Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்

நவீனத்தை நோக்கி - இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள் | 11th History : Chapter 19 : Towards Modernity

   Posted On :  15.03.2022 10:15 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி

இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்

1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால் கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்காசிய முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின.

இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்

1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால் கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்காசிய முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின. 1857 எழுச்சிக்கு முஸ்லீம்களே காரணம் என்று ஆங்கிலேயர் சந்தேகித்த நிலையில், முஸ்லீம்களும் காலனிய நவீனத்துவம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீடுகளுக்குள்ளேயே சுருங்கியிருந்தனர். இதன் விளைவாக முஸ்லீம்கள் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியிருந்தனர். இச்சூழலில் ஒரு சில பதிற்றாண்டுகளுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கிடையே சில சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.

அலிகர் இயக்கம் (1875)

அலிகர் இயக்கம் 1875இல் சையது அகமது கானால் தொடங்கப்பட்டது. மேற்கத்திய அறிவியல் கல்விக்கும் குரானின் போதனைகளுக்குமிடையே ஒத்திசைவை ஏற்படுத்த அவர் விரும்பினார். அவருடைய முற்போக்கான சமூகக் கருத்துக்கள் அவருடைய பத்திரிகையான தத்கிப் ஒல்-அக்லுக் (பழக்க வழக்கங்களையும் ஒழுக்க நெறிகளையும் மேம்படுத்துதல்) மூலம் பரப்பப்பட்டது. அலிகர் இயக்கத்தின் கொள்கைகள்

(i) முஸ்லீம்கள் இஸ்லாமின் மேல் கொண்டிருக்கும் பற்றினைப் பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல்.

(ii) பர்தா முறை, பலதார மணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்தது.


சையது அகமத் கானின் கல்வி குறித்த திட்டம் தொடக்கத்திலிருந்தே ஆங்கில வழிக் கல்வியின் சாதக அம்சங்களை வலியுறுத்திக் கூறியது. இயற்பியல் அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்வதன் மூலமும் இருமொழிப் பத்திரிகை ஒன்றை நடத்துவதன் மூலமும் மேற்கத்திய அறிவியலை அறிமுகம் செய்வதற்காக 1864இல் அவர் அறிவியல் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தினார். அதே ஆண்டில் காஜிப்பூரில் நவீனப் பள்ளியொன்றை நிறுவினார். 1868இல் முஸ்லீம் மக்களிடையே நவீனக் கல்வியைத் தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்விக் குழுக்கள் அமைக்கப்படுவதை ஊக்கப்படுத்தினார்.

1869-1870இல் அவர் ஐரோப்பா சென்றபோது இந்திய முஸ்லீம்களுக்காக ஒரு மாபெரும் கல்வி நிறுவனம் என்ற தனது வாழ்நாள் பணிக்கான திட்டத்தை உருவாக்கினார். முஸ்லீம்களிடையே ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்காக 1875இல் அலிகரில் ஒரு நவீன முகமதியப் பள்ளியை தொடங்கினார். இதுவே 1877இல் முகமதியன் ஆங்கிலோ - ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிபெற்றது. அவருடைய மறைவிற்குப் பின்னர் இக்கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது. இதுவே முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் அறிவுஜீவிகளையும் உருவாக்கும் மையமாகத் திகழ்ந்தது

இந்திய முஸ்லீம்களிடையே தாராளவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்காக 1886இல் சையது அகமது கான் ஆங்கிலேய கீழை கல்வி மாநாட்டை (Anglo-oriental Educational Conference) தொடங்கினார். சமயச் சட்டங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அவர் எதிர்த்தார். மாறிவரும் காலச் சூழலுக்கேற்றவாறு பகுத்தறிவுச் சிந்தனையின் வெளிச்சத்தில் குரானில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றார். இந்திய முஸ்லீம் மதத்தை தாராளமாக்கி, புதிய சிந்தனைகளுக்கும் விளக்கங்களுக்கும் ஏற்புடையதாய் மாற்றும் முயற்சியை மேற்கொண்டார். இம்முயற்சியில் வைதீக இறையியலாளர்களின் தீவிரத் தாக்குதல்களை அவர் உடனடியாக எதிர்கொள்ள நேர்ந்தது.

அகமதியா இயக்கம் (1889)

1889இல் மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் ஒரு மாறுபட்ட போக்கை ஏற்படுத்தியது. குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது கூற்று மதத்திற்கு எதிரானது என மைய நீரோட்ட இஸ்லாமியர் கருதினர். ஆனாலும் பலர் அவருடைய கொள்கைக்கு மாறினர். அவருடைய முக்கியப் பணி ஆரிய சமாஜமும், கிறித்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர் கொண்டு மறுத்ததாகும். சமூக நெறிமுறைகளில் அகமதியா இயக்கம் பழமைவாதக் கண்ணோட்டதுடனே பலதாரமணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.

தியோபந்த் இயக்கம் (1866)

தியோபந்த் இயக்கம் முஸ்லீம் கல்வியாளர்களில் வைதீகப் பிரிவைச் சார்ந்தவர்களால் மீட்டெடுப்பு இயக்கமாக இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒன்று குரானின் தூய்மையான கருத்துக்களையும் ஹதீஸ் எனப்படும் மரபுகளையும் பரப்புரை செய்தல். மற்றொன்று அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக ஜிகாத் (புனிதப்போர்) எனும் உத்வேகத்தை உயிரோட்டமுடையதாக வைத்திருப்பது. இவ்வியக்கம் நிறுவன வடிவம் பெற்று சரண்பூருக்கு அருகேயுள்ள தியோபந்த் என்னுமிடத்தில் முகமது காசிம் நாநோதவி (1833-1877), ரஷித் அகமத் கங்கோரி (1828-1905) ஆகியோரால் முஸ்லீம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்குப் பயிற்சி வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. அலிகர் இயக்கத்தின் நோக்கங்களான மேலைக் கல்வியின் மூலம் முஸ்லீம்களின் நலனை மேம்படுத்துதல், ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தல் ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமிய சமூகத்தாரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே.

வாலி அல்லா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த இறையியலாளர்களால் 1867இல் தியோபந்த்தில் இறையியல் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. அவர்களுள் மிக முக்கியமானவர் முகமது காசிம் நாநோதவி ஆவார். கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களும் ஆரிய சமாஜமும் முன்வைத்த வாதங்களுக்கு எதிர் வாதங்கள் வைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இவ்விறையியல் கல்லூரியின் மிக முக்கியமான நோக்கம் பழமைவாதிகளுக்கு இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கும் இறையியலாளர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, சமய, இறையியலை மீள்வாசிப்பு செய்ய வைப்பது என்பனவாகும். ஒரு சமயப் பல்கலைக்கழகமாக தியோபந்த், முஸ்லீம் இந்தியாவில் மட்டுமல்லாமல் முஸ்லீம் உலகத்திற்கே பெருமதிப்புமிக்க நிறுவனமாயிற்று.

நட்வத்-அல்-உலாமா

தியோபந்த்தைக் காட்டிலும் குறைந்த அளவு பழமைவாதப் போக்குடைய அதே சமயம் நவீனகாலத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த இவ்வியக்கம் 1894இல் லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியராலும் வேறுசில அறிஞர்களாளும் உருவாக்கப்பட்டது. நவீன மேற்கத்தியக் கல்வியின் வருகையைத் தொடர்ந்து வந்த இறைமறுப்புக் கொள்கை, லோகாயதவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஃபிரங்கி மஹால்

மூன்றாவதாகப் புகழ்பெற்ற ஆனால் மற்றவற்றைக் காட்டிலும் காலத்தால் மூத்த இச்சிந்தனைப் பள்ளி லக்னோவிலுள்ள ஃபிரங்கி மஹாலில் உருவானது. மற்ற இரண்டைப் போலல்லாமல் ஃபிரங்கி மஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது. மற்றொரு மரபுசார்ந்த இயக்கம் அல்--ஹதித் அல்லது நபிகள் நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.

Tags : Towards Modernity நவீனத்தை நோக்கி.
11th History : Chapter 19 : Towards Modernity : Islamic Reform Movements Towards Modernity in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி : இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள் - நவீனத்தை நோக்கி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி