நவீனத்தை நோக்கி - சீக்கிய சீர்திருத்த இயக்கம் | 11th History : Chapter 19 : Towards Modernity
சீக்கிய சீர்திருத்த இயக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலெழும்பிய பகுத்தறிவு முற்போக்கு அலைகள் சீக்கியரையும் தொட்டுத் தழுவின. 1873இல் சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது. 1) நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல் 2) கிறித்தவச் சமயப்பரப்பாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மீட்டெடுப்பு இயக்கவாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்கொள்வது. அகாலி இயக்கம் சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கமே. அகாலி இயக்கம் சீக்கிய குருத்வாராவை ஊழல் மிகுந்த உதாசி மகந்த் என்றறியப்பட்ட மத குருமார்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டது. அரசு 1922இல் சீக்கியர் குருத்துவாரா சட்டத்தை (1925 திருத்தப்பட்டது) இயற்றியது. அதன்படி சீக்கிய குருத்துவாரா, சிரோன்மணி குருத்தவாரா பிரபந்தக் கமிட்டி எனும் அமைப்பின் கீழ் வந்தது.