நாம் ஏன் அரசுக்கு கீழ்படிய வேண்டும்? அது தேவையானதா?
இக்கோட்பாடுகள் அரசியல் கடப்பாடு பற்றியவையாக இருந்தாலும் சில புலனாகாதவை மற்றும் சில கோட்பாடுகள் தர்க்க அடிப்படையில் பொருத்த மற்றவையாகும். எந்த காரணத்திற்காக தனி மனிதன் அரசிடம் கீழ்ப் படிகிறான் என்பதைக் காண்போம்.
அ) தண்டணை பற்றிய பயம்
நமது கடமைகளை செய்யாத போது பயம் வருகிறது. அதே போன்று தண்டனை கிடைக்கும் என்ற பயத்தின் காரணமாகவே தனிமனிதர்கள் தங்களின் பணிகளைச் செய்கிறார்கள். அரசு தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தியே மனிதனை முறைமைக்குத் தக்கவாறு விதிகளை பின்பற்றவைக்கின்றது.
ஆ) தேசப்பற்று
தேசிய கீதத்திற்கு ஏன் எழுந்து நிற்கிறீர்கள்? அவ்வாறு நிற்பதற்குக் காரணம் தேசப்பற்று ஆகும். நாம் நமது நாட்டினை நேசிக்கிறோம். ஆதலால் நாட்டின் மீது குடிமகன் என்ற முறையில் அக்கறை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
இ) சமூக ஒழுங்கின்மை மற்றும் அமைப்பெதிர்வாதம் பற்றிய பயம்
மனித இனம் அமைதியையும், ஒழுங்கினையும் விரும்புவது பொதுவான கொள்கையாகும். சட்டத்திற்கு கீழ்படிதலையும் மனிதர்கள் விரும்பியே ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு சட்டத்திற்கு கீழ்படியாதவர்களை மனிதன் தனித்துப் பார்க்கிறான்.
ஈ) மரபுகள் மற்றும் பழக்கங்கள்
நாம் அனைவரும் துணிவு, நேர்மை, வீரம், ஒழுக்கம், கீழ்படிதல் போன்ற நல்லொழுக்கங்களை பழக்கங்களாகவே பின்பற்றி வருகிறோம். இது நமக்கு மரபார்ந்த விழுமியங்களால் ஏற்பட்டதாகும். இதே போன்று நாட்டில் குடிமக்கள் நல் மரபுகளை நிறுவ விரும்புவதுடன் அரசுக்குக் கீழ்படிதல், போன்ற செயல்களும் பழக்கமாகின்றன.
ஆகவே அரசியல் கடப்பாடு என்பது தேசிய அளவில் சிறந்த முறைமையை நிர்வகிக்க அவசியமாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் ஒவ்வொருவரும் அரசிடமிருந்து சிறந்த கைமாறு எதிர்பார்த்தால் சட்டத்தினை மதித்து கீழ்படிய வேண்டும்.
விவாதம்
சொத்துக்களில் சமத்துவமின்மை பற்றி கூர்ந்து விவாதிப்போம்
நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் குடும்ப சொத்து என்பது தந்தைக்கு பின் அவரது மகன்களுக்கு மட்டுமே பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால் அதே தந்தைக்குப் பிறந்த ஒர் மகளுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை . 1956 - ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டம் பெண்களுக்கும் ஆண்களைப் போன்று பிரிக்கப்படாத குடும்ப பாரம்பரிய சொத்தில் சமமான பங்கு உண்டு என உரிமையை வழங்கியுள்ளது.
கூர்ந்து விவாதிக்கவும்
ஆசிரியர் வகுப்பில் இரண்டு குழுக்களை பிரித்து, ஒவ்வொன்றிலும் மூன்று உறுப்பினர்களையும் மற்றும் ஒரு நடுவரையும் நியமனம் செய்ய வேண்டும். பின்னர் இந்து வாரிசு உரிமை சட்டம் பற்றி விவாதிக்கவும். ஒரு குழு 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு குழு அந்தச் சட்டத்திற்கு எதிராகவும் விவாதம் செய்யவும்.