இந்திய அரசியலமைப்பு - அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
அரசு
நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு
36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகத்
தனியாக வகைப்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் பொருளடக்கம்
மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதாவது சமதர்ம, காந்திய மற்றும் தாராள்
- அறிவுசார்ந்தவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இந்த
கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது.
ஆனால் இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை. சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே இதன் நோக்கமாகும். இந்திய
அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என டாக்டர். B.R. அம்பேத்கர் இதனை விவரிக்கிறார்.
2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி,
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு,
பிரிவு 21A வின் கீழ் தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம்,
மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood
Care and Education - ECCE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.