Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஔரங்கசீப் (1658-1707)

முகலாயப் பேரரசு - ஔரங்கசீப் (1658-1707) | 11th History : Chapter 14 : The Mughal Empire

   Posted On :  18.05.2022 05:48 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

ஔரங்கசீப் (1658-1707)

ஒளரங்கசீப் ஆலம்கீர் (உலகை வெல்பவர்) வாரிசுரிமைப் போரில் அரியணைக்காகத் தன்னோடு போட்டியிட்ட தாராஷூகோ, ஷூஜா, முராத் ஆகியோரை வெற்றி கொண்டு 1658இல் அரியணை ஏறினார்.

ஔரங்கசீப் (1658-1707)



ஒளரங்கசீப் ஆலம்கீர் (உலகை வெல்பவர்) வாரிசுரிமைப் போரில் அரியணைக்காகத் தன்னோடு போட்டியிட்ட தாராஷூகோ, ஷூஜா, முராத் ஆகியோரை வெற்றி கொண்டு 1658இல் அரியணை ஏறினார். அவருடைய ஐம்பது ஆண்டுகால ஆட்சியைச் சரிபாதியாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வட இந்திய அரசியலில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தார். தக்காணப் பகுதி அவருடைய ஆளுநர்களின் கைகளில் விடப்பட்டிருந்தன. 1681இல் அவருடைய மகன்களில் ஒருவரான இளவரசர் அக்பர் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாய் அவர் தக்காணம் செல்ல நேர்ந்தது. மீண்டும் அவர் தில்லிக்குத் திரும்பவேயில்லை. ஏமாற்றமடைந்த மனநிலையில் 1707-இல் அவர் அகமதுநகரில் காலமானார்.

முகலாயப் பேரரசின் எல்லைகளை விரிவடையச் செய்வதற்காகப் பல படையெடுப்புகளை ஒளரங்கசீப் மேற்கொண்டார். வடமேற்கிலும் வடகிழக்கிலும் அவர் மேற்கொண்ட போர்களால் கருவூலம் வறண்டு போனது. இவருடைய தந்தையார் காலத்திலேயே நிலவரியானது விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு என்ற நிலையிலிருந்து சரிபாதி என உயர்த்தப்பட்டது. ஒளரங்கசீப் மேற்கொண்ட நீடித்தப் போர் நடவடிக்கைகள், விவசாயிகளின் மீது அதிகமான வரிகளைச் சுமத்தும் தேவையை ஏற்படுத்தின. தொடக்கத்தில் ஷாஜகானாபாத் அவரின் தலைநகராக அமைந்தது. ஆனால் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தனது நீண்ட படையெடுப்புகளின் போது ஒளரங்கசீப் எங்கெல்லாம் முகாமிட்டாரோ அவ்விடங்களுக்குத் தலைநகர் மாறியது.

வடஇந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள் அரங்கேறின. ஜாட் (மதுரா மாவட்டம்), சத்னாமியர் (ஹரியானா பகுதி), சீக்கியர் ஆகியோர் கலகம் செய்தனர். ஜஹாங்கீர், ஷாஜகான் காலத்திலேயே தொடர்ந்து கலகம் செய்யும் இயல்பினைக் கொண்ட ஜாட்டுகளின் 1669ஆம் ஆண்டுக் கலகம் தற்காலிகமாக ஒடுக்கப்பட்டாலும் ஒளரங்கசீப்பின் இறப்பிற்குப் பின்னரும் அவர்கள் கட்டுக்கடங்காதவர்களாகவே இருந்தனர். சத்னாமியரின் கிளர்ச்சியானது உள்ளூர் இந்து ஜமீன்தார்களின் உதவியோடு ஒடுக்கப்பட்டது. சீக்கியர் கலகமானது, அதிகாரப்பூர்வமாக சீக்கிய குரு என்ற பதவியை வகித்து வந்த சீக்கிய குரு தேஜ்பகதூருக்கு எதிராக அப்பதவியின் மீது உரிமை பாராட்டிய ராம்ராய் மேற்கொண்ட சூழ்ச்சிகளின் காரணமாய் வெடித்தது. இறுதியில் சீக்கியரின் ஒன்பதாவது குருவான தேஜ்பகதூர் கொல்லப்பட்டதோடு கிளர்ச்சி முடிவுற்றது.

