அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - மெட்ரிக் அளவைகளில் இனமாற்றம் | 6th Maths : Term 2 Unit 2 : Measurements
மெட்ரிக் அளவைகளில் இனமாற்றம்
மெட்ரிக் அளவைகளில் உள்ள நீள அலகுகள் அனைத்தும் மீட்டரை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுடன் ஒரு முன்னொட்டு அலகுச் சேர்க்கப்படும்போது பத்தடிமான எண்முறையில் மாற்றம் பெறுகிறது. இதேபோல் எடை மற்றும் கொள்ளளவின் (கன அளவு) அலகுகள் முறையே கிராம் மற்றும் லிட்டரில் குறிக்கப்படுகின்றன. இனமாற்ற அட்டவணையைக் கவனிப்போம்.
• மேலின அலகினைக் கீழின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவைப் பத்தின் அடுக்குகளால் பெருக்க வேண்டும்.
• கீழின அலகினைக் மேலின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவைப் பத்தின் அடுக்குகளால் வகுக்க வேண்டும்.
பின்வரும் இனமாற்று அட்டவணையை அறிவோம்.
மெட்ரிக் அலகு மாற்றங்களைப் படிப்பதற்கு முன், தசம எண்களைப் 10இன் அடுக்குகளால் பெருக்கும் அல்லது வகுக்கும் போது ஏற்படும் தசமப் புள்ளிகளின் இட நகர்வைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு 1:
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.
தீர்வு: மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு = 42.195 கி.மீ.
எடுத்துக்காட்டு 2:
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ. இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.
தீர்வு: தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு = 998 மி.மீ.
1 செ.மீ = 10மி.மீ
1/10 செ.மீ = 1 மி.மீ
= 99.8 செ.மீ
எடுத்துக்காட்டு 3:
ஒரு கொடிக் கம்பத்தின் நீளம் 5 மீ 35 செ.மீ அந்தக் கொடிக் கம்பத்தின் நீளத்தை சென்டி மீட்டரில் குறிப்பிடுக.
தீர்வு: ஒரு கொடிக் கம்பத்தின் நீளம் = 5 மீ 35 செ.மீ
1மீ = 100 செ.மீ
= (5 × 100) செ.மீ + 35 செ.மீ
= 500 செ.மீ + 35 செ.மீ
கொடிக் கம்பத்தின் நீளம் = 535 செ.மீ
எடுத்துக்காட்டு 4: மலர்க்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.
தீர்வு: மலர்க்கொடி வாங்கிய மாத்திரையின் அளவு = 650 மி.கி
1 கி = 1000 மி.கி
1/1000கி = 1 மி.கி
= 650.0 × 1/1000கி
= 650.0/1000கி = 0.65 கி
எடுத்துக்காட்டு 5:
முரளியிடம் உள்ள ஒரு பையின் எடை 3 கி.கி 450 கி. இந்த எடையைக் கிராமில் குறிப்பிடுக.
தீர்வு: முரளியிடம் உள்ள பையின் எடை = 3 கி.கி மற்றும் 450 கி,
1 கி.கி = 1000 கி
= (3×1000 கி) + 450 கி
= 3000 கி + 450 கி
= 3450 கி
எடுத்துக்காட்டு 6: ஒரு கன்றுக் குட்டி 5.750 லி தண்ணீர் குடிக்கிறது. இதனை மில்லி லிட்டராக மாற்றுக
தீர்வு: கன்றுக்குட்டி குடிக்கும் தண்ணீரின் அளவு = 5.750 லி
1 லி = 1000 மி.லி
= 5.750 × 1000 மி.லி
= 5750 மி.லி
எடுத்துக்காட்டு 7: 526 மில்லி லிட்டரை, லிட்டராக மாற்றுக
தீர்வு:
1 லி = 1000 மி.லி
1/1000 லி = 1 மி.லி
526 மி.லி = 526.0 × [1/1000]லி
= 0.526 லி
சிந்திக்க: அதிக எடை கொண்டது எது? 5 கிலோ கிராம் பஞ்சு ; 5000 கிராம் இரும்பு
இவற்றை முயல்க
பின்வருவனவற்றைக் குறிப்பிட்ட அலகுகளாக மாற்றுக.
