இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்காலச் சூழல் மாற்றம் மற்றும் தொடர்ச்சி
அ.
ஒருங்கிணைந்த அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை : முதலில் அண்டை
நாடுகள் கொள்கை
வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை மையமாகக் கொண்ட அண்டை நாடுகள் என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக எப்பொழுதும் இருந்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர முன்னுரிமையை இந்தியா அளித்து வருகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கை இந்த அண்டை நாடுகளை மையம் கொண்டது என்பது பல்வேறு வகையான வளர்ச்சி இலக்குகளை இந்தியா அடைவதற்கு அமைதியான சுற்றுப்புறம் அவசியம் என்ற தெளிவான புரிதலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது அண்டை நாடுகளுக்குத் தேவைப்படும் ஆதரவினை வள ஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சியாக அளித்து வருகிறது. பொருள்கள், மக்கள், ஆற்றல், மூலதனம் மற்றும் தகவல்கள் எளிதாகச் செல்வதை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.
ஆ. அரசதந்திரம் மற்றும் வளர்ச்சியை இணைத்தல்
இந்தியாவின் உள்நாட்டு முக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தொழில்நுட்ப உதவி கிடைப்பதை மேம்படுத்துதல், மூலதனத்தைப் பெறுதல், சந்தையினைப் பெறுதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
வடகிழக்கு இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசியா தொடங்குகிறது. இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் (ASEAN) பாலமாக மியான்மர் உள்ளது. இதன் நோக்கம் ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு, இந்தோ - பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பல்முனை சமநிலையை உறுதிப்படுத்துவதாகும். இக்கொள்கை ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளிடையே ஆக்கபூர்வமான பங்கினை வலியுறுத்துகிறது. நமது கிழக்குக் கொள்கையின் மூன்று முக்கியக்கூறுகள் : வலிமையான நிலப்பரப்பு இணைப்பு, வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானவை ஆகியனவாகும்.
ஈ. பொருளாதார வளர்ச்சி
தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன. விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது. நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை , மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.
ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் (BRICS) ஆகியவற்றில் உறுப்பு நாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும். ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது. இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது. மேலும் ஆற்றல் வளம், முக்கிய இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், அவசியமான கப்பல் வழித்தடங்களைத் திறத்தல் மற்றும் பராமரித்தல், முதலீடுகளை எதிர்நோக்கல், கடல் கடந்த வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நுழைவினைப் பெறுதல் போன்ற பல்வேறு காரணிகளால் முன்னேற்றம் கண்டு வருகிறது.
உள்நாட்டுக்
கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு இடையேயான வேறுபாடுகள்
• உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.
• இது உள் விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.
வெளியுறவுக் கொள்கை
• வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
• வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டதாகும்.