அனைத்து வகைகளைச் சேர்ந்த இந்துக்களின் மீதும் ஜிஸியா வரி விதிக்கப்பட வேண்டுமென ஒளரங்கசீப் மேற்கொண்ட முடிவு, அதுவரைப் பேரரசிற்கு விசுவாசத்துடன் சேவை செய்துவந்த ராஜஸ்தானத்து தலைவர்களிடையே கிளர்ச்சி மனநிலையை உருவாக்கியது. மார்வாரில் ஜஸ்வந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து வாரிசுரிமைச் சிக்கல் ஏற்பட்டது. இச்சிக்கலில் ஔரங்கசீப் தலையிட்டு ஜஸ்வந்த் சிங்கின் பேரனான இந்திரசிங் என்பவரைப் பெயரளவிற்கு அரச பதவியில் அமர்த்த மேற்கொண்ட முயற்சியை ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ராணி ஹாடி வெறுத்தார். இது தொடர்பாக, ராத்தோர் ரஜபுத்திரரின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. மார்வார் அரசியலில் ஒளரங்கசீப் தலையிட்டதால் வெறுப்புக் கொண்ட மேவாரின் ராணாவான ராஜ்சிங் கலகத்தில் ஈடுபட்டார். இக்கிளர்ச்சியை ஒளரங்கசீப்பின் மகன் இளவரசர் அக்பர் ஆதரித்தார். இருந்தபோதிலும் முகலாயப் படைகளுக்கு ராணா இணையானவர் அல்ல என்பதால் கொரில்லா போர்முறையைக் கையாண்டு 1680இல் தான் மரணமடையும் வரை ராணா போராடினார். 1681இல் மேவாரின் புதிய ராணாவாகப் பதவியேற்ற ராணா ஜெய்சிங் ஒளரங்கசீப்புடன் ஒரு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை

ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கையானது வளர்ந்துவந்த மராத்தியரின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது, ஷியா பிரிவைச் சேர்ந்த தக்காணச் சுல்தானியங்களானக் கோல்கொண்டா, பீஜப்பூர் அகியவற்றின் கிளர்ச்சிப் போக்கிற்கு அணைபோடுவது, தக்காணத்தைப் புகலிடமாகக் கொண்ட தனது மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது ஆகியவற்றை நோக்கமாய்க் கொண்டிருந்தது. ஒளரங்கசீப் 1682இல் தக்காணம் வந்தார். 1707இல் தனது மரணம் வரை தக்காணத்திலேயே தங்கியிருந்தார். பீஜப்பூரின் அடில்சாஹி வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் அடில்ஷா ஒளரங்கசீப்பின் பல படையெடுப்புக்களை எதிர்த்து நின்றார். ஒளரங்கசீப் 1685இல் தனது மகன் ஆசாம் ஷாவை அனுப்பிவைத்ததில் பயனேதுமில்லை. பின்னர் மற்றொரு மகன் ஷாஆலமை பீஜப்பூரைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார். ஷியா முஸ்லீமான பீஜப்பூர் சுல்தான் திறமையுடன் கோட்டையைப் பாதுகாத்தார். ஆனால் ஒளரங்கசீப்பே நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கி இறுதி வரை போரிடும்படி தனது படைகளுக்கு உற்சாகம் அளித்ததால் பீஜப்பூர் சுல்தான் தோல்வியடைந்தார். கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் 1687இல் தோற்கடிக்கப்பட்டு கோல்கொண்டா கைப்பற்றப்பட்டது.

 

கோல்கும்பாஸ் : 1480 முதல் 1686 வரை ஆட்சி செலுத்திய அடில் ஷாஹிமரபின் தலைநகர் பீஜப்பூர் (விஜயபுரா) ஆகும். இது கண்கவர் கட்டடங்களையும் மசூதிகளையும் தன்னகத்தே கொண்டது. இவ்வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளரான முகமது அடில்ஷாவின் (1627-1656) மிடுக்கான கல்லறையே கோல்கும்பாஸ் (வட்டவடிவக் குவிமாடம்) ஆகும். அடில் ஷா இதனைத் தனது வாழ்நாளிலேயேக் கட்டினார். இது அடர் சாம்பல்நிறக் கற்களால் கட்டப்பட்டு மேற்பூச்சு பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் சாதாரணமாயும் ஆனால் அழகுறவும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் நான்கு வெளிமூலைகளிலும் எண்கோணக் கவிகைமாடம் உள்ளது. ஒவ்வொரு கவிகைமாடமும் ஏழு அடுக்குகளையும் ஒவ்வொரு அடுக்கும் பல சாளரங்களையும் கொண்டு பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ரோமின் புனித பீட்டர் தேவாலயத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம் இதுவேயாகும். இதன் உட்சுவற்றின் நீளம் 135 அடி; உயரம் 178 அடி. இங்கு சற்று உயர்த்தப்பட்ட மேடையில் முகமது அடில்ஷா அவர் மனைவி அருஸ்பீபி, அவர் மகள், பேரன், பேரனின் பிரிய மனைவி ரம்பா ஆகிய ஐவரின் கல்லறைகள் உள்ளன.



மராத்தியருக்கு எதிராக ஔரங்கசீப்பின் நடவடிக்கைகள்

சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் ஒளரங்கசீப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தனர். ஒளரங்கசீப் தனது இரு முக்கியத் தளபதிகளான செயிஷ்டகான், ஜெய்சிங் ஆகியோரை ஒருவருக்குப் பின் ஒருவராக சிவாஜியைக் கைது செய்ய அனுப்பி வைத்தார். ஜெய்சிங் சிவாஜியைக் கைது செய்து தில்லிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கிருந்து தப்பிய சிவாஜி மீண்டும் தக்காணத்தை அடைந்தார். சிவாஜி கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றி 1680இல் 53 வது வயதில், தான் மரணமடையும் வரை முகலாயப் படைகளை எதிர்த்துப் போர் செய்தார். சிவாஜியின் மகன்களும் தொடர்ந்து எதிர்த்து 1707இல் ஔரங்கசீப் மரணமடையும் வரை அவரைப் பெரும் சோதனைக்கு உள்ளாக்கினர். 1707இல் ஒளரங்கசீப் காலமானது இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும். ஏனெனில் அடுத்த 150 ஆண்டுகளுக்கு வலிமை குன்றிய வழித்தோன்றல்களால் அது ஆளப்பட்ட போதும் ஒளரங்கசீப் மரணமடைந்த போதே முகலாயப் பேரரசும் முடிவுக்கு வந்துவிட்டது.

ஔரங்கசீப்பின் பிற நடவடிக்கைகள்

அரியணைப் போட்டியில் தனக்கு எதிரான முக்கியப் போட்டியாளரான தனது சகோதரர் தாராஷூகோவுக்குச் சீக்கியர் உதவினர் என்ற காரணத்திற்காக அவர்களின் மீது ஒளரங்கசீப் வெறுப்புக் கொண்டார். ஔரங்கசீப்பின் உத்தரவின்படியே குரு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ரஜபுத்திர அரசர்கள் தங்களை சுதந்திர அரசுகளாகப் பிரகடனம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக ஒளரங்கசீப்பின் மகனான இளவரசர் அக்பரின் தலைமையில் பெரும்படையொன்று அனுப்பப்பட்டது. மகனுடையத் துரோகக் குணத்தை ஒருவேளை அறிந்திராமலே ஒளரங்கசீப் இந்த முடிவை எடுத்திருக்கலாம். எப்படியிருந்தபோதிலும் இளவரசர் தன்னை முகலாயப் பேரரசராகப் பிரகடனம் செய்து கொண்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவரைத் தக்காணத்திற்குத் துரத்தின. அங்கு அவர் சிவாஜியின் மகன் சாம்பாஜியின் உதவியைப் பெற்றார். ஓளரங்கசீப் நேரடியாகக் களத்தில் இறங்கவே பாரசீகத்திற்குத் தப்பிச் சென்ற இளவரசர் அக்பர் அங்கிருந்து திரும்பவேயில்லை . 1689இல் சாம்பாஜி கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தானியங்கள் முற்றிலுமாகச் சரணடையும் அளவுக்குத் தள்ளப்பட்டன.

ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் பேரரசு சிதைவடையத் தொடங்கியது. ஒளரங்கசீப்பின் இறப்பிற்குப் பின் "பின் தோன்றிய அரசுகளால்பேரரசின் சிதைவு விரைவுபடுத்தப்பட்டது. பேரரசு எளிதில் கையாள முடியாத அளவிற்கு விரிந்தது. பேரரசின் தொலைதூரப் பகுதிகளை மேலாண்மை செய்யக் கூடிய அளவுக்குப் போதுமான நம்பிக்கைக்குரிய நபர்களை ஒளரங்கசீப் பெற்றிருக்கவில்லை. அவருடைய அரசியல் எதிரிகள் பலர் முகலாயர் ஆதிக்கத்தை மீறி சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்தனர். தக்காண விவகாரங்களில் ஒளரங்கசீப் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது பேரரசின் ஏனைய பகுதிகளில் தோன்றிய எதிர்ப்புகளை எதிர்கொள்ள விடாமல் அவரைத் தடுத்தது. ஒளரங்கசீப் மரணமடைந்த சிறிது காலத்திலேயே இந்திய அரசியலில் முகலாயப் பேரரசு ஒரு ஆற்றல் மிக்க சக்தியாக இல்லாமல் மறைந்தது.

ஔரங்கசீப் 'ஜிஸியா' வரியை மீண்டும் விதித்தார். புதிய கோவில்கள் கட்டப்படக் கூடாதெனவும் ஆணைகள் பிறப்பித்தார். ஆனால் பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் அவருடைய மத நம்பிக்கைகளில் மட்டும் வேர்கொண்டு இருக்கவில்லை; மாறாக அரசியல் நிர்பந்தங்களிலும் அவை வேர் கொண்டிருந்தன. ஆனால் ஓர் உண்மையான முஸ்லீமாக, வழக்கமாக விதிக்கப்படும் நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்டஅப்வாப்என்னும் வரிவசூலை, அதுஷரியத் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தினார். அதைப் போலவே கோவில்கள் தொடர்பான அவருடைய சட்டங்களும் பழமையானவை. இச்சட்டங்கள் அரசியல் பகைமையிருந்த பகுதிகளில் மட்டும் நடைமுறையில் இருந்தன. எங்கே அரசியல் பகைமையில்லாமல் கீழ்ப்படியும் நிலையிருந்ததோ அங்கெல்லாம் கோவில்கள் கட்டுவதற்கு ஒளரங்கசீப் கொடைகளை அளித்துள்ளார். ஷாஜகானுடைய ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்து அதிகாரிகள் அதிகமான எண்ணிக்கையில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினர் என்பது இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.


Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Aurangzeb (1658–1707) The Mughal Empire in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : ஔரங்கசீப் (1658-1707) - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு