நவீனத்தை நோக்கி - கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள் | 11th History : Chapter 19 : Towards Modernity
கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள்
இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர்களைப் போலவே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்திய மக்களின் மத விஷயங்களில் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது. அதற்கான காரணம் போர்த்துகீசியரின் கட்டாய மதமாற்ற முயற்சிகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமென அவர்கள் நம்பினர். அதன் விளைவாகக் கம்பெனி தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமயப் பரப்பாளர்கள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது.
1793 இல் பாப்டிஸ்டுகளான வில்லியம் கேரி, ஜான் தாமஸ் ஆகிய இருவரும் சமயப்பரப்பு நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கில் இந்தியா வந்தனர். சமயப்பரப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் டேனியர்களுக்குச் சொந்தமான கல்கத்தாவிற்கு வடக்கேயுள்ள செராம்பூரில் தங்கினர். கேரி, வேறு இரு சமயப்பரப்பாளர்களான ஜோசுவா மார்ஷ்மேன், வில்லியம் வார்டு ஆகியோருடன் இணைந்து 1799இல் செராம்பூர் மிஷன் எனும் அமைப்பை ஏற்படுத்தினர்.
செராம்பூர் மதப்பரப்பாளர்களே முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப் பணியாளர்கள் (Evangelical Babtist) ஆவர். இவர்களைத் தொடர்ந்து சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த மதப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். செராம்பூர் மதப்பரப்பாளர்களின் வருகைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பல கிறித்தவ மதப் பரப்பு நிறுவனங்கள் போர்த்துகீசியருக்குச் சொந்தமான கோவாவிலும், மலபார் கடற்கரைப் பகுதிகளிலும், சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளிலும் செயல்பட்டனர். மதமாற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது . விரிவான, பெருமளவிலான மதமாற்ற நடவடிக்கைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கின.
மதப் பரப்புக் குழுவினர் சமூகப் பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர். அரசுப் பணிகளில் அவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்றனர். பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்து கொள்வது போன்ற சமூக உரிமைகளுக்காகவும் சமயப் பரப்புக் குழுவினர் போராடினர்.
அனாதைக் குழந்தைகளையும் ஆதரவற்றோரையும் தங்கள் நிறுவனங்களில் தங்க வைத்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி வழங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள் குறித்து கடந்த பாடத்தில் நாம் விவாதித்துள்ளோம். பஞ்சங்களின் போது சமயப் பரப்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தங்குமிடம் வழங்கி உதவி செய்யும் போது மக்களை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. பஞ்சக் காலங்களில் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் கிறித்தவ மதத்தைத் தழுவின. இதைப் போன்ற சூழலில் ஆந்திராவில் மாலா, மடிகா சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் மதம் மாறினர்.
கம்பெனி அரசு இந்தியர்களுக்கு நவீன கல்வியை வழங்குவதில் சிறு முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டது. நீண்ட காலத்திற்கு உள்ளூர் மக்களுக்குக் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பைக் கிறித்தவ சமய நிறுவனங்களே தன்னார்வத்துடன் ஏற்றுக்கொண்டன. மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.