i. 23 கி.மீ ஐ மீட்டருக்கு 23 கி.மீ × 1000 = 23000 மீட்டர்
ii. 1.78 மீ ஐ செ.மீட்டருக்கு 1.78 மீ × 100 = 178 செ.மீட்டர்
iii. 7814 மீ ஐ கி.மீட்டருக்கு 7814 மீ × [1/1000] = 7.814 கி.மீட்டர்
iv. 8.67 மி.மீ ஐ செ.மீட்டருக்கு 8.67 மி.மீ × [1/10] = 0.867 செ.மீட்டர்
v. 40 மி.கி லிருந்து கி 40 மி.கி × [1/1000] = 0.04 கிராம்
vi. 1550 கி லிருந்து கி.கி 1550 கி × [1/1000] = 1.55 கி.கிராம்
vii. 6.5 கி.கி லிருந்து மி.கி 6.5 கி.கி × 1000000 = 6500000 மி.கிராம்
viii. 723 கி லிருந்து மி.கி 723 கி × 1000 = 723000 மி.கிராம்
ix. 16லி இருந்து மி.லிட்டருக்கு 16 லி × 1000 = 16000 மி.லிட்டர்
x. 1500 மி.லி இருந்து லிட்டருக்கு 1500 மி.லி × [1/1000] = 1.5 லிட்டர்
xi. 2360லி இருந்து கி.லிட்டருக்கு 2360 லி × [1/1000] = 2.36 கி.லிட்டர்
xii. 873லி இருந்து மி.லிட்டருக்கு 873லி × 1000 = 873000 மி.லிட்டர்
உங்களுக்குத் தெரியுமா?
மெட்ரிக் அளவைகள் அல்லாத சில அளவைகள்
மெட்ரிக் அளவைகள் அல்லாத சில அளவைகள்
● 1 அங்குலம் = 2.54 செ.மீ
● 1 மீ = 3.281 அடி
● 1 மீ = 39.37 அங்குலம்
● 1 அடி = 0.305 மீ = 30.59 செ.மீ
● 1 மைல் = 1.609 கி.மீ
● 1 யார்டு = 0.944 மீட்டர்
● 1 டன் = 1000 கி.கி
● 1 குவிண்டால் = 100 கி.கி
● 1 டன் = 10 குவிண்டால்
● 1 சவரன் = 8 கிராம்
● 1 TMC = 28,316, 846, 592 லிட்டர்
1 கி.கி = 1000 கி
1/4 கி.கி = 250 கி
1/2 கி.கி = 500 கி
3/4 கி.கி = 750 கி
TMC–Thousand million cubic feet ஆயிரம் மில்லியன் கன அடி
கீழ்க்காணும் புதிர்க் கணக்கானது ‘கணக்கதிகாரம்’ என்ற தமிழில் எழுதப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது. இது தொலைவு சார்ந்த அலகை மாற்றுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுக் கணக்காகும்
பாடல் (புதிர்)
முப்பத்தி ரண்டு முழம்உளமுட் பனையைத்
தப்பாமல் ஒந்தித் தவழ்ந்தேறிச் – செப்பமுடச்
சாணேறி நான்குவிரற்கிழியும் என்பரே
நாணா தொரு நாள் நகர்ந்து
புதிரின் பொருள் விளக்கம்
32 முழம் உயரம் உடைய பனைமரத்தில், பச்சோந்தி ஒன்று மர உச்சியை அடைய முயல்கிறது. ஒரு நாளைக்கு ஒரு சாண் ஏறி, நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை நாளில் பச்சோந்தி ஏறி முடிக்கும் ?
தீர்வு:
ஒரு சாண் = 12 விரல்கள்
ஒரு முழம் = 2 சாண்கள் = 24 விரல்கள்
பனைமரத்தின் உயரம் = 32 முழம் = 32 × 24 விரல்கள் = 768 விரல்கள்
ஒரு நாளைக்கு ஏறும் தொலைவு = ஒரு சாண் = 12 விரல்கள்
ஒரு நாளைக்கு இறங்கும் தொலைவு = 4 விரல்கள்
சரியாக ஒரு நாளைக்குக் கடக்கும் தொலைவு = 12 – 4 = 8 விரல்கள்
மரத்தின் உச்சியை அடையப் பச்சோந்தி எடுத்துக் கொள்ளும் நாள்கள் = 768 ÷ 8 = 96 நாள்கள்