அரசியல் அறிவியல் - குடியுரிமை | 11th Political Science : Chapter 4 : Basic Concepts of Political Science Part II
குடியுரிமை
அரசியல் கோட்பாட்டில், குடியுரிமை என்பது குடிமக்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமல்லாது, அரசியல் செயல்பாடுகளில் முழுமையாகவும், சமமாகவும் பங்கேற்கின்ற உரிமையையும் அனைத்து குடிமக்களுக்கும் அளிப்பதாகும். மக்களாட்சியும், குடியுரிமையும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் செல்லக்கூடியது ஆகும்.
குடியுரிமையானது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டதாக இருக்கிறது. தற்கால அரசுகளில், குடியுரிமையானது, குடிமக்களுக்கான உரிமைகள் மட்டுமல்லாது மக்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
இயற்கை குடியுரிமை (Natural Citizenship)
இயற்கையான குடிமக்கள் என்பது இம்மண்ணில் பிறந்ததன் மூலமாக இயற்கையாக அந்த குடியுரிமையை அடைவது ஆகும்.
தகுதி ஆக்கப்பட்டு பெறப்படும் குடியுரிமை (Naturalized Citizenship)
தங்கியிருத்தல், திருமணம் போன்றவற்றால் பெறப்படும் குடியுரிமை தகுதி ஆக்கப்பட்டு பெறப்படும் குடியுரிமை ஆகும்.
அரிஸ்டாட்டிலின் கூற்றுபடி, குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும்.
கிரேக்க மற்றும் ரோமானிய குடியரசுகளில் முக்கியத்துவம் பெற்ற குடியுரிமை நிலப்பிரபுத்துவ காலங்களில் முற்றிலுமாக மறைந்தது. மறுபடியும், மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் மனிதத்தன்மையின் விரும்பத்தக்க பகுதியாக குடியுரிமை மலர்ந்தது. பண்டைய ஏதென்சின், நகர அரசில் குடியுரிமை என்பது அரசின் கடமைகளில் பங்கேற்பதாக அறியப்பட்டது.
சுதந்திர சமூக மக்களாட்சிவாதியான மார்ஷல், குடியுரிமையை மூன்றாக வகைப்படுத்துகிறார். அவை குடிமை, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த குடியுரிமைகளாகும்.
அனைத்து தனிமனிதர்களுக்கும் சுதந்திரம் என்பது குடிமை விவகாரங்களில் தேவைப்படுகிற ஒருமுக்கியமான அம்சமாகும். ஒரு குடிமகனாக, நமக்கு அரசியல் தொடர்பான முடிவெடுக்கும் முறைமையில் பங்குபெறுவதற்கு முழு உரிமை உண்டு. இது அரசியல் வகைப்பாட்டில் பிரதிபலிக்கிறது.
இந்திய அரசமைப்பானது பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்குகிறது.
குடியுரிமை பற்றிய சட்டங்கள், அரசமைப்பின் பகுதி இரண்டிலும் மற்றும் அவை தொடர்பான நாடாளுமன்ற சட்டங்களிலும் காணப்படுகிறது. இந்தியாவில் குடியுரிமையானது, பிறப்பு, வம்சாவழி, பதிவு, இயல்புரிமை மற்றும் பிரதேச உள்ளடக்கத்தின் மூலம் பெறப்படுகிறது. அரசமைப்பின்படி அரசாங்கம் குடிமக்களை இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற நிலைகளில் வேற்றுமைப்படுத்தல் ஆகாது. மேலும் மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மையின மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறது.
கலந்துரையாடல்
ஒரு மகனாகவோ அல்லது மகளாகவோ நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை வகுப்பில் விவாதி.
செயல்பாடு
ஒரு குடிமகனின் நற்பண்புகளை விளக்கப்படமாக தயாரித்து, உனது ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும் பகிர்வு செய்க.
தேசியக் குடியுரிமை என்பது, நாம் குடியிருக்கும் நாட்டின் அரசாங்கம் நமக்களிக்கும் பாதுகாப்பும் உரிமையுமாகும். ஆனாலும் அரசிற்கு தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் பெருமளவில் இருப்பதால், தனிமனித உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு சட்டத்தினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக குடியுரிமை என்பது தேசிய எல்லைகளை கடந்த குடியுரிமையாகும். இவ்வுரிமையானது, பலதரப்பட்ட மக்களும், நாடுகளும் சோந்த கூட்டுறவு நடவடிக்கையை வலியுறுத்துகிறது. இதனால், குடியுரிமை என்பது பல்வேறுபட்ட சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கக்கூடியதாக அமைகிறது. மேலும் உலகளாவிய குடியுரிமை, உலக நாடுகளின் ஒற்றுமையையும், கூட்டுறவின்வலிமையையும்பறைசாற்றுகிறது.
செயல்பாடு
❖ 1955 -ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதன் தற்போதைய சட்ட சீர்திருத்தங்கள் ஆகிவைகளைப் பற்றி உனது வகுப்பறையில் கலந்துரையாடுக.
❖ வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-Resident Indian - NRI), கடல் கடந்து வாழும் இந்தியக் குடிமக்கள் (Overseas Citizen of India-OCI) மற்றும் இந்திய வம்சவளியினர் (Person of Indian Orgin-PIO) ஆகியோரிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டுபிடி.
உங்களுக்குத் தெரியுமா?
வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் (MWPSC Act) 2007-ல், முதியவர்கள் மற்றும் பெற்றோர் நலனுக்காக இயற்றப்படட்டது .
இச்சட்டத்தின் படி......
❖ முதியோருக்கு துரிதமாகவும், பயனுள்ளதாகவுமான நிவாரணத்தை வழங்க "பராமரிப்பு தீர்ப்பாயத்தினை” (Maintenance Tribunal) நிறுவியது.
❖ இச்சட்டத்தின்படி, பராமரிப்பு என்பது உணவு, உடுத்த உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையையும் உள்ளடக்கியது ஆகும்.
❖ இச்சட்டத்தின் ஒரே நிபந்தனையாக, எவரெல்லாம் தன் சொந்த வருமானத்திலும், உடைமையின் மூலமும் தன்னை பராமரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இப்பராமரிப்பின் கீழ் உட்படுவார்கள்.
❖ இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்புச் செலவாக மாதம் ₹10,000 அளிக்க கட்டாயமாக்கப்பட்டது. பராமரிப்புத் தொகையானது, உரிமை கோருபவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கான தேவைகளைப் பொருத்தும் அமைகிறது.
❖ பெற்றோர்களும், முதியோர்களும் அரசாங்கத்தின் இச்சலுகையை அனுபவிக்க, பாரமரிப்பு தீர்ப்பாயத்தின் முன் பராமரிப்பு அதிகாரியிடம் தங்கள் விருப்பங்களை முறையிடலாம். இச்சட்டத்தின்படி, வழக்கறிஞர்கள், தீர்ப்பாயத்தின் முன் எவருக்காவும் வாதாட இயலாது.
❖ முதியோர் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனும் நன்கறிந்தே அவர்களை கைவிடும்பட்சத்தில், 75,000 அபராதமோ அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது மேற்கூறிய இரண்டு தண்டனையுமோ வழக்கப்படலாம்.