அரசியல் கடப்பாடு பற்றிய கோட்பாடுகள் (Theories of Political Obligation)
வாழ்க்கையில் நாம் அனைவரும் பல கோட்பாடுகளை பின்பற்றி வருகிறோம். அதேபோன்று அரசியல் கடப்பாடுகள் பற்றி சில கோட்பாடுகளை இங்கு காண்போம்.
அ) தெய்வீகக் கோட்பாடு (Divine Theory)
முற்காலத்தில் மக்கள் நினைத்தது என்னவென்றால் “அரசினை கடவுள் படைத்தார் என்றும், அரசர் கடவுளின் பிரதிநிதியாவார்” என்றும் அவர்கள் நம்பினார்கள். இந்தப்கோட்பாடு முற்காலத்திலும், இடைக் காலத்திலும் புகழ் பெற்று இருந்தாலும் தற்காலத்தில் இந்தக் கோட்பாட்டுக்கு இடமில்லை.
ஆ) ஒப்புதல் கோட்பாடு (Consent Theory)
அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலானதாகும். ஹாப்ஸ், லாக், ரூசோ போன்றோர் இந்த கோட்பாட்டினை நியாயப்படுத்துவதுடன், அரசின் அதிகாரம் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே அமைகிறது என்று கூறுகிறார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இ) பரிந்துரைக் கோட்பாடு (Prescriptive Theory)
இக்கோட்பாடானது அரசியல் நிறுவனங்கள் என்பவை பழங்காலத்தொட்டு அமைந்து இருந்தன என்று கூறுகிறது. இக்கருத்தினை எட்மண்ட் பர்க்கும் (Edmund Burke) ஆதரிக்கிறார். ஆனாலும் காலப்போக்கில் இது செயல் இழந்து போனதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக நன்கு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை வலியுறுத்தியதாகும்.
ஈ) இலட்சியவாதக் கோட்பாடு (Idealistic Theory)
இந்த கோட்பாடு மனிதன் மற்றும் அரசு ஆகிய இரண்டும் தனித்தனியான குணகூறுகள் கொண்டவை என்று குறிப்பிடுகிறது. 'மனிதன்' என்பவன் அரசியல் மற்றும் பகுத்தறிவினால் உருவானவன் என்றும், அரசு என்பது சுயசார்புடைய சமூக அமைப்பு என்றும் கூறுகிறது. மேலும் இக் கோட்பாடானது மனிதன் தன் அதிகாரத்தை அரசிடம் இருந்து மட்டுமே பெறுகிறான் எனும் போது அவன் அரசிடம் இருந்து மாறுபடுகின்ற அதிகாரத்தை இழக்கின்றான் என்பதே சரியானது ஆகும் என்று கூறுகிறது. இந்த கோட்பாட்டின் கருத்துக்கள் பெரும்பாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கற்பனையாக அமைந்துள்ளது.
உ) மார்க்சின் கோட்பாடு (Marxian Theory)
மார்க்சின் கோட்பாடு மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.
புரட்சிக்கு முந்தையநிலை
இந்நிலையில் மனிதன் முழுவதும் அரசியல் கடப்பாடுகளின்றி இருப்பதை கூறுகிறது.
புரட்சிக்கால நிலை
அரசியல் கடப்பாடு இல்லாத நிலையில் இருந்து மேம்பட்டு முழுவதுமாக அரசியல் கடப்பாட்டுக்கு உட்படுகின்ற நிலைக்கு மாறுவதைப் பற்றியது, இந்த புரட்சிக்கால நிலையாகும்.
புரட்சிக்குப் பிந்தையநிலை
இந்த நிலையானது முழுவதுமான அரசியல் கடப்பாடுகளில் இருந்து சமூக மேம்பாட்டிற்கு மாறும் நிலை பற்றியதாகும்.