புவியியல் | சமூக அறிவியல் - இந்தியாவில் இடப் பெயர்வு | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
இடப் பெயர்வு
இடப்பெயர்வு
என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும்.
இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்) மற்றும் சர்வதேச
இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே) என இருவகைப்படும். உள்நாட்டு இடப்பெயர்வு
நாட்டின் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஒரு நாட்டின் மக்கள் தொகை
பரவல் மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. இடப்பெயர்வானது மக்கள் தொகை பரவல்
மற்றும் கலவையின் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது. இந்தியாவில்
இடப்பெயர்வு கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்தை நோக்கி பெருந்திரளாக
காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ப வேலையின்மை
ஆகியவை இடப்பெயர்வுக்கு உந்து காரணிகளாக உள்ளன. நகர்புற பகுதிகளில் தொழில்துறை
வளர்ச்சியின் காரணமாக அதிக வேலைவாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் புலம் பெயர்தலுக்கு
இழுகாரணிகளாக உள்ளன.
மக்கள்
தொகைக் கலவை என்பது பல்வேறு பண்புகளான வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில்
போன்றவற்றை உள்ளடக்கியது. மக்கள் தொகை கலவை பற்றி கற்பது சமூக - பொருளாதார மற்றும்
மக்கள் தொகையின் அமைப்பை அறிய உதவுகிறது.
வயதுக்
கலவை என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை
குறிக்கிறது. நாட்டின் மக்கள் தொகை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக
பிரிக்கப்படுகிறது. இந்தியாவில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் 29.5 சதவிகிதமும், 60 வயதிற்கு
மேற்பட்டவர்கள் 8 சதவிகிதமும் உள்ளனர். ஆதலால் சார்ந்துள்ள
மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 37.5 சதவிகிதமாக உள்ளது. மீதமுள்ள 62.5 சதவிகிதம்
உழைக்கும் மக்கள் தொகையாக உள்ளது.
பாலின
விகிதம் என்பது மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.
நம்
நாட்டில் பாலின விகிதம் எப்பொழுதும் பெண்களுக்கு சாதகமாக இருப்பதில்லை ஏன்?
2011
மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு
940
பெண்களாக
உள்ளது. இது மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக இருப்பதைக்
காட்டுகிறது. கேரள. கேரளாவில் 1084 பெண்களும், புதுச்சேரியில்
1038
பெண்களும்
உள்ளனர். ஆனால் யூனியன் பிரதேசமான டையூ டாமனில் குறைந்த பாலின விகிதம் (618) பதிவாகியுள்ளது.
மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி 7 வயதிற்கு அதிகமான ஒருவர் ஏதாவதொரு மொழியைப்
புரிந்துகொண்டு எழுதப் படிக்க தெரிந்தால் அவர் எழுத்தாறிவு பெற்றவர் ஆவார். இது
மக்களின் தரத்தை அறியும் முக்கிய அளவு கோலாகும். மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு
பெற்ற மக்களின் எண்ணிக்கையே எழுத்தறிவு விகிதம் எனப்படும். இந்தியாவில் கல்வியறிவு
வளர்ச்சியில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகின்றது. 2011 மக்கள்
தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகும்.
இவற்றில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.14% ஆகவும் மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 65.46% ஆகவும்
உள்ளது. இது ஆண்மற்றும் பெண் எழுத்தறிவு விகிதத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதைக்
காட்டுகிறது (16.68%). கேரள மாநிலம் எழுத்தறிவில் 93.9% பெற்று
இந்தியாவின் முதல் மாநிலமாகவும், இலட்சத்தீவுகள் 92.28% இரண்டவதாகவும்
உள்ளது. குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் (63.82%) உள்ளது.
மக்கள்
தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் பொருளாதார
நடவடிக்கையில் பங்கு பெறுபவர்களை தொழிலாளர்கள் என்கிறோம். தொழிலாளர்கள் மூன்று
பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அவை முதன்மை தொழிலாளர்கள், பகுதி
நேர தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அல்லாதோர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு
ஆண்டின் பெரும் பகுதி நாட்களில் பணியாற்றுபவர்கள் முதன்மைத் தொழிலாளர்கள்
எனப்படுவர் (குறைந்த பட்சம் வருடத்தில் 6 மாதம் அல்லது 183 நாட்கள்).
ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்குக் குறைவாக வேலை செய்பவர்கள்
பகுதி நேரத் தொழிலாளர்கள் எனப்படுவர். வேலை செய்யாத மக்கள் தொழிலாளர் அல்லாதோர்
எனப்படுவர்.
மக்கள்
தொகை இயக்கவியல் என்பது மக்கள் தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் தொடர்பான
காரணிகள் குறித்து கற்கும் ஒரு துறையாகும். எதிர் நோக்கும் மக்கள் தொகை மாற்றங்கள்
பற்றி படிப்பது மக்கள் தொகை ஆய்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
இந்திய
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையானது சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல்
மற்றும் சுற்றுச்சூழலில் பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை
பிரச்சனையானது இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மக்கள் தொகை
அதிகரிப்பால் மக்கள் நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை மற்றும் திறனுக்கேற்ற
வேலைவாய்ப்பின்மை, குறைந்த வாழ்க்கை தரம், ஊட்டச்சத்தின்மை, இயற்கை
மற்றும் வேளாண் வளங்களை தவறாக நிர்வகித்தல் ஆரோக்கியமற்ற சுற்றுச் சூழல் போன்ற பெரும்
பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.