இந்திய அரசியலமைப்பு - மத்திய-மாநில உறவுகள் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
மத்திய-மாநில உறவுகள்
சட்டமன்ற
உறவுகள்
மத்திய நாடாளுமன்றம், இந்தியா முழுவதற்கும் அல்லது இந்தியாவின் எந்த பகுதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மாநிலங்களுக்கு மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை, மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுகிறது. அவை மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல் என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான பட்டியலில், சட்டமியற்றும் பிரத்யேக அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுள்ளது. மாநில அரசுக்குச் சொந்தமான பட்டியலில் சட்டமியற்றும் பிரத்யேக அதிகாரத்தை மாநில சட்டமன்றம் பெற்றுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீது சட்டமியற்ற அதிகாரம் கொண்டுள்ளன. ஆனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது.
உங்களுக்குத்
தெரியுமா?
தற்போது
அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசு பட்டியலில் 100
துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள்,
மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட
42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து
5 துறைகளை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
அவை, கல்வி, காடுகள்,
எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள்
பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற
அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும்.
ஒரு
மாநில அரசின் நிர்வாக அதிகாரம் அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது மற்றும் அம்மாநிலத்தில்
மட்டுமே தனக்கான சட்டமியற்றும் தகுதியையும் பெற்றுள்ளது. அதே வேளையில்,
மத்திய அரசும், பிரத்தியோக நிர்வாக அதிகாரம் பெற்றுள்ளது.
அவை, அ) நாடாளுமன்றம் தொடர்பான
விஷயங்களில் சட்டங்களை இயற்ற சிறப்பு அதிகாரம், ஆ) மாநில அரசுகள் செய்து கொள்ளும் உடன்படிக்கை (அ)
ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது ஆகியனவாகும்.
இந்திய
அரசியலமைப்பு சட்டம் பகுதி
XII சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள
பிரிவுகள் மத்திய
- மாநில அரசுகளின் நிதிசார்ந்த உறவுகளைப் பற்றி விளக்குகிறது.
மத்திய - மாநில அரசுகள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், பலவகையான வரிகளை விதிக்கும்
அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு
280ன் கீழ் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின்
அடிப்படையில், மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு,
வசூலிக்கப்பட்டு, மத்திய அரசாலும், மாநில அரசாலும் பிரித்துக்கொள்ளப்படுகின்றன.
உங்களுக்குத்
தெரியுமா?
1969இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும்
ஆராய தமிழக அரசு டாக்டர். P.V.இராஜமன்னார் தலைமையின்
கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது.