முகலாயப் பேரரசு - அறிவியலும் தொழில்நுட்பமும் | 11th History : Chapter 14 : The Mughal Empire
அறிவியலும் தொழில்நுட்பமும்
முஸ்லீம் கல்வி நிறுவனங்களான மதரஸாக்கள் முஸ்லீம் இறையியலின் மீதே அதிகக் கவனம் செலுத்தியது. வாரணாசி போன்ற மிகச் சிறந்த கல்வி மையங்களில் ஜோதிடம் கற்றுத்தரப்பட்டது. ஐரோப்பாவிலிருந்த பல்கலைக் கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லையென பிரான்ஸ் நாட்டுப் பயணி பெர்னியர் குறிப்பிடுகிறார். இதனால் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பது இயலாத நிலையில் இருந்தது. இருந்தபோதிலும் கணிதம், வானியல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. அக்பரின் அவைக்களப் புலவரான பெய்சி பாஸ்கரச்சாரியரின் புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிபெயர்த்தார். முகலாயர் காலத்தில் ஐரோப்பியர் இந்தியாவில் இருந்தாலும் இந்தியக் சமூகத்தின் மீது அவர்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை.
நீர் இறைப்பதற்காகப் பல பீப்பாய்கள் இணைக்கப்பட்டச் சக்கரமான பாரசீகச் சக்கரம் பாபர் காலத்தில் அறிமுகமானது. வரிசையாக விசைச் சக்கரங்கள் பொருத்தப்பட்டச் சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்ரியில் நிறுவப்பட்டது. வெடியுப்பை பயன்படுத்தி நீரைக் குளிர்விக்கும் முறையைப் பரவலாக்கிய பெருமை அக்பரைச் சாரும். கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழப்படுகின்றார். இத்தொழில் நுட்பத்தின்படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும். அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களைக் கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது. ஒருசில இயந்திரத் தொழில்நுட்ப சாதனங்களை இறுக்கமாக இணைப்பதற்கான திருகாணிகள், உடல் உழைப்பாலும் வார்களாலும் இயக்கப்படும் துளைப்பான், வைரத்தை பட்டை தீட்டும் கருவி போன்றவை பயன்பாட்டில் இருந்தன. வேளாண் கருவிகள் முன்னர் இருந்தததைப் போலவே தொடர்ந்தன. அவை பெரும்பாலும் மரத்தாலானவை. உலோகவியலைப் பொருத்தமட்டிலும் வார்ப்பு இரும்பை உற்பத்தி செய்ய இயலாமல் போனது பெரும் பின்னடைவாகும். வரலாற்றறிஞர் இர்பான் ஹபீப் இந்தியாவின் பின்தங்கிய நிலையைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார். தொழில் நுட்பத்தில் இந்தியாவின் பின்தங்கிய நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியப் படைகளில் மேட்ச் லாக் எனப்படும் பழைய பாணியிலானத் துப்பாக்கிகள் அதிகமான பயன்பாட்டில் இருந்தபோது ஐரோப்பாவில் பிளின்ட்லாக் எனப்படும் நவீனத் துப்பாக்கிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. செலவு மிக்க செம்பினாலான பீரங்கிகளை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வந்தபோது ஐரோப்பாவில் முன்னதாகவே அவை பயன்பாட்டிலிருந்து நீங்கிவிட்டன. இதற்குக் காரணம் பதினேழாம் நூற்றாண்டில் கூட இந்தியாவால் வார்ப்பிரும்பை உற்பத்தி செய்ய இயலாமல் போனதேயாகும்.
