Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள்

நவீனத்தை நோக்கி - தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள் | 11th History : Chapter 19 : Towards Modernity

   Posted On :  15.03.2022 10:20 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி

தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள்

நாம் முன்னர் பார்த்தபடி வட இந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன.

தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள்

நாம் முன்னர் பார்த்தபடி வட இந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன. கேசவ சந்திர சென் சென்னைக்கு வருகை தந்து உரையாற்றினார். ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) (1823-1874)


இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து தன் இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தார். முறையான கல்வியைப் பெறாத அவர் பெரும் புலமையை வெளிப்படுத்தினார் தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர் மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார். அவருடைய காலத்தில் சைவ சமயமானது திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன. அவர் மதவெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார். உள்ளுணர்வு சார்ந்த இறைநிலைக்கு ஆட்பட்ட அவர் அவ்வனுபவங்களைத் தனது பாடல்களில் பதிவு செய்தார். இதனால் வைதீக சைவ சமயத்தினர் இவர்பால் வெறுப்புக் கொண்டனர். அவர் சத்திய தர்ம சாலை ஒன்றை வடலூரில் நிறுவி ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினார். முக்கியமாக 1860களில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார். தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞான சபை எனும் அமைப்பை நிறுவினார். இதனால் நிறுவனப்படுத்தப்பட்டிருந்த சைவ அமைப்புகளோடு அவர் மோதல் துவங்கியது. இவருடைய சீடர்கள் அவருடைய பாடல்களைத் திரட்டித் திருவருட்பா எனும் பெயரில் 1867இல் வெளியிட்ட போது மோதல் உச்சத்தை எட்டியது. இலங்கையைச் சேர்ந்த வைதீக சைவர்கள் சீர்திருத்தவாதி ஆறுமுக நாவலரின் தலைமையில் இதைத் தெய்வநிந்தனை எனக் கூறி இவருக்கு எதிராக கட்டுரை எழுதும் போரில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் இராமலிங்க அடிகளின் பணி அங்கீகரிக்கப்பட்டது. அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவ சமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளை மதிப்பிழக்கச் செய்தன.

பௌத்தத்தின் மீட்டுருவாக்கமும் அயோத்திதாசப் பண்டிதரும்


முந்தைய பாடங்களில் குறிப்பிட்டபடி பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டு விட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர் பெறத் துவங்கியது. சீவகசிந்தாமணி (1887), மணிமேகலை (1898) ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிகமுக்கியமான ஆளுமை அயோத்திதாச பண்டிதராவார். (1845-1914) ஒரு சுதேசி மருத்துவராகத் தொழில் செய்தாலும் அவர் பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தார். பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஹென்றி ஆல்காட்டின் செல்வாக்கிற்கு அவர் உள்ளானவர். 1890களில் ஆதிதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதி திராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார். தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பிறவற்றையும் மறுவாசிப்பு செய்தார். மக்கள் பெளத்த மதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார். அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர். கோலார் தங்கவயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் இவரது கொள்கையைப் பின்பற்றினர். இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும் லட்சுமி நரசுவும் முக்கியப் பங்கு வகித்தனர். அயோத்திதாச பண்டிதர் 1908 முதல் ஒரு பைசாத் தமிழன் (பின்னர் தமிழன்) என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.

Tags : Towards Modernity நவீனத்தை நோக்கி.
11th History : Chapter 19 : Towards Modernity : Reform Movements in Tamilnadu Towards Modernity in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி : தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள் - நவீனத்தை நோக்கி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி