முகலாயப் பேரரசு - அக்பர் (1556 - 1605) | 11th History : Chapter 14 : The Mughal Empire

   Posted On :  18.05.2022 05:48 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

அக்பர் (1556 - 1605)

ரஜபுதனத்துப் பாலைவனங்களில் ஹூமாயூன் அலைந்து திரிந்தபோது அவருடைய மனைவி 1542 இல் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார்.

அக்பர் (1556 - 1605)


ரஜபுதனத்துப் பாலைவனங்களில் ஹூமாயூன் அலைந்து திரிந்தபோது அவருடைய மனைவி 1542 இல் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அந்த ஆண் மகனே ஜலாலுதீன் என்று அறியப்பட்ட அக்பர். பதினான்காவது வயதில் அவருக்கு முடிசூட்டப்பட்டது. அக்பர் அரியணை ஏறியபோது இன்னும் வலிமையாக இருந்த ஆப்கானியரும் ரஜபுத்திரரும் பெரும் சவாலாகத் திகழ்ந்தனர். இருந்தபோதிலும் அக்பர், பைராம்கான் என்ற தலைசிறந்த பாதுகாவலரைப் பெற்றிருந்தார்.

இரண்டாம் பானிப்பட் போர் (1556)


தில்லியில் வீற்றிருந்த ஷெர்ஷாவின் வழிவந்த ஆப்கானிய அரசன் அடில்ஷாவின் இந்து படைத்தளபதியான ஹெமு, முகலாயருக்கு எதிராக ஆப்கானியர் படைகளுக்குத் தான் தலைமையேற்றுச் செல்ல அனுமதிக்குமாறு அரசனைக் கேட்டுக் கொண்டார். அரசர் ஊக்கம் தரவே ஹெமு முதலில் குவாலியரைக் கைப்பற்றி அதன் முகலாய ஆளுநரை வெளியேற்றினார். அடுத்து எவ்வித எதிர்ப்புமின்றி ஆக்ராவைக் கைப்பற்றினார். ஹெமுவின் தாராளத் தன்மை தில்லியைக் கைப்பற்றும் போது பலம் வாய்ந்த எதிரிகளை வெல்ல உதவியது. அக்பர் 1556 நவம்பர் மாதம் தில்லியை நோக்கிப் புறப்பட்டு ஹெமுவை இரண்டாம் பானிப்பட் போரில் சந்தித்தார். போர் ஹெமுவுக்குச் சாதகமாக முடியவிருந்த தருவாயில் அவர் கண்ணில் அம்பொன்று பாய மயக்கமுற்று கீழே விழுந்தார். தலைமை இல்லாத ஆப்கானியப் படைகளை முகலாயப் படைகள் வெற்றி பெற்றன. ஹெமு கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இவ்வெற்றி அக்பரை ஆக்ரா மற்றும் தில்லியின் அதிபதி ஆக்கியது. முகலாயப் பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது.

அக்பரும் பைராம்கானும்

அக்பர் ஒரு வெற்றியாளராக வட இந்தியா முழுவதையும் வாகை சூடி வலம் வந்தார். அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் பகர ஆளுநர் பைராம்கானின் கீழ், நாடு குவாலியர், அஜ்மீர் உட்பட காபூலிலிருந்து ஜான்பூர் வரை விரிவடைந்தது. தன் சாதனைகளின் காரணமாய் பைராம்கான் தன் போன்ற ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடனும் இறுமாப்போடும் நடந்துகொள்ளத் துவங்கினார். இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் விளைவாகப் பைராம்கான் கலகம் செய்ய அக்பர் அதைச் சாதுர்யமாகக் கையாண்டார். இறுதியில் அக்பர் முன் ஒப்படைக்கப்பட்ட பைராம்கான் மெக்காவுக்கு அக்பரின் அறிவுரையின்படி புறப்பட்டார். செல்லும் வழியில் ஆப்கானியன் ஒருவனால் கொல்லப்பட்டார். பைராம்கானின் குடும்பம் தில்லிக்கு அழைத்துவரப்பட்டது. பைரம்கானின் மகன் அப்துர் ரகீம் அறிவுக் கூர்மை மிக்க மேதையாக கான் - கானான் என்ற பட்டத்துடன் அக்பரின் அவையில் ஒளிர்ந்தார்.

அக்பரின் படையெடுப்புகள்

அக்பர் மிகப்பெரும் வெற்றிப் படையெடுப்புகள் மூலம் மகத்தானதொரு பேரரசுக்கான அடிக்கல்லை நாட்டினார். 1562இல் மாளவம் பாஜ்பகதூரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர் அக்பரின் அரசவையில் ஒரு மன்சப்தாராக ஆக்கப்பட்டார். 1564இல் இந்தியாவின் மையப்பகுதியிலிருந்த கோண்டுவானா அதன் ராணி துர்காதேவி அவ்வம்மையாரின் மகன் வீர்நாராயணன் ஆகியோருடனான கடும் போருக்குப்பின் கைப்பற்றப்பட்டது. மேவார் அரசரான ராணா உதய்சிங் சித்தூரை இழப்பதற்கு முன்னர் கடுமையாகப் போரிட்டார். ஆறுமாதகால முற்றுகைக்குப் பின்னர் சித்தூர் கைப்பற்றப்பட்டது. ராணா உதய்சிங் குன்றுகளுக்குள் பின்வாங்க அவரின் தளபதிகளான ஜெய்மால், பட்டா ஆகியோர் போரைத் தொடர்ந்து நடத்தினர். இவ்விருவர் உட்பட 30,000 ரஜபுத்திர வீரர்கள் இப்போரில் கொல்லப்பட்டனர். ஜெய்மால், பட்டா ஆகியோரின் துணிச்சலைக் கண்டு பெரும் வியப்படைந்த அக்பர் அவர்களின் நினைவாகவும் அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் ஆக்ரா கோட்டையின் முக்கிய நுழைவாயிலில் அவர்களின் சிலைகளை நிறுவினார். சித்தூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ரஜபுத்திர அரசுகளான ராந்தம்பூர், கலிஞ்சார், பிக்கானீர், ஜோத்பூர், ஜெய்சால்மர் ஆகியவை சரணடைந்தன.

மத்திய இந்தியப் பகுதிகளைக் கீழ்படிய வைத்த பின்னர் அக்பர் தனது கவனத்தை செல்வச் செழிப்புமிக்க, கடல்சார் வணிகத்திற்குப் புகழ்பெற்ற குஜராத் மீது செலுத்தினார். அதன் அரசன் முசாபர்ஷாவிடமிருந்து 1573இல் குஜராத்தைக் கைப்பற்றினார். குஜராத் தக்காணத்தைக் கைப்பற்றுவதற்கான ஏவுதளமானது. பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத்கான் அக்பரால் தோற்கடிக்கப்பட்டு அவ்விரு பகுதிகளும் 1576இல் முகலாயப் பேரரசோடு இணைக்கப்பட்டன.

ராஜா மான்சிங், பகவன்தாஸ் ஆகியோரின் உதவியுடன் அக்பர் காபூலைச் சேர்ந்த மிர்சா ஹக்கீமைத் தோற்கடித்தார். காஷ்மீரையும் (1586) சிந்துவையும் (1591) அக்பர் கைப்பற்றியது வடமேற்கில் அவருடைய பேரரசைவலுப்படுத்தியது. வட இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்த பின்னர் அக்பர் தக்காணத்தின் மீது கவனம் கொண்டார். அக்பருடைய படைகள் 1591இல் காண்டேஷ் பகுதியைக் கைப்பற்றின. 1596இல் சாந்த்பீபியிடமிருந்து பெரார் கைப்பற்றப்பட்டது. இவ்வம்மையார் அகமது நகரின் நிஜாம் சாகி வம்சத்தை சேர்ந்த தன் உடன்பிறப்பின் மகனான முசாபர்ஷாவினுடைய பகர ஆளுநராக அகமதுநகரைத் தாக்கிய முகலாயப்படைகளை எதிர்த்து வீரத்தோடு போராடினார். 1600இல் அகமதுநகர் அரசின் ஒரு சில பகுதிகள் முகலாயர் படைகளின் கைவசமானது. 1604இல் செப்டம்பர் மாதம் அக்பர் நோய்வாய்ப்பட்டு 1605 அக்டோபர் மாதம் 27ஆம் நாள் இயற்கை எய்தினார்.

ரஜபுத்திரக் கொள்கை

இந்துக்களுடைய நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அக்பர் மனமார்ந்த முயற்சிகளை மேற்கொண்டார். முஸ்லீம் அல்லாத மக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும் (தலை வரி) இந்து புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியையும் நீக்கினார். போர்க்கைதிகளை அடிமைகளாக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டது. இந்து விதவைகள் பின்பற்றிய உடன்கட்டை ஏறும் முறையும் ஒழிக்கப்பட்டது. அவருடைய இணக்கமான ரஜபுத்திரக் கொள்கையானது ரஜபுத்திர அரச குடும்பங்களோடு திருமண உறவை மேற் கொள்ளுதல், அரசவையில் உயர்ந்த பதவிகளில் அவர்களை அமர்த்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சகிப்புத்தன்மை கொண்ட மதக் கொள்கையானது பண்பாட்டு ரீதியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் மக்கள் ஒருங்கிணைவதை உறுதி செய்தது. அக்பருக்கு முன்னரே பல முஸ்லீம் அரசர்கள் ரஜபுத்திர இளவரசிகளைத் திருமணம் செய்திருந்தனர். ஆனால் அக்பர் பரந்த மனப்பான்மையோடு இக்குடும்பங்களோடு நெருக்கமான உறவினை மேற்கொண்டு இத்திருமணங்கள் இருவேறு பண்பாடுகளை இணைக்கின்ற சக்தியாக மாறுவதற்குக் காரணமாக இருந்தார். அக்பர் ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மல் (பீகாரிமால் என்று அறியப்பட்டவரின்) மகளான ஹர்க்கா பாயை மணந்தார். இந்த ஹர்க்காபாய் பின்னாளில் ஜோதா அக்பர் என்று அழைக்கப்பட்டார். மேலும் பிக்கானீர், ஜெய்சால்மர் ஆகிய ரஜபுத்திர அரசுகளின் இளவரசிகளையும் திருமணம் செய்து கொண்டார். ஹர்க்காபாய் பெற்றெடுத்த இளவரசர் சலீம் பின்னர் ராஜா பகவன்தாஸின் மகளைக் கரம்பற்றினார்.



 


ராஜா பகவன்தாஸின் மகனான ராஜா மான்சிங் அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியானார். திருமண உறவு மேற்கொள்ளக் கூடாது என நினைத்த ரஜபுத்திரர்களும் அக்பரின் அரசவையில் உயரிய மரியாதையைப் பெற்றனர். அக்பரின் ரஜபுத்திரக் கொள்கை மிகச் சிறந்த ராணுவத் தளபதிகளையும் சிறந்த நிர்வாகிகளையும் பேரரசுக்கு வழங்கியது. வருவாய்த்துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம் உடைய ராஜா தோடர்மால் திவானாக பதவி உயர்த்தப்பட்டார். ராஜா பீர்பால் அக்பரால் பெரிதும் விரும்பப்பட்ட நண்பராவார்.

மேவார், மார்வார் ஆகியவை முகலாயப் பேரரசை எதிர்த்து நின்ற ரஜபுத்திர அரசுகளாகும். ராணா உதய்சிங்கின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் ராணா பிரதாப்சிங் அக்பரின் அதிகாரத்தை ஏற்காமல் 1597இல் தனது மரணம் வரை தொடர்ந்து போரிட்டார். 1576இல் நடைபெற்ற ஹால்டிகாட் போரே முகலாயப் படைகளுக்கும் ராணா பிரதாப் சிங்கிற்குமிடையே நடைபெற்ற இறுதிப் போராகும். மார்வாரில் (ஜோத்பூர்) மால்தியோ ராத்தோரின் மகனான அரசர் சந்திரா சென் 1581 இல் தான் இறக்கும்வரை முகலாயரை எதிர்த்தார். ஆனால் அவருடைய சகோதரர்கள் முகலாயர் பக்கமிருந்து போரிட்டனர். தொடக்கத்தில் ஆக்ரா அக்பரின் தலைநகராக இருந்தது. பின்னாளில் பதேபூர் சிக்ரி என்னும் புதிய தலைநகரை அக்பர் உருவாக்கினார். தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் இன்றும் அது அழகான மசூதிகளோடும் உன்னதமான புலந்தர்வாசா மற்றும் ஏனைய கட்டடங்களோடும் திகழ்கிறது.

மன்சப்தாரி முறை

அக்பர் ஒரு முறைப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கினார். அம்முறை பேரரசின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றியது. அவர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார். பிரபுக்கள், குடிமைப் பணி சார்ந்த இராணுவ நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒன்றுபடுத்தப்பட்டு ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மன்சப்தார் தகுதி ஜாட், சவார் என இருவகைப்பட்டது. ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதாகும் அவ்வெண்ணிக்கை 10 முதல் 10,000 வீரர்கள் வரை ஆனதாகும். சவார் என்பது மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். வீரர்களின் எண்ணிக்கை, குதிரைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் ஒரு மன்சப்தாரின் உயர்வும் தாழ்வும் நிர்ணயம் செய்யப்பட்டன. மன்சப்தாரி முறையானது பிரபுக்களின் இனக்குழுத் தளத்தை பல்வகைப்பட்டதாக மாற்றியமைத்தது. அக்பரின் தொடக்க காலங்களில் பிரபுக்கள் முற்றிலுமாக மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களாகவும் பாரசீகத்தைச் சார்ந்தவர்களாகவும் மட்டுமே இருந்தனர். ஆனால் மன்சப்தாரி முறை அறிமுகமான பின்னர் ரஜபுத்திரரும் ஷேக்சதா என்றழைக்கப்பட்ட இந்திய முஸ்லீம்களும் பிரபுக்கள் வரிசையில் இடம் பெறலாயினர். மன்சப்தார்களின் ஊதியம் பணமாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கு மாறாக அவர்களுக்கு நிலங்கள் (ஜாகீர்) ஒதுக்கப்பட்டன. (தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு மன்சப்தார் பணம் வசூலித்துக்கொள்ளலாம்.) இந்த ஜாகீர்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. மன்சப்தார் பதவியானது பரம்பரை உரிமை சார்ந்ததல்ல. ஒரு மன்சப்தார் மரணமடைந்துவிட்டால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாகீரை அரசு உடனடியாகக் கையகப்படுத்தும்.

அக்பரின் மதக் கொள்கை

அக்பர் ஒரு வைதீக முஸ்லீமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஓர் இணக்கமான போக்கை மேற்கொண்டார். ஏனைய மதங்கள் தொடர்பான கோட்பாடுகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட அவர் அனைவருக்கும் அமைதி (சுல்--குல்) என்னும் தத்துவத்தைப் பரப்புரை செய்தார். மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி அக்பர் மேற்கொண்ட தத்துவ விவாதங்கள் மீது வெறுப்புக் கொண்ட சமகால வரலாற்று அறிஞரான பதானி அக்பர் இஸ்லாமைப் புறக்கணித்தார் எனக் குற்றம் சாட்டினார். அக்பர் இபாதத் கானா எனும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவினார். தொடக்கத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு கூடி ஆன்மீக விசயங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் இந்துக்களையும் கிறித்தவர்களையும் ஜொராஸ்திரியர்களையும் சமணர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் இவ்விவாதங்களில் பங்கேற்க வரவேற்றார். இபாதத் கானாவில் நடைபெற்ற விவாதங்கள் மதங்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியால் 1582இல் அக்பர் அவற்றை நிறுத்தினார். ஆனால் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியை அவர் கைவிடவில்லை. அக்பர் பல்வேறு மதங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஞானிகளோடு எடுத்துக் காட்டாக புருசோத்தம், தேவி (இந்து மதம்), மெகர்ஜிராணா (ஜொராஸ்திரிய மதம்), அக்வாவிவா, மான்சரட் எனும் போர்த்துக்கீசியர் (கிறித்தவ மதம்), ஹிர விஜய சூரி (சமண மதம்) ஆகியோரை தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு உண்மை எதுவென அறிய முயன்றார். இத்தகைய விவாதங்களின் விளைவாகப் பல்வகைப்பட்ட இப்பெயர்களுக்குப் பின்னே ஒரே ஒரு கடவுள் மட்டும் இருப்பதாக அவர் உணர்ந்தார். அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சரியான சொல் தௌகித்--இலாகி (தீன் இலாகி) என்பதாகும். தௌகித்--இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடாகும்.

இது ஒரு புதிய மதமல்ல. ஆனால் இதை சூபி மரபின் ஒரு வகைமுறையாகக் கருதலாம். அக்பர் இப்பிரிவின் பீர் (மத குரு) என்ற முறையில் அவர் சீடர்களைச் (முரிக்கள் சூபி சீடர்கள்) சேர்த்திருந்தார். இச்சீடர்கள் குரு முன்வைக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பல்லாயிரக் கணக்கானோர் அக்பரின் சீடர்களாகச் சேர்ந்தனர். அக்பரின் உண்மையான நோக்கம் மதச் சார்பற்ற கோட்பாடுகளை, பல்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்தவர்களுக்குச் சரி சமமான சகிப்புத் தன்மையையும் சம மதிப்பையும் வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசை உருவாக்குவதாகும். சமஸ்கிருத, அராபிய, கிரேக்க மற்றும் ஏனைய மொழி நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்கத் துறையை அக்பர் உருவாக்கினார். இராமாயணம், மகாபாரதம், அதர்வவேதம், விவிலியம், குரான் ஆகியவை அனைத்தும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தௌகித்--இலாகி (தீன் இலாகி) அக்பருக்குப் பின்னர் இல்லாமல் போனது.

Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Emperor Akbar (1556-1605) The Mughal Empire in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : அக்பர் (1556 - 1605) - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு