வரலாறு - நவீனத்தை நோக்கி | 11th History : Chapter 19 : Towards Modernity
நவீனத்தை
நோக்கி
கற்றல் நோக்கங்கள்
கீழ்கண்டவை பற்றி அறிதல்
•
பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், ஆரிய சமாஜம் முதலான இயக்கங்களின் சமூக, சமய சீர்திருத்தங்கள்
• விவேகானந்தரின் போதனைகளும், இராமகிருஷ்ண இயக்கமும்
• பிரம்ம ஞான சபை, சத்ய சோதக் சமாஜம், ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம்
• இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்
• தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்த இயக்கங்கள் கிறித்தவ சமய பரப்புக் குழுவின் பங்களிப்பு
அறிமுகம்
இந்தியா பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலப்பகுதியில் ஆங்கில நிர்வாகத்துடனும் ஆங்கில வர்த்தகத்துடனும் நெருக்கமான தொடர்புடைய ஆங்கிலக் கல்வி பயின்ற சிறிய அறிவுஜீவிகளின் கூட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தது. கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் பணிகளும் சிந்தனைகளும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம் வங்காளமாகும். அதனால் பல சீர்திருத்தக் கருத்துக்கள் அங்கிருந்தே உருவாயின. ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய இலக்கியங்கள் ஆகியவை புதிய சிந்தனை அலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தன. அவை மரபு சார்ந்த அறிவுக்குச் சவால் விடுத்தன. பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிச் சிந்தனைகள் மனித இனத்தின் பரிணாமம், வளர்ச்சி குறித்த சிந்தனைகள், அறிவொளியோடு தொடர்புடைய இயற்கை உரிமைகள் கோட்பாடு ஆகிய சிந்தனைகள் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. அச்சுத் தொழில் நுட்பம், சிந்தனைகள் பரவுவதில் முக்கியப் பங்கை வகித்தது.