடிப்படை உரிமை உறுப்பு 29(1) -இல் கல்வி மற்றும் பண்பாடு உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 2014 -இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "விலங்குகளும் புலன் உணர்வு கொண்டவை, ஆதலால் அடிப்படை உரிமை உறுப்பு 29(1)-படி வாழும் உரிமையைப் பெறுகின்றன என்றும் ஆதலால் அவற்றைதுன்புறுத்துவதை அனுமதிக்க இயலாது என தீர்ப்பு கூறியது. இந்த முரண்பாடுகள் இவ்விளையாட்டை முறைப்படுத்துவதில் பல்வேறு விளக்கங்களுக்கு வித்திட்டன.
இ) வழக்குமன்றங்களின் முடிவுகள் (Judicial Decisions)
நீதித்துறையின் செயல்பாடானது சட்டங்களை தெளிவுபடுத்தவும், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுமாக அமைகிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் புதிய சட்டங்களாக உருவாகின்றன. அதன் பிறகே இவ்வகை சட்டங்கள் அரசு மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. எனவே, நீதிமன்ற தீர்ப்புகள் இவ்வகையில் புதிய பல சட்டங்களை உருவாக்குவதற்கு மூல ஆதாரமாக அமைகிறது. சிலசமயங்களில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டங்களாக பாவிக்கப்படுகின்றன.
ஈ) சமச்சீராக்கம் (Equity)
சட்டங்கள் எப்போதெல்லாம், தெளிவற்று சூழ்நிலைக்கு பொருந்தாமல் இருக்கிறதோ, அந்தச் சமயங்களில் இந்த சம நீதி பங்கிலான கொள்கைகளும், நல்லியல்புகளும், பொது அறிவு அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு அக்குழப்பமான சூழலுக்கானத் தீர்வு காணப்படுகிறது. ஆங்கிலேய சட்டத்தின்படி சமச்சீராக்கம் என்பது இங்கிலாந்து உயர் நீதி மன்றத்தால் மட்டுமே அமல்படுத்த கூடிய விதிகளின் தொகுப்பாகும்.
உ) அறிவியல் விளக்கவுரைகள் (Scientific Commentaries)
சட்ட வல்லுநர்களின் அறிவியல் விளக்கவுரைகள், மற்றுமொரு சட்டமூலமாக விளங்குகின்றன. முதன் முதலில் இத்தகைய அறிவியல் விளக்கவுரைகள் தோன்றியபோது, அனைவரும் அதனை ஒரு வாதமாக மட்டுமே வர்ணித்தார்கள். நாளடைவில் இதன் சிறப்புத் தன்மையும், அதிகாரமும், நீதி மற்றும் நீதிமன்ற முடிவுகளையும் விட அதிகாரத்துவம் பெற்று விளங்கியது.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் கோக் மற்றும் ப்ளாக் ஸ்டோனின் விளக்கவுரைகள் (Coke and Blackstone), அமெரிக்காவின் ஸ்டோரி மற்றும் கென்ட் (Story and Kent), இந்தியாவின் விஜ்நானேஸ்வரா மற்றும் அபரார்கா (Vijnaneswaa and Aprarka) ஆகியோரின் விளக்கவுரைகளைக்கூறலாம்.- அப்பாதுரை
ஊ) சட்டமன்றம் (Legislature)
தற்காலத்தில் பெரும்பான்மையான சட்டங்கள் சட்டமன்றத்தின் மூலமே இயற்றப்படுகிறது. சட்டத்தின் மிக முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக இது உள்ளது. பிற நாட்டு அரசமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களைப் பெற்று அதை தன் சொந்த நாட்டின் நன்மைக்கு பயன்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாக இந்திய அரசமைப்பு உள்ளது.
இந்திய அரசமைப்பின் ஆதாரங்கள்:
❖ இந்திய அரசாங்க சட்டம் 1935
❖ பிரிட்டன் அரசமைப்பு
❖ அமெரிக்க அரசமைப்பு