முகலாயப் பேரரசு - பொருளாதாரம் | 11th History : Chapter 14 : The Mughal Empire

   Posted On :  18.05.2022 05:48 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

பொருளாதாரம்

முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.

பொருளாதாரம்

முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும். காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது. தச்சர், கப்பல் கட்டுவோர், மேல்பூச்சு சாயம் தயாரிப்போர் ஆகியோர்க்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன. நூல் நூற்போருக்கும் நெசவு செய்வோருக்கும் கச்சாப்பட்டினை வழங்கியது. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருக்கு வோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது. ஆகவே உற்பத்தியாளர்களுக்கும் காடுகளுக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது.

கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம். சொத்துக்கள் வைத்துக்கொள்ள உரிமை மறுக்கப்பட்ட, நிலமற்ற ஏழை விவசாயிகள் மக்கள் தொகையில் ஏறத்தாழக் கால் பங்கிருந்தனர். ஜமீன்தார்களும் கிராமத் தலைவர்களும் ஏராளமான நிலங்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.

ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்டப் பயிர் வகைகளை அய்னி அக்பரி பட்டியலிடுகிறது. புகையிலையும் மக்காச் சோளமும் பதினேழாம் நூற்றாண்டில் அறிமுகமாயின. அதற்குப் பின்னரே மிளகாயும் வேர்க்கடலையும் அறிமுகமாயின. அன்னாசிப்பழம் பதினாறாம் நூற்றாண்டில் அறிமுகமானது. ஒட்டுமுறையில் பல மாம்பழ ரகங்களை போர்த்துகீசியர் வளர்த்தார்கள். உருளைக்கிழங்கு, தக்காளி, கொய்யா ஆகியவை பின்னர் வந்தன. அவுரி மற்றுமொரு முகலாயர் கால முக்கிய வணிகப் பயிராகும். பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்று உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் தலைமைப் பட்டு உற்பத்தி மையமாயிற்று.

விவசாயிகள் நிலவரியைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதால் அவர்கள் தங்கள் உபரியைச் சந்தையில் விற்றாக வேண்டியதிருந்தது. முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு நிலவரியே மிக முக்கியமான வருவாயாகும். அது விளைச்சலில் கிடைக்கும் ஒரு பங்காகும். அரசு நிர்வாகம் நிலத்தின் உற்பத்தித் திறனை மதிப்பிட்டு, நிலத்தை அளவை செய்து, மொத்த அளவை அடிப்படையாகக் கொண்டு வரியை நிர்ணயம் செய்தது. அக்பர் ஜப்தி முறையை (தோடர்மாலால் அறிமுகம் செய்யப்பட்ட முறை) பிரகடனம் செய்தார். நிலத்தின் அளவு, விளைவிக்கப்பட்ட பயிர் ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயி பணமாகச் செலுத்த வேண்டிய வரி நிர்ணயிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய இவ்வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் தஸ்தர் என அழைக்கப்பட்டன.

நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற் கூடங்களைச் சார்ந்திருந்தது. பஞ்சடித்துப்பட்டை இடுபவர், நூல் நூற்போர், நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப் பதிப்போர், சலவைச் செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பருத்தியிழைத் தொழிற் கூடங்கள் பணிகளில் அமர்த்திக் கொண்டன. இரும்பு, தாமிர, வைரச்சுரங்கங்கள் அமைத்தல், துப்பாக்கிதயாரித்தல் போன்றவை ஏனைய முக்கியத் தொழில்களாகும். “கர்கானா" என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன. கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த ஆடம்பரப் பொருட்களை வர்த்தகர்கள் உள்ளூர் மற்றும் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

வர்த்தகமும் வாணிகமும்

நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும் திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்த்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின. உபரியானது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளிலும், ஒட்டக வண்டிகளிலும் சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன. பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலைதூரப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்தது. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது. சோழமண்டலக் கடற்கரை, தனது பருத்தித் துணி உற்பத்திக்காகப் புகழ் பெற்றிருந்தது. காஷ்மீர் சால்வைகளும் தரைவிரிப்புக்களும் கைவினைப் பொருட்களின் உற்பத்திக்குப் பெயர் பெற்றிருந்த லாகூரிலிருந்து விநியோகமாகின. பொருட்கள் இடம் விட்டு இடம் செல்வதற்குஉண்டிஎன்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் உதவின. ஒருங்கிணைக்கப்பட்டிருந்த "சராய்கள்" (ஓய்வு விடுதிகள்) வணிகர்களின் பயணங்களை ஊக்குவித்தன. இந்து, முஸ்லீம், சமணம் போன்ற அனைத்து மதங்களையும் சார்ந்த வணிகர்கள் இருந்தனர். குஜராத்தைச் சேர்ந்த போராமுஸ்லீம்கள், ரஜபுதனத்து மார்வாரிகள், சோழமண்டலக் கடற்கரை சார்ந்த செட்டியார்கள், மலபார் முஸ்லீம்கள் ஆகியோர் புகழ்பெற்ற வணிக சமூகத்தினர் ஆவர்.

மேற்கு ஆசியா ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுடனான வணிகத்தை ஐரோப்பியரே கட்டுப்படுத்தினர். இந்திய வணிகர்களின் பங்கேற்பை அவர்கள் கட்டுப்படுத்தினர். மேலும் பெருமளவிலான வளங்களையும், மிகப்பெரும் ராணுவத்தையும் கொண்டிருந்த போதிலும் முகலாய அரசு ஒரு கடற்படையைக் கொண்ட சக்தியாக இல்லை. தாங்கள் ஒரு பலம் பொருந்திய கடற்படைச் சகாப்தத்தில் வாழ்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்கள், சாயங்கள், வங்காளப் பட்டு, மஸ்லின், சொரசொரப்பான அச்சிடப்பட்ட துணி, பளபளப்பான பருத்தித் துணி ஆகியவற்றை இங்கும் கொள்முதல் செய்தனர். இதற்கு மாறாக இந்தியா பெருமளவில் தங்கத்தையும் வெள்ளியையும் இறக்குமதி செய்தது. முகலாயரின் வெள்ளி நாணய முறை வெள்ளிக்கான தேவையை அதிகரித்தது.

Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Economy The Mughal Empire in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : பொருளாதாரம் - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு