Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | உரிமைகள் மற்றும் கடமைகள்
   Posted On :  26.09.2023 09:56 pm

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II

உரிமைகள் மற்றும் கடமைகள்

உரிமைகள் என்பது பொதுவாக உலகில் காணப்படுவது, மேலே உள்ள நீதிநெறி, சட்டம், அரசியல் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவானதே மனித உரிமைகள் ஆகும்.

உரிமைகள் மற்றும் கடமைகள் 


1. அறிமுகம்

உரிமைகள் என்பது பொதுவாக உலகில் காணப்படுவது, மேலே உள்ள நீதிநெறி, சட்டம், அரசியல் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவானதே மனித உரிமைகள் ஆகும். இந்த உரிமைகள் இன்றியமையாதவையாக நவீன காலத்தில் அமைந்துள்ளதற்கு அது அரசமைப்பிலும், பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்களிலும் இடம் பெற்று இருப்பது காரணம் ஆகும். மனித இனத்தில் பிறந்த அனைவரும் மனிதனாக பிறந்ததற்கான அடிப்படையில் மனித உரிமைகளை கொண்டு இருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் அனைத்து மனிதர்களும் சாதி, மத, இன, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து நீதிநெறியிலான சமத்துவத்தின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பெறுகிறார்கள்.


கற்றலின் நோக்கங்கள் 

உரிமைகளின் பொருள் மற்றும் அதன் இயல்புகள் 

உரிமைகள் மற்றும் பொறுப்புக்களுக்கிடையே உள்ள வேற்றுமைகள் 

பல்வேறு வகையான உரிமைகள் 

அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் 

குடிமக்களின் அரசியல் கடப்பாடுகள் 

குடியுரிமை 

சொத்து பற்றிய கோட்பாடுகளின் பார்வை


இயல்புகள் 

உரிமைகள் என்பது மக்களின் சமூக மேம்பாட்டிற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது

  உரிமை என்பது மதம், சாதி, இனம், பாலினம் என்று பாராமல், அனைவருக்கும் கிடைக்க கூடியது.

  உரிமைகள் மற்றும் கடமைகள் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகும்." கடமைகள் இல்லை என்றால் உரிமைகள் இல்லை". 

  உரிமைகள் அனைத்தும் நீதி மன்றத்தில் வழக்கிட்டு பெறக்கூடியது ஆகும்

  மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும்.


உரிமைகளின் வகைகள்:


) இயற்கை உரிமைகள் (Natural Rights)

இந்த வகையான உரிமைகள் மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும். இதனை பற்றி அரசியல் கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளான். இதனை அரசாங்கங்கள் கூட மறுக்க இயலாது


) நீதிநெறி உரிமைகள் (Moral Rights)

நீதிநெறி உரிமை என்பது நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றியது ஆகும். இது அறநெறியின் படி மக்களை முழுமையாக வழி நடத்தி செல்கின்றது


) சட்ட உரிமைகள் (Legal Rights)

சட்ட உரிமைகள் என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க கூடிய ஒன்றாகும். இதில் எவ்வித பாகுபாடும் இன்றி பின்பற்றப்படுகிறது. சட்ட உரிமைகள் என்பது அரசினால் ஏற்று கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் ஆகும். சட்ட உரிமைகள் என்பது மூன்று வகைப்படும்

(i). குடிமை உரிமைகள் (Civil Rights)

இந்த வகையான உரிமைகள் ஓர் மனிதன் சமூகத்தில் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இது அரசினால் பாதுக்காக்கப்படுகிறது. அதாவது உயிர் வாழுகின்ற உரிமை, சுதந்திரம், மற்றும் சமத்துவம் ஆகிய குடிமை உரிமைகளை அரசு நிலைநாட்டி பாதுகாக்கிறது.

(ii). அரசியல் உரிமைகள் (Political Rights)

மக்கள் தங்களது நன்னடத்தையின் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்வது அரசியல் உரிமைகள் ஆகும். இது வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பொதுப் பதவி வகிக்கும் உரிமை போன்றவை ஆகும்

(iii). பொருளாதார உரிமைகள் (Economic Rights)

இந்த உரிமைகள் தனிமனிதனுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாகும். .கா பொருளாதார உரிமை என்பது ஒருவருக்கு வேலைவாய்ப்பு உரிமை, தகுந்த பாதுகாப்பு உரிமை, சமூக பாதுகாப்புரிமை போன்றவை ஆகும்


) ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள் (Contractual Rights)

இவ்வகையான உரிமைகள் என்பது தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படுகிறது


) மனித உரிமைகள் (Human Rights)

மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பதாகும். இது உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு சட்ட அமைப்பினால் பல்வேறு காலக்கட்டங்களில் உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-10 நாள் பன்னாட்டு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உரிமைகள் மசோதா மற்றும் அடிப்படை உரிமைகள்:

உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் டிசம்பர் 15-ல், 1791-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தனிமனித உரிமைகளின் உத்திரவாதங்களை மிகுந்த வலிமையுடன் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கருத்திணைவு அடிப்படையில் செயல்படுத்த வழிவகை செய்தது.


அடிப்படை உரிமைகள் 

கருத்து சுதந்திரம் மற்றும் இணைய வழி சவால்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில நிகழ்வுகளின் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றும் மீறப்படுகிறதா அல்லது ஆதரவு அளிக்கிறதா என பதிவிடுக

எண். வழக்குகள் ஆதரவு / உரிமை மீறல் 


1. ஒரு பெண் பார்வையாளர் கலைக்கூடப் பகுதிக்கு செல்வதை அவரது பாலினம் அடிப்படையில் தடை செய்தல் 

2. சிறுபான்மையினர் தங்களுக்கான தனிப்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிக்க முடியும்

3. ஸ்ரேயா சிங்கல் (Shreya Singhal) என்பவர் டெல்லியில் வசிக்கும் 21 வயது பெண் ஆவார். இவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66A மீதுள்ள சந்தேகத்தினால் அதனை எதிர்த்து தாக்கல் செய்துள்ளார்

4. கேலிச்சித்திர வரைவாளர் (Cartoonist) அசிம் த்ரிவேதி மீது மகாராஷ்டிர அரசு ராஜதுரோக வழக்கு தொடுத்துள்ளது. இது: அவர் இணையதளத்தில் வெளியிட்ட கேலிச்சித்திரம் காரணமாக : தொடுக்கப்பட்டுள்ளது

5. வடகிழக்கு மாநில பெண் ஒருவர் பெங்களூரு மாநகரில் வசிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுதல்

6. சமூக ஊடகங்கள் மீது தடைகளை விதிக்கக்கூடிய சட்டப்பிரிவுகளை உருவாக்கி, ஊடகத்தின் செயல்பாடுகள் முடக்கப்படுவது என்பது குடிமை சமூகத்திற்கு விடுக்கப்படும் சவாலாகும்.

7. 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் மலாலா யூசப்ஜாய் (Malala Yousafezai) என்பவர் பெண் கல்வியை வலியுறுத்தியதற்காக தாலிபான்களால் தலையில் சுடப்பட்டார்.


ஜேம்ஸ் மேடிசன் இந்த 'உரிமைகள் மசோதா'வை அறிமுகப்படுத்தினார். இது, அவர் 1776இல் வெளியிட்ட புகழ்பெற்ற வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும். உரிமைகள் மசோதா என்பது இங்கிலாந்தின் மகாசாசனம் (Magna Carta) (1215) மற்றும் ஆங்கில உரிமைகள் மசோதா (1689) ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது. - ஜேம்ஸ் மேடிசன்


அடிப்படை உரிமைகள்


உங்களுக்குத் தெரியுமா?

அரசமைப்பு நிர்ணயசபையானது இந்திய அரசமைப்புச்சட்டத்தினை வரையறை செய்ய 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் எடுத்துக்கொண்டது.


செயல்பாடு

கேலிச்சித்திரத்தைப் பார்த்து என்ன அனுமானிக்கிறீர்கள்? (தி இந்து 5.12.2012).


தயவு செய்து பீதியடையாதீர்கள்?

இந்தச் சட்டம் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் பாதி கூட மூர்க்கத்தனமானது இல்லை என்பதனை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66A எதைப்பற்றிக் கூறுகிறது.

-----------------------------------------------------------------------

இந்திய அரசமைப்பின் சட்டப் பகுதி III -இல் அடிப்படை உரிமைகள் உள்ளன.. 

சமத்துவ உரிமை (Right to Equality)

சமத்துவ உரிமை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உத்திரவாதத்தினை அளிக்கிறது. இது சாதி, மதம், மொழி, இனம், பாலினம் ஆகியவற்றிலான பாகுபாட்டை தடை செய்கின்றது

சுதந்திர உரிமை (Right to Freedom)

சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து உரிமை, பொது இடத்தில் ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுதல், சங்கம் அமைக்கும் உரிமை, நாடு முழுவதும் சுதந்திரமாக உலவுகின்ற உரிமை போன்றவற்றை வழங்குகிறது

வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் (Right to Life and Personal Liberty)

எந்த ஒரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்பட கூடாது. அதாவது எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை அவனுக்கு தெரிவிக்காமல் காவலில் வைக்கக் கூடாது. மேலும் அவர் தனது சார்பாக வாதாட ஒரு வழக்குறைஞரை தேர்தெடுத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட வேண்டும்

தடுப்புக்காவல் (PreventiveDetention)

தடுப்புக் காவல் என்பது காலத்தின் கட்டாயத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரின் செயலை தடுப்பதற்கானதாகும். தடுப்பு காவல் என்பது ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும், தேசப்பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். இதற்காக அந்த நபரைக் கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

செயல்பாடு

மக்களாட்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஏற்றுகொள்கிறேன் / மறுக்கிறேன் 

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் எது சரியாக இருக்கும் என்று கருதுகின்றீர்களோ அதனை அதில் குறிப்பிடவும்

  பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கல்வி அறிவு வழங்கப்பட்டால் அது அவர்களுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது

  பெண்கள் எப்போதும் ஆண் துணைகளைச் சார்ந்தே இருப்பார்கள். உதாரணமாகதந்தை,கணவர், சகோதரர், மற்றும் மகன் ஆகியோரைக் குறிப்பிடலாம்

  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி அளிக்கபட்டால் பொருளாதாரம் வளரும், உடல்நலம் மேம்படும், நாடு எழுச்சியுறும்

  பெண்கள் வீட்டை பராமரிப்பதற்கும், சமையல் செய்யவும் மட்டுமே உள்ளனர்

  பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோர் பொதுவாக நடனம், ஓவியம், மற்றும் சமையல் போன்றவற்றில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்

  கல்வி அறிவு என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொடுக்கும். மேலும் அமைதியையும், அதிகாரத்தையும் அளிக்கும்

  மாலாலா யூசுப்சாய் (Malala Yousufzai) என்ற 17 வயது பாகிஸ்தான் நாட்டு இசுலாமிய இளம்பெண் ஒருவர் பெண் கல்விக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்

நான் இதனை ஏற்றுகொள்கிறேன்

----------------------------------------

நான் இதனை மறுக்கிறேன்


சுரண்டலுக்கு எதிரான உரிமை (Right Against Exploitation)

குழந்தைத் தொழிலாளர் முறை, ஆட்கடத்தல் செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்தல் குழந்தைகளைக் கட்டாயப் பணி செய்ய வைத்தலின் வடிவங்களாகும். மேலும் இது பதினான்கு வயதிற்குட்பட்ட சிறார்களை தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எத்தொழிலும் ஈடுபட வைப்பதை தடை செய்கிறது.


மத சுதந்திர உரிமைகள் (Right to Freedom of Religion)

இந்தியாவில் அனைத்து மக்களும் தங்களது மதம் மற்றும் நம்பிக்கையினைத் தேர்தெடுத்து அதன்வழி செல்லும் உரிமையை அரசமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. அரசமைப்பின் உறுப்பு 26-ன் படி ஒவ்வொருவரும் மத விவகாரங்களின் அடிப்படையில் சேவை புரிவதற்காக நிறுவனங்களை உருவாக்கி, அதற்கென அசையும் மற்றம் அசையாச் சொத்துக்களை உரிமையாக்கி சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிப்பதாகும்

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (Cultural and Educational Rights)

இந்தியாவின் மதம், மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான சிறுபான்மையினர், குழுக்கள் அல்லது பிரிவினருக்கு அரசமைப்பின் மூலம் இந்த அரசியல்சாராத உரிமைகள் வழங்கப்படுகிறது.

எந்த குடிமகனும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்கு உரிமையுண்டு என்பதனை மறுக்க இயலாது. இந்த உரிமையை சாதி, மதம், இனம், பாலினம், நம்பிக்கை போன்றவற்றைக் காரணம் காட்டி மறுக்க இயலாது. குடிமக்கள் தாங்கள் விரும்பும் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்றும் உரிமை உள்ளது. எந்த ஒரு கல்வி நிறுவனமாவது இந்த அடிப்படையில் பாகுபாடு காட்டுமாயின் அரசின் நிதி உதவி அந்தக் கல்வி நிறுவனத்திற்கு மறுக்கப்படும். மேலும் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்விதமான கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை அரசு வலியுறுத்த முடியாது. அந்தக் கல்வி நிறுவனங்களை அவரவர்களது பண்பாட்டினை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற அனுமதிக்க வேண்டும்.

செயல்பாடு

1. இந்தியாவில் எத்தனை மொழிகள், எழுத்துவடிவங்கள், மற்றும் வட்டார வழக்கு மொழிகள் உள்ளன எனக் கண்டுபிடி

2. இந்தியாவின் ஆட்சி மொழிகள் யாவை?

அரசமைப்பு சட்ட பரிகார உரிமைகள் (Right to Constitutional Remedies)

அரசமைப்பின் உறுப்பு 32-இன்படி உச்ச நீதிமன்றம் பரிகாரம் செய்யலாம். அதுவே அரசமைப்புச் சட்ட உறுப்பு 226-இன்படி உயர்நீதிமன்றம் பரிகாரம் செய்கின்றது. இதற்காக நீதிமன்றம் நீதிப்பேராணைகளை பிறப்பிக்கிறது. இவைகள், ஐந்து வகைப்படும்

  ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)

  கட்டளை நீதிப் பேராணை (Writ of Mandamus) 

  சான்றாய்வு நீதிப் பேராணை (Writ of Certiorari) 

  தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto) 

  தடைநீதிப் பேராணை அல்லது தடை உத்தரவு (Writ of Prohibition or Injunction)

ஆகவே அடிப்படை உரிமைகள் என்பது தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கின்ற கருவியாக நம் நாட்டில் பயன்படுகிறது. அந்த வகையில் அடிப்படை உரிமைகளை செயல்படுத்தும்போது, மக்களாட்சி அடிப்படையிலான வாழ்க்கை முறையும் அதன் அடிப்படைக்கொள்கைகளான சமத்துவம் மற்றும் நீதியையும் சமூகத்தில் நிலைநிறுத்துகிறது. அடிப்படை உரிமைகள் நம் நாட்டின் சுதந்திரத்தில் ஒரு மைல்கல் ஆகும். இது வழக்கு விசாரணை மற்றும் பெருந்துன்பத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்துள்ளதாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

இந்திய அரசமைப்பின் உயிர் மற்றும் இதயமாக எதனை நீங்கள் கருதுவீர்கள்?


புதிய உரிமைகள்:

தகவல் அறியும் உரிமை (Right to Information)

தகவல் உரிமை சட்டம் 2005 அரசாங்கத்திடம் மக்கள் தகவல்கள் கேட்பதனை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்தச்சட்டமானது அரசாங்கங்களை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், குடிமக்களுக்கு பொறுப்புணர்வு கொண்டதாகவும் மாற்றியுள்ளது. இதன் மூலமாக அரசின் நடவடிக்கைகளை தகவலறிந்த குடிமக்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும். இதனால் அரசாங்கம் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது

தனியுரிமை (Right to Privacy)

அரசிடம் தனி மனிதனின் அனைத்து உரிமைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தனியுரிமை என்பது மனிதனின் மாண்புடன் ஒன்றிணைந்ததாகும். தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு அரசமைப்பின் உறுப்பு 21-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். இந்த உரிமைகள் அரசமைப்பின் பகுதி - III - இல் இடம் பெற்றுள்ளது.

செயல்பாடு 

ஒவ்வொரு கேள்விக்கான குறியீட்டிற்கும் அதற்குத் தொடர்புடைய உதாரணத்தைத் தருக.


மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகள் (Rights of Transgenders)

மாற்றுப்பாலினத்தவர் தங்களது குணாதிசயங்களில் ஆடவர் அல்லது மகளிரிடமிருந்து மாறுபட்டு காணப்படுவார்கள். வெகு சமீப காலங்களில் தான் அவர்களின் பிரச்சனைகள் பேசப்படுகின்றன. அவர்கள் இப்போது 'மூன்றாம் பாலினம்' என்று அழைக்கப்படுகின்றனர். உச்சநீதிமன்றமானது இவர்களின் பாலின அடையாளத்தினை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கும்படி கூறியுள்ளது. மாற்றுப்பாலினத்தவக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

11th Political Science : Chapter 4 : Basic Concepts of Political Science Part II : Rights and Duties in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II : உரிமைகள் மற்றும் கடமைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II