அ) இயற்கை உரிமைகள் (Natural Rights)
இந்த வகையான உரிமைகள் மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும். இதனை பற்றி அரசியல் கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளான். இதனை அரசாங்கங்கள் கூட மறுக்க இயலாது.
ஆ) நீதிநெறி உரிமைகள் (Moral Rights)
நீதிநெறி உரிமை என்பது நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றியது ஆகும். இது அறநெறியின் படி மக்களை முழுமையாக வழி நடத்தி செல்கின்றது.
இ) சட்ட உரிமைகள் (Legal Rights)
சட்ட உரிமைகள் என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க கூடிய ஒன்றாகும். இதில் எவ்வித பாகுபாடும் இன்றி பின்பற்றப்படுகிறது. சட்ட உரிமைகள் என்பது அரசினால் ஏற்று கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் ஆகும். சட்ட உரிமைகள் என்பது மூன்று வகைப்படும்.
(i). குடிமை உரிமைகள் (Civil Rights)
இந்த வகையான உரிமைகள் ஓர் மனிதன் சமூகத்தில் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இது அரசினால் பாதுக்காக்கப்படுகிறது. அதாவது உயிர் வாழுகின்ற உரிமை, சுதந்திரம், மற்றும் சமத்துவம் ஆகிய குடிமை உரிமைகளை அரசு நிலைநாட்டி பாதுகாக்கிறது.
(ii). அரசியல் உரிமைகள் (Political Rights)
மக்கள் தங்களது நன்னடத்தையின் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்வது அரசியல் உரிமைகள் ஆகும். இது வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பொதுப் பதவி வகிக்கும் உரிமை போன்றவை ஆகும்.
(iii). பொருளாதார உரிமைகள் (Economic Rights)
இந்த உரிமைகள் தனிமனிதனுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாகும். எ.கா பொருளாதார உரிமை என்பது ஒருவருக்கு வேலைவாய்ப்பு உரிமை, தகுந்த பாதுகாப்பு உரிமை, சமூக பாதுகாப்புரிமை போன்றவை ஆகும்.
ஈ) ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள் (Contractual Rights)
இவ்வகையான உரிமைகள் என்பது தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படுகிறது.
உ) மனித உரிமைகள் (Human Rights)
மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பதாகும். இது உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு சட்ட அமைப்பினால் பல்வேறு காலக்கட்டங்களில் உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-10 நாள் பன்னாட்டு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உரிமைகள் மசோதா மற்றும் அடிப்படை உரிமைகள்:
உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் டிசம்பர் 15-ல், 1791-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தனிமனித உரிமைகளின் உத்திரவாதங்களை மிகுந்த வலிமையுடன் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கருத்திணைவு அடிப்படையில் செயல்படுத்த வழிவகை செய்தது.