ஒளி வினையின் ஒளி வேதி நிலை
இந்த நிலையின் போது எலக்ட்ரான் ஏற்பி மூலக்கூறுகள் வழியாக
செல்லும் எலக்ட்ரான்கள் தன்மயமாக்கும் ஆற்றல் கூறுகளான ATP மற்றும் NADPH + H+ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. நீரைப்பிளப்பதினால் உருவாகும்
எலக்ட்ரான்கள் நிறமி அமைப்பு II இல் இழந்த எலக்ட்ரான்களை ஈடு செய்கிறது.
ஒளிசார் நீர்பகுப்பு ஆக்ஸிஜனை வெளியேற்றும் கூட்டமைப்புடன் (OEC- Oxygen Evolving Complex) தொடர்புடையது. ஆக்ஸிஜனை வெளியேற்றும் கூட்டமைப்பு நிறமி அமைப்பு II இல் காணப்படுகிறது. இதற்கு வினை ஊக்கியாக Mn++ மற்றும் CI- ஆகியவை செயல்படுகின்றன.
நிறமி அமைப்பு II ஒளியைப் பெற்று செயல்படும்போது நீரானது பகுப்படைந்து OH- மற்றும் H+ அயனியாக பிரிகிறது.
இவ்வாறு தோன்றிய இரு OH- அயனிகள் இணைந்து மீண்டும் நீர் மூலக்கூறு, O2 மற்றும் எலக்ட்ரான் ஆகியவற்றை உருவாக்குகிறது. (படம் 13.11).
ஒவ்வொரு நிறமி அமைப்பின் எலக்ட்ரான் கடத்து சங்கிலியும் நான்கு கூட்டமைப்புகளைப் பெற்றுள்ளது.
1. மைய கூட்டமைப்பு (CC): நிறமி அமைப்பு 1-ன் மைய கூட்டமைப்பு 1-ல் P700 வினை மையமாக செயல்படுகிறது. நிறமி அமைப்பு II-ன் மைய கூட்டமைப்பு II-ல் P680 வினை மையமாக செயல்படுகிறது.
2. ஒளியை அறுவடை செய்யும் கூட்டமைப்பு அல்லது ஏற்பி கூட்டமைப்பு (LHC): நிறமி அமைப்பு I-இல் LHC I மற்றும் நிறமி அமைப்பு II-இல் LHC II வும் காணப்படுகிறது.
3. சைட்டோகுரோம் b6f கூட்டமைப்பு: இது PS I மற்றும் PS II வை இணைக்கும் ஒரு நிறமியற்ற புரத கூட்டமைப்பாகும்.பிளாஸ்டோ குயினோன் (PQ) மற்றும் பிளாஸ்டோசயனின் (PC) இரண்டும் இடைநிலை கூட்டமைப்பாக செயல்படுகின்றன. மேலும் இவை எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் எலக்ட்ரானை இயக்கும் அல்லது வழங்கி திரும்பும் (Shuttle) அமைப்பாக செயல்படுகின்றன. PQ வானது PS II விற்கும் சைட்டோகுரோம் b6-F கூட்டமைப்பிற்கு வழங்கி திரும்பும் அமைப்பாகவும், PC ஆனது சைட்டோகுரோம் b6-F க்கும் PS I –க்கும் எலக்ட்ரானை வழங்கி திரும்பும் அமைப்பாகவும் செயல்படுகின்றன.
4. ATP யேஸ் கூட்டமைப்பு அல்லது இணைப்பு காரணி: இது தைலாகாய்டு உறையின் பரப்பின் மீது காணப்படுகிறது. இதில் CF1 மற்றும் CF0 என இரு காரணிகள் உள்ளன. எலக்ட்ரான் கடத்து சங்கிலியின் ஆற்றலை பெற்று, ADP மற்றும் கனிம பாஸ்பேட்டை (pi) ATP ஆக மாற்ற இது உதவுகிறது. (படம் 13.12).