முகலாயப் பேரரசு - மதம் | 11th History : Chapter 14 : The Mughal Empire
மதம்
முகலாயர் காலம் புராண மரபுகளின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதற்குச் சாட்சியாய் இருந்தது. எண்ணிலடங்கா நம்பிக்கைகளும் அதிக எண்ணிக்கையிலான மரபுகளும் நடைமுறைகளும் வழக்கத்தில் இருந்ததால் இந்து மதத்தை ஒரு கோட்பாட்டுத் தொகுப்பெனச் சொல்வது கடினமானது என்றாலும் பரஸ்பர பரிமாற்றம், பெரும்பாலுமான பகுதிகளில் சமஸ்கிருத மொழியில் வெளிப்பாடாகி, இந்து மதத்தின் பல பிரிவுகள் ஒரே மாதிரியான மரபுத் தொடர்புகளையும் ஒரே மாதிரியான தெய்வங்களையும் கொண்டிருந்தன. பதினாறு, பதினேழு ஆகிய நூற்றாண்டுகள் வைணவ மதத்தின் நூற்றாண்டுகளாகும். இராமர் வழிபாட்டு மரபைத் தனது புகழ்பெற்ற பக்திப் பாடல்கள் வழி முன்மொழிந்த துளசிதாசர் (ராமசரிதமனஸ்) இராமரைக் கடவுளின் அவதாரமாகச் சித்தரித்தார். பக்தியின் இலக்கு விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணரானபோது பக்தியின் வெளிப்பாடு மேலும் உணர்ச்சிகரமாயிற்று.
இக்காலகட்டத்தில் பக்தி இயக்கம் பெரும் வளர்ச்சி பெற்றது. கவிஞர்களும் இறையடியார்களும் நாட்டின் பல பகுதிகளில் தோன்றினர். சடங்குகளையும் சாதிமுறையையும் அவர்கள் விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்கினர். தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தாமல் மக்களின் மொழியைப் பயன்படுத்தினர். அவர்களின் முற்போக்கான சிந்தனைகள் கருத்தைக் கவரும் மொழிநடையில் இசையோடு பாடப்பட்ட போது அவை மக்களிடையே பிரபலமாயின. வல்லபாச்சாரியார் அவருடைய மகன் வித்தால் நாத் ஆகியோர் கிருஷ்ண வழிபாட்டைப் பரப்புரை செய்தனர். இப்பிரிவைப் பின்பற்றிய சூர்தாஸ் சூர் - சராவளி என்னும் இலக்கியத்தை உள்ளூர் மொழியில் எழுதினார். ஏகநாதர், துக்காராம் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பக்தி இயக்கக் கவிஞர்களாவர். வியாசராயரால் பிரபலப்படுத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தி இயக்கமான ‘தசருதா’ இயக்கம் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரின் இயக்கமாக மாறியது.
பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஆளுமை கபீர் ஆவார். நெசவுக் குடும்பத்தைச் சார்ந்த இவர் முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தார். உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் சாதிமுறையையும் கண்டித்தார். எளிய மொழி நடையில் எழுதப்பட்ட இவரின் பாடல்கள் வாய்மொழியாகவே வடஇந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவியன.
பக்தி இயக்கப் புலவர்களைப் பற்றி ஆர்வமூட்டக் கூடிய செய்தி யாதெனில் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் கைவினைஞர்களாகவும் சேவை செய்யும் சமூகப் பிரிவினராகவும் இருந்தனர் என்பதே. கபீர் ஒரு நெசவாளர். ரவிதாஸ் தோல் பதனிடும் தொழிலாளி. சைன் என்பவர் சிகையலங்காரத் தொழில் செய்தவர். தாது பருத்தியைச் சுத்தம் செய்பவராவார். ஹரியானாவைச் சேர்ந்த சத்னாமி சமூகத்தவர் தங்களைக் கபீர் மற்றும் அவருடைய போதனைகளின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவதில் பெருமை கொள்கின்றனர். சமஸ்கிருதமும் பாரசீகமும் நிர்வாக, அறிவுலக நடவடிக்கைகளின் மொழிகளாக இருக்கையில் பிராந்திய மொழிகள் தங்கள் உயிர்த்துடிப்பு மிக்க இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தின.
சீக்கிய மதம்
சீக்கிய மதம் ஒரு கடவுள் கோட்பாட்டை முன்னெடுத்த இயக்கமாகத் தோற்றம் பெற்று பின்னர் அங்கீகரிக்கப்பட்ட உலக மதங்களில் ஒன்றாகப் பரிணமித்தது. சீக்கியரின் புனித நூலான குரு கிரந்த சாகிப் இஸ்லாமிய மத குருவான ஷேக் பரித், பக்தி இயக்கப் புலவர்களான நாமதேவர், கபீர், சைன், ரவிதாஸ் ஆகியோரின் போதனைகளை உள்ளடக்கமாய்க் கொண்டுள்ளது. "கடவுள் ஒருவரே” என குரு நானக் நம்பினார். அக்கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் எனக் கூறினார். உருவ வழிபாட்டையும் மதச் சடங்குகளையும் அவர் கண்டனம் செய்தார். அனைத்து மக்களின் மீதும் அன்பு செலுத்துதல், நன்னெறியைக் கடைப்பிடித்தல், ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றும்படி வற்புறுத்திக் கூறினார். சாதிமுறையைக் கண்டனம் செய்தார்.
சூபியிஸம்
சூபியிஸம் என்பது இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன்வைக்கும் ஒரு மதக் கோட்பாடாகும். ஈரானில் உதயமான இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது. வைதீக முஸ்லீம் இறையியலாளர்களுக்கு ஷரியத் முன் வைக்கும் கட்டுப்பாடுகளை சூபியிஸம் நிறைவேற்றுகின்ற வரை அது ஏற்புடையதாகவே இருந்தது.
கிறித்தவம்
ஐரோப்பிய வணிகர்களின் வருகையோடு பிரான்ஸிஸ் சேவியர், ராபர்ட்-டி- நொபிலி போன்ற கிறித்தவச் மதப் பரப்பாளர்களும் இந்தியா வந்தனர். தொடக்ககாலக் கிறித்தவச் மதப் பரப்பாளர்கள் கத்தோலிக்கர்களாவர். டேனியர்களின் ஆதரவின் கீழ் முதல் லூத்தரன் மதப் பரப்பாளர்கள் 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தனர். அவர்களில் ஒருவரான சீகன்பால்கு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை 1714இல் தமிழில் மொழியாக்கம் செய்தார். வெகுவிரைவில் பழைய ஏற்பாடும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.