பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகள் | 6th Maths : Term 2 Unit 2 : Measurements
இயல் 2
அளவைகள்
கற்றல் நோக்கங்கள்:
● கீழின அலகுகளை மேலின அலகுகளாக மாற்றுதலில் (மறுதலை) தசமப் புள்ளியின் இடத்தைப் புரிந்துகொள்ளல்.
● வெவ்வேறு அலகுகள் உள்ள அளவைகளில் நான்கு அடிப்படைச் செயல்களைச் செய்தல்
● கடிகாரத்தில் நேரத்தைக் கண்டறிதல். 12 மணி நேர அமைப்பிலிருந்து 24 மணி நேர அமைப்பிற்கு நேரத்தை மாற்றுதல் மற்றும் அதன் மறுதலையையும் அறிதல்.
● நேர அலகுகளை மாற்றுதல்
● இரண்டு நேர இடைவெளிக்கு இடைப்பட்ட நேரத்தைக் காணல்
அறிமுகம்
கீழ்க்காணும் ஆசிரியர் – மாணவர் கலந்துரையாடலைக் கவனிப்போம்.
ஆசிரியர்: உன் அம்மா பூச்சரம் வாங்கும் போது கவனித்து இருக்கிறாயா? எப்படி அதனை அளக்கிறார்கள்?
மாணவர்: ஆம். ஐயா! பூச்சரம் விற்பவர் தன்னுடைய கைகளைப் பயன்படுத்தி முழத்தில் அளக்கிறார்.
ஆசிரியர்: வாங்கிய பூவை உன் கைகளால் அளந்து பார்த்தால் நீ என்ன கவனிக்கின்றாய்?
மாணவர்: எனக்கு அது 1 முழத்திற்கு அதிகமாக இருக்கும். ஏனெனில் என்னுடைய கை சிறியது.
ஆசிரியர்: ஆம், சரி. உன்னுடைய வீடு, பள்ளியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
மாணவர்: 100 அடி தூரத்தில் உள்ளது, ஐயா!
ஆசிரியர்: கடைகளில் இருந்து அரிசி, பால், துணியை எப்படி வாங்குவீர்கள்?
மாணவர்: அரிசியைக் கிலோ கிராமிலும், பாலை லிட்டரிலும், துணியை மீட்டரிலும் வாங்குவோம்.
ஆசிரியர்: நீ வீட்டுப் பாடம் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வாய்?
மாணவர்: என் வீட்டுப் பாடத்தை வழக்கமாக 1 மணி நேரத்தில் செய்து முடிப்பேன்.
ஆசிரியர்: உயரத்தையும், எடையையும் எப்படி அளக்கிறோம்?
மாணவர்: உயரத்தைச் சென்டிமீட்டரிலும், எடையைக் கிலோகிராமிலும் அளக்கிறோம்.
ஆசிரியர்: பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வேறு அளவைகள் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாயா?
மாணவர்: என்னுடைய தாத்தாவும் பாட்டியும் அவர்களது காலங்களில் பயன்படுத்திய அளவைகளான உழக்கு, படி, மரக்கால், முழம், சாண், அடி, தராசு பற்றிப் பேசுவார்கள்.
ஆசிரியர்: பிறகு ஏன் அந்த அளவைகளுக்குப் பதிலாகக் கிலோகிராம், மீட்டர், லிட்டர் போன்ற அளவைகளைப் பயன்படுத்துகிறோம்?
மாணவர்: எனக்குத் தெரியவில்லை ஆசிரியரே! ஏன், அவற்றைப் பயன்படுத்தவில்லை எனக் கூறுங்கள்.
ஆசிரியர்: உலக அளவில் வணிகம் செய்யும்போது வெவ்வேறு இடங்களில் மக்கள் மாறுபட்ட அளவைகளைப் பயன்படுத்துவது தெரியவந்தது. பழங்காலத்தில் வெவ்வேறு இடங்களில் 'அரசரின் காலடி', 'அரசரின் கை' மற்றும் 'யார்டு' (அரசரின் மூக்கு நுனி முதல் அவரின் கட்டை விரல் வரை உள்ள தொலைவு) போன்றவற்றை, குறைந்த தொலைவுகளை அளப்பதற்குரிய நிலையான அளவுகளாகப் பயன்படுத்தினார்கள். அனைத்து இடங்களிலும், இவை தவிர்க்க முடியாத அளவைகளாகப் பயன்பாட்டில் இருந்தன. இந்த அளவுகள் இடத்திற்கு இடமும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருந்தன. இதனால் உலகம் முழுவதும் நிலையான அளவீட்டு முறையை கொண்டு வர வேண்டியத் தேவை ஏற்பட்டது. 1971ஆம் ஆண்டு நடந்த 'எடைகள் மற்றும் அளவைகள்' பொது மாநாட்டில் பொதுவான மெட்ரிக் அளவைகள் வரையறுக்கப்பட்டன.
அடிப்படை மெட்ரிக் அளவைகள் மீட்டர், லிட்டர், கிராம், வினாடி போன்றன. இவை அனைத்தும் தசம எண் முறையினை (10 அடிமானம்) அடிப்படையாகக் கொண்டவை. மெட்ரிக் அளவைகளை ஓர் அலகில் இருந்து மற்றோர் அலகிற்கு மாற்றுவது எளிது. நீளத்தை அளப்பதற்குக் கிலோமீட்டர், மீட்டர், சென்டிமீட்டர், மில்லிமீட்டர் ஆகியனவும், எடையை அளப்பதற்குக் கிலோகிராம், கிராம், மில்லிகிராம் ஆகியனவும், கொள்ளளவை அளப்பதற்குக் கிலோலிட்டர், லிட்டர், மில்லிலிட்டர் ஆகியனவும் கடைகள், பள்ளிகள், அலுவலகங்கள், போக்குவரத்து மற்றும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கண் சிமிட்டுவதை வினாடியிலும், இதயத் துடிப்பை நிமிடத்திலும் குறிக்கிறோம். ஒருவர் உழைக்கும் நேரத்தை மணிக் கணக்கில் குறிப்பிடுகின்றோம்.
எங்கும் கணிதம்– அன்றாட வாழ்வில் அளவைகள்
துணிக்கடையில் துணியை அளத்தல்
சந்தையில் காய்கறிகளை எடை போடுதல்
பால் விற்பனையாளர் பால் அளத்தல்