முகலாயப் பேரரசு - ஜாகிருதீன் முகமது பாபர் (1526-1530) | 11th History : Chapter 14 : The Mughal Empire
ஜாகிருதீன் முகமது பாபர்
(1526-1530)
மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் (துருக்கிய இனக்குழு); சபாவி (ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர்; ஷியா முஸ்லீம் பிரிவை ஆதரித்தவர்கள்); உதுமானியத் துருக்கியர் (சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரிடையே நடைபெற்ற மேலாதிக்கத்திற்கான போட்டி, சாமர்கண்ட் பகுதியின் அரசரான பாபரை, தனது வாழ்க்கை வளத்துக்கான வாய்ப்புகளை வேறு இடங்களில் தேடிச் செல்லக் கட்டாயப்படுத்தியது. வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்த வர்த்தகம் அவர் செல்ல விரும்பிய இடத்தைப் பற்றிய (இந்தியா) தேவையான தகவல்களை அவருக்கு வழங்கியது. ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்னர் தைமூர் செய்தததை மீண்டும் செய்ய வேண்டுமெனக் கனவு கண்டுகொண்டிருந்த பாபர், தில்லி சுல்தானியம் அரசியல் ரீதியாகச் சிதைவுற்றதைத் தொடர்ந்து 1526இல் தில்லியைத் தலைநகராகக் கொண்டு முகலாயப் பேரரசை நிறுவுவதில் வெற்றி பெற்றார்.
பாபர் பதினோரு வயதுச் சிறுவனாகத் தனது தந்தையிடமிருந்து சாமர்கண்டை (தற்போது உஸ்பெக்கிஸ்தானிலுள்ள ஒரு நகரம்) மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார். எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் அரியணையை இழந்த அவர் விரைவில் அதை மீட்டார். ஆனால் ஈரானில் வலிமை வாய்ந்த சபாவிகளின் ஆட்சி நடந்ததினாலும், மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் இருந்ததினாலும் தனக்கென ஒரு பேரரசைத் தென்கிழக்கே இந்தியாவில்தான் அமைக்க முடியுமென உணர்ந்தார். தைமூர் வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகையால் பஞ்சாப் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. ஏனெனில் முன்பு பஞ்சாபின் ஒரு பகுதி தைமூரின் ஆளுமைக்குள் இருந்திருக்கிறது. 1519க்கும் 1524க்கும் இடையே அவர் பேரா, சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்து இந்துஸ்தானை கைப்பற்றும் உறுதியான எண்ணத்தை வெளிக்காட்டினார். இந்துஸ்தானின் அரசியல் சூழலும் அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருந்தது. காபூல், கஜினி ஆகியவற்றை கைப்பற்றிய பாபர் சிந்து நதியைக் கடந்து ஒரு சிறிய அரசை ஏற்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுப்பதற்கான காலமும் கனிந்தது. லோடி வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தான் இப்ராகிம் லோடி தன் நாட்டை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஆப்கானியர், ரஜபுத்திரர் ஆகியோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியாலும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூதுக்குழுக்களை பாபர் சந்தித்தார். பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, முதலில் தனக்கு உதவி செய்வதாக உறுதி கூறி பின்னர் பின்வாங்கிய தௌலத்கான் லோடியின் படைகளை லாகூரில் வென்றார்.
முதலாம் பானிப்பட் போர் (ஏப்ரல் 21,1526)
இதன் பின்னர் பாபர் லோடியால் ஆளப்பட்ட பஞ்சாப்பை நோக்கித் திரும்பினார். பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கையில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார். மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது. தில்லியையும் ஆக்ராவையும் பாபர் கைப்பற்றினாலும் ஆப்கானியர்களையும் ரஜபுத்திரர்களையும் அடக்க வேண்டிய அவசியமிருந்தது.
கான்வா போர் (1527)
அடுத்தபடியாக பாபர் மேவாரின் அரசனும் ராஜஸ்தான் மாளவம் ஆகிய பகுதிகளில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த சித்தூரின் ராணா சங்காவை போர்க்களத்தில் எதிர்கொள்ளத் தீர்மானித்தார். தவிர்க்கமுடியாத அம்மோதலுக்குச் சாதகமான களமாக ஆக்ராவுக்கு அருகேயுள்ள கான்வா என்னுமிடத்தைத் தேர்வு செய்தார். தன்னுடைய அச்சமூட்டக் கூடிய பெரும்படையோடும் அதற்கு வலுச்சேர்த்த ஆப்கன் முஸ்லீம்கள், இப்ராகிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி ஆகியோரின் உதவியோடு ஆவேசமாக அணிவகுத்து வந்த ராணா சங்காவின் படைகள் பாபரின் படைகளை எதிர்கொண்டன. மீண்டும் ராணுவ தந்திரத்தாலும், பீரங்கிப்படைகளைத் திறம்பட பயன்படுத்தியதாலும் பாபர் ராணா சங்காவின் படைகளைத் தோற்கடித்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது பாபரின் நிலைக்கு மேலும் வலுவூட்டியது.
பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு பீரங்கி படை (Artillery) ஆகும். இதை இடம் விட்டு இடம் கொண்டு செல்லலாம். பொதுவாக ஒருவருக்கும் மேற்பட்ட நபர்களால் இவை இயக்கப்படும். வெடிமருந்து முதன்முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது. பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இது துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது. பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
சந்தேரிப் போர் (1528)
அடுத்து சிறப்பு வாய்ந்த மாளவப் பகுதியின் மீது பாபரின் மேலாதிக்கத்தை உறுதி செய்தது சந்தேரியில் மேதினிராய் என்பவருக்கு எதிராகச் செய்யப்பட்ட போராகும். இவ்வெற்றியைத் தொடர்ந்து பாபர் ஆப்கானியரின் வளர்ந்துவரும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.
காக்ரா போர் (1529)
ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் இதுவாகும். சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத்ஷாவும் பாபருக்கு எதிராகச் சதி செய்தனர். ஆபத்தை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்தார். கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்தார். ஆனால் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் 1530இல் காலமானார்.
பாபரின் இறப்பைப் பற்றி ஒரு கதையுள்ளது. அவருடைய மகன் ஹூமாயூன் நோய் வாய்ப்பட்டிருந்தார். மகன் மீது கொண்டிருந்த பாசத்தால் மகன் உடல்நலம் பெற்றால் தனதுயிரை ஈவதாக பாபர் பிராத்தனை செய்தார். ஹூமாயூன் நோயிலிருந்து மீண்டார்
பாபரைப் பற்றிய மதிப்பீடு
முகலாயப் பேரரசை
நிறுவிய பாபர்
பாரசீக அராபிய
மொழிகளில் புலமை
பெற்றவராவார். தனது
வாழ்க்கையைப் பற்றிய
பாபரின் நினைவுக்
குறிப்புகளான துசுக்-இ-பாபுரி
(பாபர் நாமா)
உலகச் செவ்வியல்
இலக்கியமாகக் கருதப்படுகிறது. ஒரு சில காலம்
இந்தியாவை ஆண்ட
ஆப்கானியரைப் பற்றியோ
அல்லது அவர்களால்
ஆளப்பட்ட பெரும்பான்மை
மக்களைப் பற்றியோ
வியந்து பாரட்டும்
அளவிற்கு பாபர்
எதையும் பார்க்கவில்லை. ஆனால் இந்தியாவைப் பற்றிய
அவருடைய சில
கருத்துக்கள் சுவாரசியமாக
உள்ளன.
இந்தியா எதைப்
பெற்றிருந்தது என்பதை
பாபர் பின்வருமாறு
விவரிக்கிறார்: இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில்
இது ஒரு
மிகப் பெரிய
நாடு. பெருமளவிலான
தங்கத்தையும் வெள்ளியையும்
கொண்டுள்ளது. இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில்
இங்குள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு
பிரிவுக்கும் பெரும்
எண்ணிக்கையிலான தொழிலாளர்கள்
முடிவே இல்லாத
வகையில் கடுமையாக
உழைத்தனர்.
காந்தகாரில் தொடங்கி
வங்காளத்தின் எல்லை
வரையிலான பாபருக்குச்
சொந்தமான பகுதிகள்
தற்போது பாதுகாப்பாய்
இருந்தன. இருந்தபோதிலும்
ரஜபுத்திரர்களின் விரிந்து
பரந்த பாலைவனப்
பகுதிகளிலும் ராந்தம்பூர்,
குவாலியர், சந்தேரி
ஆகியவற்றிலும், ரஜபுத்திரத்
தலைவர்கள் தங்களிடையே
சண்டைகளிட்டுக் கொண்டிருந்ததால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாகம் என்பதில்லை.
பாபர் தனது
மகன் ஹூமாயூனுக்கு
இடர்பாடுகள் நிறைந்த
பணியை விட்டுச்
சென்றார்.