ஒளிச்சேர்க்கை
அலகு (குவாண்டோசோம்)
குவாண்டோசோம்கள் என்பவை ஒளிச்சேர்க்கை செயல்பாட்டிற்கான உருவதோற்ற வெளிப்பாடு அலகுகளாகும். இவை தைலகாய்டு லாமெல்லாக்களின் உட்புறச் சவ்வில் பொதிந்துள்ளன. ஒவ்வொரு குவாண்டோசோம்மும் 180 Å x 160 Å நீள அகலமும் மற்றும் 100A° தடிமனுடையது. 1952 ஸ்டெயின்மேன் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் குளோரோபிளாஸ்ட் லாமெல்லாகளில் காணப்படும் துகள் போன்ற அமைப்புகளை கண்டறிந்தார். பின்னர் பார்க் மற்றும் பிக்கின்ஸ் (1964) இந்த குமிழ் போன்ற துகள்கள் ஒளிச்சேர்க்கையின் செயல் அலகுகள் என உறுதி செய்தார், மேலும் இதற்கு குவாண்டோசோம் என்று பெயரிட்டனர். அவர்கள் கூற்றுபடி ஒரு குவாண்டோசோமில் 230 குளோரோபில் மூலக்கூறுகள் உள்ளன எனக் கருதப்படுகிறது.
ஒளிச்சேர்க்கை அலகு என்பது ஒளிவேதி வினையின் போது ஒரு
ஆக்ஸிஜனை வெளியேற்ற அல்லது ஒரு CO2 மூலக்கூறை ஒடுக்க தேவையான குறைந்தபட்ச
குளோரோஃபில் மற்றும் துணை நிறமிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. (படம் 13.6).
எமர்சன் மற்றும் ஆர்னால்டு
(1932) ஒளிக்கற்றை ஆய்வுகளின் மூலம் ஒரு கார்பன் டை ஆக்ஸைடை நிலைநிறுத்த 2500 குளோரோபில்
மூலக்கூறுகள் தேவைப்படுகின்றன என கண்டறிந்தனர்.
ஒரு கார்பன் டை ஆக்ஸைடை ஒடுக்க அல்லது நிலைநிறுத்த
10 குவாண்டா ஒளி தேவைப்படுகிறது எனில் 2500 இல் பத்தில் ஒரு பங்கான 250 மூலக்கூறுகள்
கொண்டது ஒரு ஒளிச்சேர்க்கை அலகு என கணக்கிடப்படுகிறது. பொதுவாக 200 முதல் 300 குளோரோஃபில்
மூலக்கூறுகளை கொண்ட அலகே ஒரு செயலியல் சார் ஒளிச்சேர்க்கை அலகு எனக்கருதப்படுகிறது.
எமர்சன் கூற்றுப்படி ஒரு ஆக்ஸிஜனை வெளியேற்ற அல்லது ஒரு கார்பன் டை ஆக்ஸைடை ஒடுக்க
8 குவாண்டா ஒளி தேவைப்படுகிறது எனில் குவாண்டம் விளைச்சல் 1/8 or 12% ஆகும்.