இந்திய அரசியலமைப்பு - முகவுரை | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
முகவுரை
'முகவுரை' (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம்
அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமைப்பின் அடிப்படைக்
கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது.
இது பெரும் மதிப்புடன் "அரசியலமைப்பின் திறவுகோல்"
என குறிப்பிடப்படுகிறது.
1947ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் ‘குறிக்கோள் தீர்மானத்தின்’
அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி,
சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன. ‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின்
முகவுரை தொடங்குகிறது. இதிலிருந்து, இந்திய
மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் அறியலாம். இந்தியா
ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற,
ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை
கூறுகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே
இதன் நோக்கமாகும்.
உங்களுக்குத்
தெரியுமா?
1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன
முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின்
முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.