நவீனத்தை நோக்கி - சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம் | 11th History : Chapter 19 : Towards Modernity
சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம்
சமூகத்தின் வைதீகப் பிரிவைச் சார்ந்தோரால், சமய - சமூக சீர்திருத்தவாதிகளின் அறிவியல் சித்தாந்த எதிர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் விளைவாகச் சீர்திருத்தவாதிகள் தூற்றப்பட்டனர், அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்களுக்கு எதிராக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, பிற்போக்குவாதிகளால் கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதிலும் எதிர்ப்புகளை மீறி இவ்வியக்கங்கள், அச்சத்தின் காரணமாக இணங்கிச் சென்ற தனிமனிதர்களின் விடுதலைக்குப் பங்களிப்பைச் செய்தன. சமய நூல்கள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டமை, சமய நூல்களில் காணப்படும் கருத்துக்களுக்குப் புதுவிளக்கம் அளிக்கும் உரிமை, சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டமை ஆகியன இறைவழிபாட்டைத் தனிப்பட்ட அனுபவமாக மாற்றின. சிந்திக்கவும் பகுத்தறியவும் தெரிந்த மனித அறிவின் திறமைக்குச் சீர்திருத்தவாதிகள் முக்கியத்துவம் கொடுத்தனர். சமய நடவடிக்கைகளிலிருந்த ஊழல்களைக் களைந்து தங்கள் சமூகமும் மதமும் கீழானவை, பின்தங்கியவை என்ற குற்றச்சாட்டுக்கும் பழிப்புரைக்கும் எதிராகப் பதில்தர தங்களைப் பின்பற்றுவோர்க்கு சீர்திருத்தவாதிகள் உதவினர். உருவாகி வந்த மத்தியதர வர்க்கம் பற்றிக்கொள்வதற்கான பண்பாட்டு வேர்களை இவ்வியக்கங்கள் வழங்கின.