பாக்டீரியங்களின் ஒளிச்சேர்க்கை
பொதுவாக நாம் பாக்டீரியங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையை
கடைசி பகுதியாக படித்தாலும் இதுவே முதலில் உருவான மற்றும் பரிணாமத்தில் முதன்மையான
ஒளிச்சேர்க்கையாகும். பாக்டீரியங்களில் பசுங்கணிகம் போன்ற சிறப்பான அமைப்புகள் இல்லை.
இதில் எளிய வகை ஒளிச்சேர்க்கை அமைப்புகளாக குளோரோசோம்கள்
மற்றும் குரோமேட்டோஃபோர்கள் உள்ளன (அட்டவணை
13.6).
பாக்டீரியங்கள் ஒளிச்சேர்க்கையின் போது ஆக்ஸிஜனுக்கு பதிலாக சல்ஃபர் வெளியேற்றப்படுவதை வான் நீல் (1930) என்பவர் கண்டறிந்தார். இதில் எலக்ட்ரான் கொடையாளியாக ஹைட்ரஜன் சல்ஃபைடு (H2S) செயல்படுகிறது. பாக்டீரிய ஒளிச்சேர்க்கையானது நிறமி அமைப்பு I (PS I)-னை மட்டும் பெற்றுள்ளது. மேலும் இதில் வினை மையமாக P870 செயல்படுகிறது. பாக்டீரியங்களில் காணப்படும் ஒளிச்சேர்க்கை நிறமிகளாக பாக்டீரிய குளோரோஃபில் a, b, c, d, e, g மற்றும் கரோடீனாய்டுகள் உள்ளது. ஒளிச்சேர்க்கை பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. பசுங்கந்தக பாக்டீரியங்கள்
எடுத்துக்காட்டு : குளோரோபியம் குளோரோ பாக்டீரியம்.
2. ஊதா கந்தக பாக்டீரியங்கள்
எடுத்துக்காட்டு: தயோ ஸ்பைரில்லம் மற்றும் குரோமேஷியம்.
3. ஊதா கந்தகம் அல்லாத பாக்டீரியங்கள்
எடுத்துக்காட்டு: ரோடோ சூடோமோனாஸ் மற்றும் ரோடோஸ் பைரில்லம்.