Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசியல் கடப்பாடு (Political Obligation)
   Posted On :  26.09.2023 10:17 pm

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II

அரசியல் கடப்பாடு (Political Obligation)

அரசியல் கடப்பாடுகள் என்பது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை ஒருவர் நிறைவேற்றுவதற்கான பிணைப்பாகும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுய நலத்திற்காகவும், சமுதாய நலத்திற்காகவும் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுகிறான்.

அரசியல் கடப்பாடு (Political Obligation)

அரசியல் கடப்பாடுகள் என்பது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை ஒருவர் நிறைவேற்றுவதற்கான பிணைப்பாகும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுய நலத்திற்காகவும், சமுதாய நலத்திற்காகவும் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுகிறான். அரசாங்கம் எப்படி குடிமக்களுக்கு பொறுப்பானதோ, அதே போன்று குடிமக்களும் அரசாங்கத்திற்கு பொறுப்பானவர்கள் ஆவர்


1. அரசியல் கடப்பாடு மற்றும் அரசியல் அதிகாரத்துவம் (Political Obligation and Political Authority)

ஒரு அரசு, அரசியல் அதிகாரத்துவம் கொண்டு இருந்தால் அதனால் கீழ்படியாதவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தமுடியும். உதாரணமாக அரசால் வரி விதிக்கப்படுகிறது எனில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரி வசூல் செய்ய அரசால் முடியும். எனினும் அரசு அவ்வாறு செய்ய வில்லை என்றால் கூட குடிமகன் தார்மீக அடிப்படையில் அரசின் சட்டத்தினை மதித்து அதற்கு கீழ்ப்படிய வேண்டும். எனவே அரசியல் கடப்பாடு என்பது எங்கும் நிறைந்திருக்கக்கூடிய தற்கால தேசிய அரசில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியதாகும்

அரசியல் கடப்பாடுகள் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும் 

(i) அடையாளம் காண கூடிய அதிகாரத்திடம் அரசியல் கடப்பாடுகளை காண்பித்தல் 

(ii) எதுவரை அரசியல் கடப்பாடுகளைஆற்ற வேண்டும்

(iii) அரசியல் கடப்பாடுகளின் அடிப்படை (The Basis of Political Obligations)

அரசியல் கடப்பாட்டின் இயல்புகள் (Features Political Obligations)

அரசியல் ஆர்வம் கொள்வதும், சமூகப் பணி செய்தலும் விரும்பத்தக்கதாக உள்ளது

  பொதுப்பணி செய்பவர்களுக்கு நாணயம் மற்றும் நேர்மை ஆகியவை இன்றியமையாத அம்சங்களாகும்

  சட்டபூர்வ தன்மை மற்றும் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இருக்க வேண்டும்

  குடிமக்கள் தங்களது காப்பாளரை பாதுகாக்கின்ற பொறுப்பினைக் கொண்டுள்ளனர்.

வளமான இந்தியாவிற்க்கு வாக்களியுங்கள் 

உங்கள் வாக்கு பொன்னானது ...... வாக்களியுங்கள்



அரசியல் கடப்பாடுகளின் வகைகள்:

அரசியல் கடப்பாடுகள் நான்கு வகைப்படும்.

) நீதிநெறி கடப்பாடு (Moral Obligation) 

வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்கிறீர்களா? ஏழைகளுக்கு உதவுகிறீர்களா? வயதான பெற்றோரை பேணுகிறீர்களா? இவை உங்களின் நீதி நெறி சார்ந்த கடப்பாடுகள் ஆகும். இது சமூகத்தில் சட்டத்தின் படி நடைபெறுவதில்லை. மேலும் இவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் உங்களுக்கு சட்டப்படியான தண்டனை எதுவும் கிடையாது

)  சட்டப்படியான கடப்பாடு (Legal Obligation) 

நம் நாடு மக்கள் நல அரசு கொள்கையைக் கொண்ட நாடாகும். இதில் அரசாங்கமானது நாட்டிற்கு உள் கட்டமைப்பு, வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சாலை வசதி, சுகாதார மையங்கள், மருத்துவம், கல்வி, போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை என்பதற்கான சில உதாரணங்களாகும்

) நேர்மறை கடப்பாடு (Positive Obligation) 

அரசு சில விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துகிறது. அவற்றை நம்மால் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. இவற்றைத்தான் நேர்மறை கடப்பாடு என்று கூறுகிறோம். உதாரணமாக வரி செலுத்துதல், நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல்

)  எதிர்மறை கடப்பாடு (Negative Obligation) 

அரசால் தடுக்கப்பட்ட எந்தவொரு செயலையும் ஒரு குடிமகன் செய்யாமல் இருப்பதே எதிர்மறை கடப்பாடு ஆகும். குற்றம் செய்தல் என்பதே ஓர் எதிர்மறைக் கடப்பாடாகும்

நீங்கள் அரசுக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடுகள் எவை?   

நண்பர்களுடன் விளையாடுதல்   

தேர்தல் நேரத்தில் வாக்களித்தல்   

சகோதர / சகோதரிக்கு கற்பித்தல்   

அரசுக்கு வரி செலுத்துதல்   

பொது பணியில் சேருதல்   

அவசர காலத்தில் இராணுவத்தில் பணிபுரிதல்


அரசமைப்புச் சட்டம் கூறும் முக்கிய கடப்பாடுகள் 

எந்தவொரு சட்டமும் நல்லது செய்யவில்லை என்றால் அதனை மாற்றிவிட வேண்டும். சில சமயங்களில் சில சட்டங்களை அரசு உருவாக்கும் போது அவை மக்களுக்கு தீங்கு விளைவித்தாலும் அதற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இத்தகைய சட்டமே நீராவி உருளைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சட்டங்களை கடுமையாக எதிர்ப்பது குடிமக்களின் கடமை ஆகும். இதன் மூலமாக நாம் அறிவது அரசியல் கடப்பாடுகள் என்பது சட்டத்தினை மதித்து நடப்பது மட்டுமல்ல சில சமயங்களில் சமுதாய நலனுக்கு எதிராக இருந்தால், சட்டத்தினை எதிர்க்கச் சொல்வதும் அரசியல் கடப்பாடுகளே ஆகும்


அரசியல் கடப்பாடு பற்றிய கோட்பாடுகள் (Theories of Political Obligation)

வாழ்க்கையில் நாம் அனைவரும் பல கோட்பாடுகளை பின்பற்றி வருகிறோம். அதேபோன்று அரசியல் கடப்பாடுகள் பற்றி சில கோட்பாடுகளை இங்கு காண்போம்

) தெய்வீகக் கோட்பாடு (Divine Theory) 

முற்காலத்தில் மக்கள் நினைத்தது என்னவென்றால்அரசினை கடவுள் படைத்தார் என்றும், அரசர் கடவுளின் பிரதிநிதியாவார்என்றும் அவர்கள் நம்பினார்கள். இந்தப்கோட்பாடு முற்காலத்திலும், இடைக் காலத்திலும் புகழ் பெற்று இருந்தாலும் தற்காலத்தில் இந்தக் கோட்பாட்டுக்கு இடமில்லை

) ஒப்புதல் கோட்பாடு (Consent Theory) 

அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலானதாகும். ஹாப்ஸ், லாக், ரூசோ போன்றோர் இந்த கோட்பாட்டினை நியாயப்படுத்துவதுடன், அரசின் அதிகாரம் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே அமைகிறது என்று கூறுகிறார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


) பரிந்துரைக் கோட்பாடு (Prescriptive Theory) 

இக்கோட்பாடானது அரசியல் நிறுவனங்கள் என்பவை பழங்காலத்தொட்டு அமைந்து இருந்தன என்று கூறுகிறது. இக்கருத்தினை எட்மண்ட் பர்க்கும் (Edmund Burke) ஆதரிக்கிறார். ஆனாலும் காலப்போக்கில் இது செயல் இழந்து போனதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக நன்கு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை வலியுறுத்தியதாகும்

) இலட்சியவாதக் கோட்பாடு (Idealistic Theory)


இந்த கோட்பாடு மனிதன் மற்றும் அரசு ஆகிய இரண்டும் தனித்தனியான குணகூறுகள் கொண்டவை என்று குறிப்பிடுகிறது. 'மனிதன்' என்பவன் அரசியல் மற்றும் பகுத்தறிவினால் உருவானவன் என்றும், அரசு என்பது சுயசார்புடைய சமூக அமைப்பு என்றும் கூறுகிறது. மேலும் இக் கோட்பாடானது மனிதன் தன் அதிகாரத்தை அரசிடம் இருந்து மட்டுமே பெறுகிறான் எனும் போது அவன் அரசிடம் இருந்து மாறுபடுகின்ற அதிகாரத்தை இழக்கின்றான் என்பதே சரியானது ஆகும் என்று கூறுகிறது. இந்த கோட்பாட்டின் கருத்துக்கள் பெரும்பாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கற்பனையாக அமைந்துள்ளது

) மார்க்சின் கோட்பாடு (Marxian Theory)

மார்க்சின் கோட்பாடு மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது

புரட்சிக்கு முந்தையநிலை

இந்நிலையில் மனிதன் முழுவதும் அரசியல் கடப்பாடுகளின்றி இருப்பதை கூறுகிறது

புரட்சிக்கால நிலை

அரசியல் கடப்பாடு இல்லாத நிலையில் இருந்து மேம்பட்டு முழுவதுமாக அரசியல் கடப்பாட்டுக்கு உட்படுகின்ற நிலைக்கு மாறுவதைப் பற்றியது, இந்த புரட்சிக்கால நிலையாகும்.

புரட்சிக்குப் பிந்தையநிலை

இந்த நிலையானது முழுவதுமான அரசியல் கடப்பாடுகளில் இருந்து சமூக மேம்பாட்டிற்கு மாறும் நிலை பற்றியதாகும்


நாம் ஏன் அரசுக்கு கீழ்படிய வேண்டும்? அது தேவையானதா?

இக்கோட்பாடுகள் அரசியல் கடப்பாடு பற்றியவையாக இருந்தாலும் சில புலனாகாதவை மற்றும் சில கோட்பாடுகள் தர்க்க அடிப்படையில் பொருத்த மற்றவையாகும். எந்த காரணத்திற்காக தனி மனிதன் அரசிடம் கீழ்ப் படிகிறான் என்பதைக் காண்போம்

) தண்டணை பற்றிய பயம்

நமது கடமைகளை செய்யாத போது பயம் வருகிறது. அதே போன்று தண்டனை கிடைக்கும் என்ற பயத்தின் காரணமாகவே தனிமனிதர்கள் தங்களின் பணிகளைச் செய்கிறார்கள். அரசு தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தியே மனிதனை முறைமைக்குத் தக்கவாறு விதிகளை பின்பற்றவைக்கின்றது

) தேசப்பற்று

தேசிய கீதத்திற்கு ஏன் எழுந்து நிற்கிறீர்கள்? அவ்வாறு நிற்பதற்குக் காரணம் தேசப்பற்று ஆகும். நாம் நமது நாட்டினை நேசிக்கிறோம். ஆதலால் நாட்டின் மீது குடிமகன் என்ற முறையில் அக்கறை உணர்வுடன் செயல்பட வேண்டும்

) சமூக ஒழுங்கின்மை மற்றும் அமைப்பெதிர்வாதம் பற்றிய பயம்

மனித இனம் அமைதியையும், ஒழுங்கினையும் விரும்புவது பொதுவான கொள்கையாகும். சட்டத்திற்கு கீழ்படிதலையும் மனிதர்கள் விரும்பியே ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு சட்டத்திற்கு கீழ்படியாதவர்களை மனிதன் தனித்துப் பார்க்கிறான்

) மரபுகள் மற்றும் பழக்கங்கள்

நாம் அனைவரும் துணிவு, நேர்மை, வீரம், ஒழுக்கம், கீழ்படிதல் போன்ற நல்லொழுக்கங்களை பழக்கங்களாகவே பின்பற்றி வருகிறோம். இது நமக்கு மரபார்ந்த விழுமியங்களால் ஏற்பட்டதாகும். இதே போன்று நாட்டில் குடிமக்கள் நல் மரபுகளை நிறுவ விரும்புவதுடன் அரசுக்குக் கீழ்படிதல், போன்ற செயல்களும் பழக்கமாகின்றன.

ஆகவே அரசியல் கடப்பாடு என்பது தேசிய அளவில் சிறந்த முறைமையை நிர்வகிக்க அவசியமாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் ஒவ்வொருவரும் அரசிடமிருந்து சிறந்த கைமாறு எதிர்பார்த்தால் சட்டத்தினை மதித்து கீழ்படிய வேண்டும்.


விவாதம்


சொத்துக்களில் சமத்துவமின்மை பற்றி கூர்ந்து விவாதிப்போம்

நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் குடும்ப சொத்து என்பது தந்தைக்கு பின் அவரது மகன்களுக்கு மட்டுமே பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால் அதே தந்தைக்குப் பிறந்த ஒர் மகளுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை . 1956 - ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டம் பெண்களுக்கும் ஆண்களைப் போன்று பிரிக்கப்படாத குடும்ப பாரம்பரிய சொத்தில் சமமான பங்கு உண்டு என உரிமையை வழங்கியுள்ளது

கூர்ந்து விவாதிக்கவும்

ஆசிரியர் வகுப்பில் இரண்டு குழுக்களை பிரித்து, ஒவ்வொன்றிலும் மூன்று உறுப்பினர்களையும் மற்றும் ஒரு நடுவரையும் நியமனம் செய்ய வேண்டும். பின்னர் இந்து வாரிசு உரிமை சட்டம் பற்றி விவாதிக்கவும். ஒரு குழு 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு குழு அந்தச் சட்டத்திற்கு எதிராகவும் விவாதம் செய்யவும்.

11th Political Science : Chapter 4 : Basic Concepts of Political Science Part II : Political Obligation in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II : அரசியல் கடப்பாடு (Political Obligation) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி II