இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961 | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961
'அணிசேரா இயக்கம்' என்ற சொல் 1953 இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி.
கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அணிசேராமை
என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய
சுதந்திரத்தைப் பராமரித்தலாகும். அணிசேரா இயக்கமானது
120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும்
10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு
அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
அணிசேரா
இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்: இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ,
எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும்
கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.
இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த போதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய - சோவியத் ஒப்பந்தத்தின் (20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ) மூலம் இணைந்தது. பின்னர் இந்தியா இராணுவ நவீனமயமாக்கலை மேற்கொண்டது. சீனா 1964ஆம் ஆண்டு லாப் நார் (Lop Nor) என்னுமிடத்தில் மேற்கொண்ட அணு சோதனைக்குப் பதிலடியாக இந்தியா தனது முதல் பூமிக்கடியிலான அணு சோதனைத் திட்டத்தினை 1974இல் பொக்ரானில் நடத்தியது. (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம் / Subterranean Nuclear Explosions Project).
மாறிவரும்
உலகச் சூழ்நிலைகள் வெளியுறவுக் கொள்கை விவரங்களைத் தீர்மானிக்கின்றன. பேரழிவை ஏற்படுத்திய
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்தியா அரசியல் விடுதலை பெற்றது. மேலும் தீவிர வறுமை, எழுத்தறிவின்மை , குழப்பமான சமூக - பொருளாதார நிலைகளிலிருந்து இந்தியா
தன்னை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. இதனால் நமது புதிய நாடு இராணுவக்
கூட்டு மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபட இயலவில்லை . இராணுவக் கூட்டினைத்
தவிர்ப்பது என்பது அப்போது ஒரு விருப்பமாக மட்டுமின்றி ஒரு தேவையாகவும் இருந்தது.
தற்போது அணிசேராமை என்பது நடுநிலைமையாக இருப்பது என்பது பொருள் அல்ல;
பிரச்சனைகளுக்கு முடிவுகளை நாடுகள் சுதந்திரமாகத் தீர்மானிப்பதாகும்.
அணிசேராமை என்பது இராணுவ வலிமை இல்லாது இருத்தல் என்று பொருள் அல்ல.
மோதல்கள் மற்றும் பதட்டங்களைக் குறைப்பதை உறுதி செய்வது எனப் பொருள்படுவதாகும்.
கூட்டு
சேராமையை விலக்கினாலும் கூட இந்தியா அதிக அளவில் தனது இராணுவ அமைப்பைப் பலப்படுத்தவும்
ஒரு அணுசக்தி நாடாகவும் ஆகமுடிந்தது. வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் குறைகளும்
தவறுகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டாலும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையான அணிசேராமை
இன்னும் நடைமுறையில் உள்ளது.
1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு ஒரு புதிய
உலகளாவிய பொருளாதார கொள்கை (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) எழுச்சி பெற்றது.
இந்தியா உலகப் பொருளாதார மன்றத்துடன் (GATT) ஓர்
ஒப்பந்தத்தில் சேர்ந்ததோடு இருதரப்பு, முத்தரப்பு, பலதரப்பு ஒப்பந்தங்களிலும் இணைந்துள்ளது. இந்தியாவின்
அணு ஆயுத சோதனைகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து அச்சுறுத்தும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின.
இந்திய
வெளியுறவுக் கொள்கை பின்வரும் பல்வேறு வகைகளில் மாற்றம் கொண்டது.
• சீனாவுடனான நட்புறவு - கிழக்கு நோக்கு கொள்கை
(1992)
• பொக்ரானில் (ராஜஸ்தான்)
நடைபெற்ற இரண்டாவது அணு சோதனை (1998)
• இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்புத்
தளவாடங்களைக் கொள்முதல் செய்தலுக்கான உறவு
• அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் எரிசக்தி
ஆற்றல் வள தூதரக உறவு
• அமெரிக்காவின் அணு ஏவுகணைப் பாதுகாப்பு
திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்
• சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியாவின்
வாக்களிப்பு
இந்திய
வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான பணி இந்தியாவில் உள்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.
உலகின்
தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்தியா தனது கொள்கைகளைச் சரி செய்துள்ளது. இது நமது மூலதனங்களுக்கான
உள் முதலீட்டை அதிகரித்தல், தொழில்நுட்ப யோசனை, வளர்ச்சிக்கான கருத்துகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உலகின் முன்னணி பொருளாதாரங்களுள்
ஒன்றாக மறுவெழுச்சி அடைதல் ஆகியவற்றிற்கேற்ப வடிவமைத்துள்ளது.
இந்தியா
தற்போதைய உலகளாவிய விவகாரங்களில் ஈடுபட்டு தனது சர்வதேச கொள்கைகள் முக்கிய இடத்தைப்
பெற முனைவதோடு உலக அளவில் தனது இருப்பை உணரச்செய்கிறது. இந்தியா
G-20, IBSA, BRICS போன்ற புதிய உலகக் குழுக்களில் இணைந்துள்ளதானது உலகளாவிய
விவகாரங்களில் பெரிய பங்கை வகிக்க இந்தியாவிற்கு அதிக வாய்ப்பை வழங்குகிறது.
உலகப்
பாதுகாப்புக் குறித்த அக்கறை இந்தியாவின் இராணுவ நவீனமயமாக்கல், கடல்சார் பாதுகாப்பு
மற்றும் அணுசக்திக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன.
இந்தியா
உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கியக் குரலாகவும் வளர்ந்து
வரும் உலகளாவிய கட்டமைப்பில் ஒரு பாலமாகவும் சமநிலைப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவும்
உருவெடுத்துள்ளது.
இந்தியா மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர் கொண்டாலும் பொருளாதாரம்,
அரசியல் மற்றும் போர்த்திறன் சார்ந்த துறைகளில் கொள்கை வகுப்பாளர்களின்
முடிவுகள் இந்தியாவை வலிமை வாய்ந்த சக்தியாக உருக்கொள்ளச் செய்துள்ளன. இத்தகைய சவால்கள் பொருளாதார வளர்ச்சியை நீட்டிக்கச் செய்தல், வளம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவைகளிலும் இராணுவத்தன்மை அல்லாத
பிரச்சனைகளான காலநிலை மாற்றம், எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு,
அரிதான வளங்களுக்குப் போட்டி, உணவு மற்றும் நீர்
பாதுகாப்பு, தொற்று நோய்கள் மற்றும் இடம்பெயர்தல் போன்ற விவகாரங்களிலும்
மிகப்பெரிய வளர்ச்சி மாற்றங்களை அடைந்துள்ளது. இந்த சவால்கள்
எண்ணற்றவையாகவும் கடினமானவையாகவும் இருந்த போதிலும் அவை இந்தியாவின் கொள்கை அமைப்புகளுக்கு
எட்டாதவை அல்ல.