இருள் வினை அல்லது C3 சுழற்சி அல்லது உயிர்ம உற்பத்தி நிலை அல்லது ஒளிச்சேர்க்கையின் கார்பன் ஒடுக்கச் சுழற்சி (PCR)
ஒளிச்சேர்க்கையின் உயிர்ம உற்பத்திநிலை என்பது ஒளி வினையின் போது உருவான தன்மயமாக்கும் ஆற்றல்களை (ATP மற்றும் NADPH + H+) பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்ஸைடை கார்போஹைட்ரேட்களாக நிலைப்படுத்தும் வினையாகும். இவ்வினைக்கு ஒளி அவசியம் இல்லை. எனவே இது இருள்வினை என அழைக்கப்படுகிறது. ரிபுலோஸ் 1, 5 பிஸ்பாஸ்பேட் (RUBP) கார்பன்-டை-ஆக்ஸைட் ஏற்பியாக செயல்பட்டு RUBISCO நொதியின் மூலம் CO, நிலைநிறுத்தப்படுகிறது. இவ்வினையின் முதல் விளைபொருளாக 3 கார்பன் கூட்டுபொருள் (பாஸ்போகிளிசரிக் அமிலம்) உருவாவதால் இதற்கு C3 சுழற்சி என்று பெயர். இவ்வினையானது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. M.மெல்வின் கால்வின், A. A. பென்சன் மற்றும் அவர்களின் சகாக்கள் மூலம் 1957-ஆண்டு இந்தக் கார்பன் நிலைநிறுத்தும் வழித்தடமானது கண்டறியப்பட்டது. மெல்வின்
கால்வினுக்கு இதற்காக நோபல் பரிசு 1961-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும் எனவே இந்தக் கார்பன் வழித்தடமானது கண்டறிந்தவர்களின் பெயரால் கால்வின்- பென்சன் சுழற்சி என அழைக்கப்படுகிறது. இருள்வினையாது வெப்பத்தினால் கட்டுப்படக்கூடியது. எனவே இது வெப்ப வேதியியல் வினை என்றும் அழைக்கப்படுகிறது. இருள் வினை மூன்று நிலைகளைக் கொண்டது (படம் 13.16).
1. கார்பன் நிலைநிறுத்தம் (Carboxylation / fixation)
2. கார்பன் ஒடுக்க வினை (Reduction / Glcolytic Reversal)
3. மறுஉருவாக்கம் (Regeneration)
ஏற்பி மூலக்கூறான ரிபுலோஸ்1, 5 பிஸ் பாஸ்பேட் (RUBP) ஒரு 5 கார்பன் கூட்டுப்பொருள். இது RUBP கார்பாக்ஸிலேஸ் ஆக்ஸிஜினேஸ் (RUBISCO) நொதியின் உதவியால் ஒரு கார்பன்-டைஆக்ஸைட் மூலக்கூறுடன் இணைந்து இரு மூலக்கூறு 3 - கார்பன் கூட்டுப் பொருளான பாஸ்போகிளிசரிக் அமிலத்தை (PGA) உற்பத்தி செய்கிறது. (படம் 13.17)
பாஸ்போகிளிசரிக் அமிலத்துடன் பாஸ்பரஸ் சேர்க்கை ATP-யின் மூலம் நடைபெறுகிறது. இதனால் 1,3 பாஸ்போகிளிசரிக் அமிலம் உருவாகிறது. இவ்வினைக்கு PGA கைனேஸ் நொதி உதவுகிறது.
1, 3 பிஸ்பாஸ்போகிளிசரிக் அமிலமானது ஒடுக்கும் ஆற்றல் கூறான NADPH + H+ - ஐபயன்படுத்தி ஒடுக்கம் அடைந்து கிளிசரால்டிஹைடு 3 -பாஸ்பேட்டானது (G-3-P) உருவாகிறது. கிளிசரால்டிஹைடு 3 பாஸ்பேட் அதன் மாற்றியங்களில் ஒன்றான டைஹைட்ராக்ஸி அசிட்டோன் பாஸ்பேட்டாக மாறுகிறது (DHAP).
RUBP மறுஉருவாக்க நிகழ்வின் போது பல்வேறு இடைநிலை பொருட்களான
6 கார்பன், 5 கார்பன், 4 கார்பன் மற்றும் 7 கார்பன் பொருட்கள் உற்பத்தியாகின்றன.
C3 சுழற்சியில் ஒரு கார்பன்டை ஆக்ஸைடை நிலைநிறுத்த 3ATP, 2 NADPH + H+ தேவைப்படுகின்றன.
எனவே 6 CO2 நிலைநிறுத்தத்திற்கு 18 ATP மற்றும் 12 NADPH + H+ தேவைப்படுகின்றன.
இருள்வினையின் ஒட்டுமொத்த வினை
6CO2 + 18 ATP + 12 NADPH + H+ →
C6H12O6 + 6H2O + 18ADP + 18Pi + 12 NADP+
உங்களுக்குத் தெரியுமா?
RUBISCO - RUBP கார்பாக்சிலேஸ் ஆக்ஸிஜினேஸ் நொதியானது இவ்வுலகில் அதிகமாக காணப்படும் புரதமாகும். பசுங்கணிக புரதங்களில் இது 16 சதவிதமாக உள்ளது. CO2 உள்ளபோது கார்பாக்சிலேஸாகவும், CO2 இல்லாதபோது ஆக்ஸிஜினேஸாகவும் செயல்படுகிறது.