முகலாயப் பேரரசு - ஹூமாயூன் மீண்டு வருதல் | 11th History : Chapter 14 : The Mughal Empire
ஹூமாயூன் மீண்டு வருதல்
ஷெர்ஷா 1545இல் காலமான பின்னர் அவருக்குப் பின்வந்த வலிமை குன்றிய அரசர்கள் பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். கன்னோசி போரில் தோற்றுத் தப்பியோடிய ஹூமாயூன் பாரசீகத்தில் தஞ்சம் புகுந்தார். பின்னர் பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹூமாயூன் காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார். ஆனால் அவருடைய சகோதரர் கம்ரான் அவர் கைப்பற்றிய பகுதிகளை அமைதியாக ஆட்சி புரிய ஹூமாயூன் அனுமதிக்கவில்லை. சகோதரர்களுக்கு இடையிலான போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் சமாதானத்தில் முடிந்தது. இதனிடையே சூர் பேரரசு பல துண்டுகளாகச் சிதைவடைந்தது. எனவே ஹூமாயூனின் படையெடுப்பு எளிதானது. முகலாயரின் வருகையைக் கண்ட பஞ்சாபிலிருந்த ஆப்கானியப் படைகள் தப்பியோடத் தொடங்கின. ஹூமாயூன் மீண்டும் பேரரசர் ஆனார். ஆனால் மிக விரைவிலேயே தில்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுந்து ஹூமாயூன் இறந்து போனார். ஸ்டேன்லி லேன்பூலின் பொருள் பொதிந்த வார்த்தைகளில் சொல்வதென்றால் “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்".