கட்டடக்கலை
முகலாயர் காலத்தில் பூந்தா கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலகக் கலையில் குறிப்பிடத்தக்கக் கட்டமாகும். கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனைகள் மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும், நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும் படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகலாயக் கட்டடங்கள் பெயர் பெற்றவையாகும். பாபர், ஹுமாயூன் காலங்களில் கட்டப்பட்ட மசூதிகள் கட்டடக்கலை ரீதியாக முக்கியத்துவம் உடையவையல்ல. சூர் வம்சத்து அரசர்கள், தில்லியில் புராணகிலா, பீகாரில் ச்சாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோரின் கல்லறைகள் போன்ற கண்களைக் கவரும் கட்டடங்களை விட்டுச் சென்றுள்ளனர். புராணகிலாவில் உயர் அரண் படியடுக்கு நடைமேடையில் கட்டடப்பட்டுள்ள கல்லறைகள், நாற்புறமும் சூழ்ந்துள்ள நீர் நிலைகள் ஆகியன நவீனக் கூறுகளாகும்.
அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹுமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது. சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட இக்கல்லறை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்தது. மணற்கற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. அக்பரின் புதிய தலைநகரான பதேபூர் சிக்ரி கோட்டைகளால் சூழப்பட்ட எழுச்சியூட்டும் பல கட்டடங்களைக் கொண்டுள்ளது. பதேபூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற்பகுதியும், அக்பர் சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாசாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயரின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன. ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை மாடம் சில பௌத்த கட்டடக்கலைக் கூறுகளையும் கொண்டுள்ளது. இது அக்பரின் காலத்தில் தொடங்கப்பட்டு ஜஹாங்கீரின் காலத்தில் நிறைவு பெற்றது. ஜஹாங்கீர் நூர்ஜகானின் தந்தையான இதிமத் உத் தௌலாவுக்காக எழுப்பிய கல்லறையே முழுவதும் வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் முகலாயர் கட்டிய முதல் கட்டடமாகும்.
ஷாஜகான் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் சிகரத்தை எட்டியது. தாஜ்மஹால் முழுவதும் பளிங்குக் கற்களால் உயர்த்தப்பட்ட தளத்தின் மீது கட்டப்பட்டதாகும். மையத்தில் பின்னொதுங்கிய வாயிலுக்கு மேல் குமிழ்வடிவக் கவிகை மாடத்தையும் அதைச் சுற்றி நான்கு ஸ்தூபி மாடங்களையும் நான்கு மூலைகளிலும் நான்கு தனித்தனியான கோபுரங்களையும் (மினார்) கொண்டு அமைந்த இந்நினைவிடம் உலகப்புகழ் பெற்றுள்ளது. திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹுரமஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டடங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன. ஆக்ரா கோட்டையிலிருக்கும் மோதி மசூதி முழுவதும் பளிங்குத் கற்களாலானது. தில்லியிலுள்ள கம்பீரமான வாயிற் பகுதியில் வரிசையான கவிகை மாடங்கள், உயரமான மெலிதான கோபுரங்கள் (மினார்) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஜும்மா மசூதி ஆகியன ஷாஜகானால் கட்டடப்பட்ட முக்கிய மசூதிகளாகும். ஷாஜகான், ஷாஜகானாபாத் என்ற பெயரில் ஒரு நகரத்தையே (இன்றைய பழைய தில்லி) உருவாக்கினார். இங்குதான் செங்கோட்டையும் ஜும்மா மசூதியும் அமைந்துள்ளன. ஒளரங்கசீப் காலத்தில் லாகூரில் பாதுஷாகி மசூதி கட்டப்பட்டது. மேலும் ஒளரங்காபாத்தில் ரபீயா உத் தௌராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது. இக்கல்லறை பீபிமக்பாரா (பெண்ணின் கல்லறை) என்றழைக்கப்படுகிறது.
ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகியோர் உருவாக்கிய ஷாலிமர் தோட்டங்கள் இந்தியத் தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவை ஆகும். மிகப் பெரும் கட்டிடங்களைத் தவிரப் பொதுப்பயன்பாட்டிற்காகவும் பல கட்டுமானப் பணிகளை முகலாயர் மேற்கொண்டனர். அவற்றுள் மகத்தானது ஜான்பூரில் கோமதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளப் பாலமாகும். முகலாயரின் மிகவும் போற்றத்தக்கச் சாதனை தில்லிக்கு நீர் கொண்டுவரும் மேற்கு யமுனா கால்வாயைக் கட்டியதாகும்.
முகலாயக் கட்டடக்கலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் கட்டுமானங்களின் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. மதுராவுக்கு அருகே பிருந்தாவனத்தில் உள்ள கோவிந்தேவ் கோவிலிலும், மத்தியப்பிரதேசம் ஓரிசாவிற்கு அருகேயுள்ள சதுர்டிஜ் என்னும் இடத்திலுள்ள பீர்சிங் கோவிலிலும் முகலாயக் கட்டிடக்கலையின் தாக்கத்தைக் காணலாம்.
ஓவியம்
முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது. முகலாயரின் நுண் ஓவியங்கள் உலகத்தின் பல அருங்காட்சியகங்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. குஜராத், மாளவம் ஆகிய பகுதிகளில் உயிர்ப்புடன் செயல்பாட்டிலிருந்த இந்திய ஓவிய மரபுகள், மேற்காசிய ஓவிய மரபுகளின் செல்வாக்கோடு இணைந்து ஓவியக் கலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. மத்திய ஆசியாவிலிருந்து ஹூமாயூனோடு இந்தியா வந்த நுண் ஓவியக் கலைஞர்களான அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்திய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர். இலக்கிய நூல்களை விளக்கும் பொருட்டே ஓவியங்கள் பெரிதும் வரையப்பட்டன. பாரசீக மொழியில் எழுதப்பட்ட மகாபாரதத்திலும், அய்னி அக்பரியிலும் பல ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. தஷ்வந்த், பசவன் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்களாவர். ஐரோப்பிய ஓவியங்கள் போர்த்துக்கீசியப் பாதிரிமார்களால் அக்பரின் அவையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜஹாங்கீர் காலத்தில் உருவப் படத்தை வரைதலும் விலங்குகளை வரைவதும் வளர்ச்சி பெற்றன. இத்துறையில் மன்சூர் பெரிதும் அறியப்பட்டவராவார். முகலாய நுண்ணோவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. ஷாஜகான் ஓவிய மரபைத் தொடர்ந்தார். ஆனால் ஒளரங்கசீப்பின் அலட்சியத்தால் ஓவியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கலைந்து சென்றதன் மூலம் பிராந்திய அளவில் ஓவியக்கலை வளர்ந்தது.
இசையும் நடனமும்
பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரைச் சேர்ந்த தான் சென் ஏனைய 35 இசைக் கலைஞர்களோடு அக்பரால் ஆதரிக்கப்பட்டார் என அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது. ஜஹாங்கீரும் ஷாஜகானும் இசையை ஆதரித்தவர்களே. ஒளரங்கசீப் இசைக்கு எதிரானவர் என்ற பொதுக் கருத்தொன்று நிலவுகிறது. ஆனால் அவருடைய காலத்தில்தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன. அவருடைய அரசிகளும் இளவரசிகளும் பிரபுக்களும் தொடர்ந்து இசைக்கு ஆதரவு தந்தனர். பிற்கால முகலாய அரசர்களில் ஒருவரான முகமது ஷா இசைத்துறையில் முக்கிய வளர்ச்சிகள் ஏற்படக் காரணமாக இருந்தார். பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இசைக்கருவிகளோடு பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
இலக்கியம்
பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் முகலாயர் காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தன. முகலாயப் பேரரசிலும் தக்காண அரசுகளிலும் பாரசீக மொழியே நிர்வாக மொழியாக இருந்தது. ரஜபுத்திர அரசுகளின் மீதும் அம்மொழி தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவற்றின் நிர்வாகத்தில் பல பாரசீகச் சொற்கள் இடம் பெற்றன. 'அக்பர் நாமா' என்னும் நூலில் அக்பரின் வரலாற்றை அபுல் பாசல் தொகுத்து வழங்கியுள்ளார். முகலாய நிர்வாகத்தைப்பற்றி அவர் அய்னி அக்பரியில் விவரித்துள்ளார். அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவற்றின் மீது ‘அய்னி அக்பரி’ கொண்டுள்ள அக்கறைக்காகவே அது பாராட்டப்பட வேண்டும். அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஷாஜகான் வாழ்க்கை வரலாறான ‘பாதுஷா நாமா’ அய்னி அக்பரியை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டதே. ஒளரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி ஆலம்கீர் நாமா என்னும் நூலை எழுதிய முகமது காஸிம் இதே முறையைத்தான் பின்பற்றினார். பாபரின், சகதாய் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை அப்துல் ரகீம் கானி-இ-கானான் என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார். தபிஸ்தான் என்னும் நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைகள், அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்துப் பாரபட்சமற்ற விபரங்களைக் கொண்டுள்ளது. சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்ததால் பாரசீக மொழி வளம் பெற்றது. அக்பரின் அவைக்களப் புலவரும் அபுல் பாசலின் சகோதரருமான அபுல் பெய்சியின் மேற்பார்வையில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. தாராளிகோவால் உபநிடதங்கள் ‘சர்-இ-அக்பர்’ (மாபெரும் ரகசியம்) என்னும் பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக்கும். அபுல் பெய்சியின் மஸ்னாவி, உத்பி, நசிரி ஆகியன இந்தியாவில் பாரசீகக் கவிதைகளுக்கு வளம் சேர்த்தன.
முகலாயர் காலத்தில் படைக்கப்பட்ட சமஸ்கிருத நூல்கள் வியக்கத்தக்கவையாகும். இக்காலச் சமஸ்கிருத இலக்கியம் காவியம் என்றழைசக்கப்படும் வரலாற்றுக் கவிதைகள் வடிவில் எழுதும் பாங்கிற்கு பெயர் பெற்றதாகும். கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய ‘ராஜவலிபதகா’ எனும் நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் பிரக்ஞபட்டரால் தொகுக்கப்பட்டது. பாரசீக மொழி நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதால் கிரேக்க, அராபியப் புலமையானது இந்தியா வந்தடைந்தது. அக்பரின் வானியலறிஞரான நீலகண்டர், தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தார், ஷாஜகானின் அவைக்களப் புலவரான ஜெகநாத பண்டிதர் ‘ரசகங்காதரா’ எனும் சிறப்புக்குரிய நூலை எழுதினார்.
முகலாயர் காலத்தில் இலக்கியத் துறைக்குச் செய்யப்பட்ட பெரும் பங்களிப்பு பல்வேறு மொழிகளைப் பேசி வந்த மக்களிடையே உருது ஒரு பொதுவான தொடர்பு மொழியாக வளர்ச்சியடைந்ததாகும். இக்காலத்தில் பிராந்திய மொழிகளும் வலுப் பெற்று முழுமையான வளர்ச்சி பெற்றன. செய்யுள் முறையிலான தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற மிகச் சிறந்த பாடல்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. அப்துர் ரகீம் கான்-இ-கானான் என்பவர் வாழ்க்கை குறித்த, மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப் பாடல்களை இந்தியின் கிளை மொழியான பிரிஜி என்னும் வடிவத்தில் எழுதினார். கிழக்கு உத்திரப் பிரதேசத்து மக்கள் பேசிய இந்தி மொழியின் வட்டார மொழியான அவதியில் துளதிதாசர் எழுதிய பாடல்கள் அவற்றின் பக்திச் சிந்தனைகளுக்காகப் பிரபலமாயின. இக்காலத்தில் ஏகநாதர், துக்காராம், ராம்தாஸ், முக்தீஸ்வர் ஆகியோரின் இலக்கியப் படைப்புகளால் மராத்திய இலக்கியம் எழுச்சி பெற்றது. ஏனைய மொழிகளின் மீதான சமஸ்கிருதத்தின் மேலாதிக்கத்தை ஏக்நாத் கேள்விக்குள்ளாக்கினார். துக்காராமின் பாடல்கள் ஒரு கடவுள் கோட்பாட்டின் மேல் ஆர்வத்தைத் தூண்டியது. முக்தீஸ்வர் மகாபாரத்தையும் இராமாயணத்தையும் இலக்கிய வளம் கொண்ட மராத்திய மொழியில் எழுதினார்.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தனது ‘ஆமுக்தமால்யதா’ (ஆண்டாளைப் பற்றிய காவியம்) மூலமாகவும், அவருடைய அவைக்களப்புலவரான அல்லசானி பெத்தண்னா தனது ‘மனுசரித்திரா' எனும் நூலின் மூலமாகவும் தெலுங்கு இலக்கியத்தின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றனர். இக்காலத்தில் தமிழிலிருந்து தனியாகப் பிரிந்த மலையாளம் இலக்கிய நிலை பெற்றது. இராமாயணமும் மகாபாரதமும் மலையாள மொழியில் எழுதப்பட்டன. அஸ்ஸாமிய மொழியில் பக்திப் பாடலை முன்மாதிரியாகக் கொண்டு சங்கர தேவர் ஒரு புதிய இலக்கிய மரபை உருவாக்கினார். அஸ்ஸாமிய மொழியில் வானியல், கணிதம், யானைகள் மற்றும் குதிரைகளுக்குச் சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்த நூல்கள் படைக்கப்பட்டன. இராமாயணமும் மகாபாரதமும் அஸ்ஸாமிய மொழியில் எழுதப்பட்டன. கிருஷ்ணருக்கும் ராதைக்குமான காதலைச் சித்தரிக்கும் கவிதைகளைக் கொண்ட சைதன்ய வழிபாட்டு முறை வங்காள இலக்கியத்தை மேம்படுத்தியது. குரு அர்ஜுன் சிங் தொகுத்த சீக்கியரின் புனித நூலான குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடவுள் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்ட சீக்கிய குருக்கள், ஷேக்பரித் ஆகியோரின் பாடல்கள் பஞ்சாபி மொழியின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய அடையாளங்களாகும்.
இதே காலப்பகுதியில் தமிழ் இலக்கியப்பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்கள் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தன. மாபெரும் சைவப் புலவரான குமரகுருபரர், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காசி சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், நீதிநெறிவிளக்கம் ஆகிய முக்கிய இலக்கியங்களை இயற்றினார். தாயுமானவர் சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை உள்ளடக்கியப் பக்திப்பாடல்களை இயற்றினார். கிறித்தவ மதப் பரப்பாளர்களான ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டான்ட்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) ஆகியோர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்யத் தொடங்கியிருந்தனர்.
தேசிய அளவில் முகலாயர் உருவாக்கிய பேரரசு, ஆற்றல் மிகுந்த மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையின் சிறப்பான உதவியோடு பல துண்டுகளாகப் பிரிந்து கிடந்தவற்றை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து ஒன்றாக்கியதன் மூலம் இந்தியாவின் மீது என்றுமழியாத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்செயல்பாட்டில் பன்முகப்பட்ட அடையாளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதால் தனித்தன்மை வாய்ந்த ஒரு இந்தியப் பண்பாடு பரிணமித்தது.
உலகத்தின் ஏனைய பகுதிகளில்
அக்பரின் காலமான 1556 முதல் 1605 வரை மாபெரும் அரசர்களின் காலமாகும். அவருக்கு மிக அருகேயிருந்த சமகாலத்தவர் இங்கிலாந்தின் பேரரசியார் எலிசபெத் ஆவர். இக்காலப் பகுதியில்தான் ஷேக்ஸ்பியரும் வாழ்ந்தார். இதே காலத்தில்தான் பிரான்சை போர்பார்ன் வம்சத்தின் முதல் அரசர் நான்காம் ஹென்றியும், பாரசீகத்தை சபாவி அரசவம்சத்தின் மாபெரும் வலிமைமிக்க அரசனான மகாஅப்பாஸும் ஆண்டுவந்தனர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக நெதர்லாந்தின் கிளர்ச்சி இக்காலத்தில் தொடங்கி ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் தொடர்ந்து 1648இல் முடிவடைந்தது.