புவியியல் | சமூக அறிவியல் - தகவல் தொடர்பு | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
தகவல் தொடர்பு
தகவல்கள், எண்ணங்கள்
மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்பு
துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.
தகவல்
தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1.
தனிமனித தகவல் தொடர்பு
2.
பொதுத்தகவல் தொடர்பு
தனி
நபர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் தனிமனித தகவல் தொடர்பு என அழைக்கப்படுகிறது.
இது அஞ்சல் சேவை, தந்தி, தொலைப்பேசி, கைப்பேசி, குறுந்தகவல்
பிரதிகள், இணையதளம் மற்றும் மின் அஞ்சல் போன்றவைகளை
உள்ளடக்கியது. தனி மனித தகவல் தொடர்பு அமைப்பு பயனாளிகளுடன் நேரடி தொடர்பை
ஏற்படுத்துகிறது. உலக அளவில் மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு கொண்ட இந்திய அஞ்சல்
துறை 1,55,000 அஞ்சல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,39,000
ற்கும்
மேற்பட்ட தபால் நிலையங்கள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. இந்திய அஞ்சல் சேவை
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவின்
முதல் அஞ்சல் வில்லை 1852 ஆம் ஆண்டு கராச்சியில் வெளியிடப்பட்டது.
அஞ்சல்களை சேகரித்தல் மற்றும் விநியோகம் செய்வது இந்திய அஞ்சல் துறையின் முக்கிய
பணியாகும். இத்துறை விரைவு அஞ்சல் சேவையை 1975இல்
அறிமுகம் செய்தது. 1972ஆம்
ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு
விரைவு தபால் சேவை செயல்படுகிறது. பண அஞ்சல், மின்னனு
பண அஞ்சல், விரைவு தபால், விரைவு
சிப்பஅஞ்சல், வணிக அஞ்சல், ஊடக
அஞ்சல், செயற்கைக் கோள் வழி அஞ்சல், சில்லறை
அஞ்சல், வாழ்த்து அட்டைகள், தகவல்
அஞ்சல், துரித சேவை மற்றும் விரைவான கடவுச்சீட்டு
சேவைகளை அஞ்சல்துறை வழங்கி வருகிறது.
ஆசியாவிலேயே
மிகப்பெரிய தொலைதொடர்பு வலைப்பின்னல் அமைப்பை கொண்டுள்ள நாடுகளுள் இந்தியாவும்
ஒன்று. நகர்ப்புற பகுதிகள் மட்டும் அல்லாமல் கிராமப்புறப் பகுதிகளிலும் STD (உள்நாட்டு
சந்தாதாரர் அழைப்பு) தொலைப்பேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
வெளி
நாட்டில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள ISD முறை (சர்வதேச சந்தாதாரர் அழைப்பு)
பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு சந்தாதாரர் அழைப்பிற்கு நாடு முழுவதும் ஒரு சீரான
அழைப்பு கட்டணமுறை நடைமுறையில் உள்ளது. தொலைப்பேசி என்பது வாய்மொழி தகவல் பரிமாற்ற
முறையாகும். வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் உதவிக்கரமாக உள்ளது. இது உடனடி தகவல்
தொடர்பை வழங்குவதால் மக்களால் முன்னுரிமை அளிக்கப்படும் துறையாக விளங்குகிறது.
கைபேசி, பிரதி அஞ்சல் மற்றும் இணையதளம் போன்றவை
நாட்டில் பயன்படுத்தப்படும் மற்ற தனி மனித தகவல் தொடர்பு சாதனங்களாகும்.
பொதுத்
தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும்.
இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் சிறந்த வழியாகும். பல்வேறு
தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
உருவாக்க பொதுத் தகவல் தொடர்பு பயன்படுகிறது. பொதுத் தகவல் தொடர்பு அமைப்பானது
அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னனு ஊடகங்கள் என்னும் இரண்டு முறைகளில் மக்களுக்கு
தகவல்களை வழங்குகிறது.
இந்திய
வானொலி ஒளிபரப்பு சேவை, மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கை முறை
மாற்றங்களுக்கு காரணமாக விளங்கி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது 1936ஆம்
ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957ஆம் ஆண்டு முதல் "ஆகாச வாணி" எனவும்
பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகிறது. இது கல்வி, செய்திகள்
மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. சட்டமன்ற
மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விழாக்கள் தொடர்பான
நிகழ்வுகளையும் சிறப்பு செய்திகளாக ஒளிபரப்புகிறது.
தொலைக்காட்சி
ஒளிபரப்பு ஊடகம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள பல்வேறு தகவல்களை ஒளி ஒலி காட்சி
மூலமாக வழங்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சி
வலையமைப்பு “தூர்தர்ஷன்” என அழைக்கப்படுகிறது. இது பொதுவான தேசிய திட்ட சேவைகளை
வழங்க தொடங்கிய பின்பு இச்சேவை பின்தங்கிய மற்றும் தொலைதூர கிராமப்புறங்களுக்கு
விரிவடைய செய்யப்பட்டது.
இணையம்
என்பது வலையமைப்பு நெறிமுறைகளை பயன்படுத்தும் கணினி மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய
ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு ஆகும். செய்தி உருவாக்கம், எண்ணங்கள், வேலைவாய்ப்பு
மற்றும் இதர செய்திகளை நேரடியாக பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு சமூக ஊடகமாகவும்
பயன்படுகிறது.
செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும். இந்தியாவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்திதாள்கள் உள்ளன.
செயற்கைக்கோளானது
தொடர்ச்சியாக மிகப்பெரும் பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில்
விளங்குகிறது. செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை
முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு, எல்லை
பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1969ஆம்
ஆண்டு இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத்தொடர்பு
பரிமாற்றத்தில் செயற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில்
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
1.
இந்திய
தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
2.
இந்திய
தொலையுணர்வு செயற்கை கோள் அமைப்பு (IRS)
1983இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது. இன்சாட் வரிசை செயற்கைக்கோள், கைபேசி, தொலைப்பேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும், இராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இன்சாட்
வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1, ஹேம்சாட், எஜுசாட்
(Edusat)
போன்றவை
தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோள்களாகும். டிசம்பர் 19, 2018ஆம்
ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 7A தகவல் தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட
ஒரு செயற்கைக்கோள் ஆகும். ஆகஸ்ட் 30, 1983ஆம்
ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட்
வரிசை செயற்கைக்கோள் ஆகும்.